காதலர் இருவரும் ஒருவரையொருவர் விரைந்து காணும் விருப்பத்தால், பிரிவின் வெம்மையை நொந்து பாடிய பாடல்கள் இவை. "விதும்பல்"என்கிற சொல்லிற்கு ஆசை, வேட்கை, விரைவு என்று பொருள் சொல்கிறது அகராதி. முதல் ஏழு பாடல்கள் தலைவி கூற்று. பிற மூன்றும் தலைவனின் பெருமூச்சு.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் | (1261) |
அவர் வரவை நோக்கி நோக்கி என் கண்கள் ஒளியிழந்து மங்கி விட்டன. வரும் நாளை எண்ணி எண்ணி விரல்களும் தேய்ந்து விட்டன.
தலைவி அவன் பிரிந்த நாளையும், வருவதாய் சொன்ன நாளையும் கோடுகளாய் குறித்து வைத்திருக்கிறாள். அதை தொட்டுத் தொட்டு ஓயாமல் எண்ணிப் பார்ப்பதால் விரல்களும் தேய்கின்றன.
தலைவிக்கு கணக்கெல்லாம் மறந்துவிட வில்லை. ஆனாலும் நாளிற்கு நாலு முறைகூட எண்ணுவாள். இது காதல். அது அப்படித்தான் செய்யும். அப்படி செய்வதன் மூலம் அதற்கு ஏதோ ஒன்று நிறைகிறது. அது ஒரு வேண்டுதல்.
வாள்- ஒளி
புன்மை( புற்கென்ற)-மங்குதல்
புன்மை( புற்கென்ற)-மங்குதல்
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து | (1262) |
தலைவனை மறப்பேனாயின் அதனால் என் தோள் மெலிந்து வளை கழன்று விடும்.
இதுதான் பொருள் என உரைகள் பலவும் சொல்கின்றன. எனில் இந்தப் பாடலில் புதிதாக ஒன்றுமே இல்லை. ஏற்கனவெ சங்கப்பாடல்களில் பல்லாயிரம் தடவை சொல்லித் தேய்த்ததுதான்.
"இன்று", "மேல்" ஆகிய இரண்டு சொற்களுக்குள் என்னவோ இருக்கிறது. அழகர் "மேல்"என்பதை மறுமையாக்கி, இப்போது மறந்துவிட்டால் மறுமையிலும் தலைவனை அடைந்து இன்புறமுடியாது என்பது போலச் சொல்கிறார். அதுவும் அவ்வளவு பொருத்தமாக இல்லை.
இலங்கிழாய்- ஒளிவீசும் அணிகலன்கள் அணிந்தவளே( தோழியே)
காரிகை- பெண், இங்கு தலைவி
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் | (1263) |
நம்மைக் கூடி இன்புறாது வேறொன்றின் வெற்றிக்காய் ஊக்கத்தோடு கிளம்பிப் போனவர் எப்படியும் திரும்பிவிடுவார் என்றுதான் இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன்.
அவனுக்கு வேறொன்றின் மேல் ஆசை. எனக்கு அவனன்றி வேறு ஆசை இல்லை.
உரன்- திண்மை, வெற்றி
நசை- விருப்பம்
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடு கொடேறும் என்நெஞ்சு | (1264) |
பிரிந்து சென்ற காதலர் மிக்க காமத்தோடு திரும்பி வருவதாய் எண்ணி , மரவுச்சியில் ஏறி நின்று அவர் வரவு பார்க்கும் என் நெஞ்சு.
இப்பாடலுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப்படுகிறது. ஒன்று மேலிருப்பது. இன்னொன்று "காதலன் வரவை எண்ணி மனம் மகிழ்ச்சியில் மரம் போல கிளைபரப்பி மகிழ்ந்து நிற்கிறது"என்பது.
"கோடு"என்கிற சொல்லிற்கு மரக்கொம்பு என்று பொருள்."உச்சி"என்பதாகவும் கொள்ளலாம்.
"கொண்டு"என்பதுதான் "கொடு"என்று குறைந்து விட்டதாகச் சொல்கிறார் அழகர்.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு | (1265) |
என் தலைவனை நான் கண் ஆரக் காண்பேன். கண்டமாத்திரத்தில் நீங்கி ஓடும் என் பசப்பு.
அவன் பிரிந்த நொடியே ஏறிக் கொண்ட பசப்பு. அவன் வந்தவுடன் ஓடிவிடும்.
பசப்பிற்கு மட்டும் தமிழ் தெரியுமானால் இந்தப் பாட்டின் ஓசைக்கே ஓடோடிவிடும்.
கொண்கன்- தலைவன்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட | (1266) |
வருகுவான் ஒருநாள் எம் தலைவன். வந்து பருகுவான், துயரெலாம் ஒழிய என் அழகை.
"இது சத்தியம்!"என்பது போல் ஒலிக்கிறது தலைவியின் குரல். துயர் பெருகப் பெருக ஒரு பக்கம் வெஞ்சினமும் பெருகும். அந்த வெஞ்சினத்துக் குரலாகக் கொண்டால் மேலும் சிறக்கிறது இக்கவிதை.
பைதல் - துயரம்
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின் | (1267) |
தலைவன் வருகையில் நான் அவனோடு ஊடுவேனோ, அல்லது கூடுவேனோ அல்லது ஊடிக் கொண்டே கூடுவேனோ?
தலைவிக்கு இரண்டுமே வேண்டுமாம். பெருமகிழ்வின் திளைப்பில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஊடிக்கொண்டே கூட வேண்டுமெனில் செல்லமாகக் கடித்து வைக்கலாம் . ஆனாலும் பற்கள் ஆழப்பதிந்துவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது ஏனெனில், "டெட்டனஸால் "அன்பு போன்ற சிக்கலான விசயங்களைப் புரிந்து கொள்ள இயலாது.
கண் அன்ன கேளிர்- கண் போன்ற தலைவன்
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து | (1268) |
வேந்தனது செயல் வெல்லட்டும்! நானும் என் மனைவியோடு மாலையில் விருந்தாடட்டும்!
நமது அகத்திணை மரபு பொருட்வயின் பிரிவு, பரத்தையர் பிரிவு என பல்வேறு பிரிவுகளைப் பேசுகிறது. இந்தக் குறளில் உள்ளது "வேந்தற் உற்றுழிப்பிரிவு". அதாவது அரசனின் வினைமுடிக்க அவனது துணையாகப் பிரிந்து செல்வது.
வேந்தனின் வினை முடியாமல் தலைவன் வீடு திரும்ப இயலாது. வினையோ முடிவது போல் தெரியவில்லை. நீண்டு கொண்டே செல்கிறது. அது கண்டு நொந்து தலைவன் தன்னுள்ளே சொல்லிக் கொண்டது இப்பாடல் என்கிறார் அழகர்.
அயர்கம்- நிகழ்த்துதல், கொண்டாடுதல்
ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் வருநாள் வைத்தேங்கு பவர்க்கு | (1269) |
தூரம் போனவரை நெஞ்சிலே வைத்து, ஏங்கி ஏங்கி அழிகிற தலைவியர்க்கு ஒரு நாள் கழிவது எழுநாளின் தொலைவு போல் நீளும்.
"ஏழு"என்பது இங்கு குறிப்பிட்ட எண்ணிக்லையல்ல. பல நாள் என்பதன் பொருளில் வந்தது. அந்தக் காலம் அன்பும் பித்தும் பொருட்டு மாறுபடும். நாட்கள் யுகங்களாய் நீள்வதும் உண்டு.
யுகங்களையே அவ்வளவு "கேஷ்வலாக"கையாள வல்லது காதல்.
சேண்- தூரம்
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் | (1270) |
பிரிவை ஆற்றாது அவள் உள்ளம் முற்றாக உடைந்துவிடுமாயின் பிறகு அவளைப் பெற்று என்ன? பெறாது என்ன?
"பெறின்"என்பதை தலைவியை அடைதல் என்றும், "உறின்"என்பதை அவளைக் கூடுதல் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.
எனவே விரைவில் சென்று அவளை அடைந்துவிட வேண்டும் என்று தவிக்கிறான் தலைவன்.
"வழி மேல் விழி வைத்து"என்பது ஒரு அற்புதமான சொற்றொடர். ஏதும் அற்புதமாக இருந்தால் நமக்குப் பொறுக்காது. அதை சொல்லிச் சொல்லித் தேய்த்து, பழைய இரும்பு கடைக்குப் போட்டு பட்டாணி வாங்கித் தின்றால்தான் நமக்குத் திருப்தி.
படங்கள் உதவி: செந்தில்குமார் நடராஜன்