தலைவன் வீடு திரும்பி விட்டான். பிரிவுத்துயர் தீர இருவரும் கலந்திருந்தனர். வேட்கை மிகுதியால் தலைவன் கொஞ்சம் அதிகமாகக் காதலித்து விடுகிறான். அவளை அதிகம் புகழந்து விடுகிறான். எனவே தலைவிக்கு இந்த "அதிகமான அன்பு"அச்சத்தைத் தந்து விடுகிறது. தலைவன் மீண்டும் நம்மைப் பிரிந்து செல்ல வேண்டித்தான் இப்படி "ஐஸ்"வைக்கிறானா? என்று கலங்கிப் போகிறாள். இந்த அச்சத்தை குறிப்பால் அறிந்து, தலைமகன் அதைத் துடைக்கும் அதிகாரம் இது. வாய்பேச்சு இன்றி இந்த அதிகாரத்தில் யாவும் குறிப்பாலேயே உணர்த்தப்படுகின்றன.
தலைவி, தோழி, தலைவன் மூவரின் கூற்றுகளும் இதில் உண்டு.
தலைவியின் அச்சம் துவங்கி , அது அகல்வது வரை ஒரு நாடகம் போல இந்த அதிகாரத்தை விளக்குகிறார் அழகர்.
கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு | (1271) |
நீ ஒளிக்க நினைத்தாலும் முடியாமல், உன்னையும் மீறி உன் கண்கள் வெளிப்படுத்தும் குறிப்பொன்று உண்டு.
இது தலைவிக்கு தலைவன் உரைத்தது.
தலைவன் பிரிந்துவிடுவானோ என்கிற அச்சம்தான் அவள் மறைக்கும் அந்தக் குறிப்பு.
எப்போதும் கண்தான் காட்டிக் கொடுத்துவிடுகிறது. உயிர் அதில்தான் தேங்கி நிற்கிறது போலும்?
ஒல்லா- இயலாத
கை இகந்து- கை மீறி
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது | (1272) |
என் கண்ணெலாம் நிறைந்திருக்கும், மூங்கில் போன்ற தோள்களையுடைய தலைவிக்கு பெண்மை யாரிலும் அதிகம் போலும்?
நாணத்தால் அந்தக் குறிப்பை தலைவி விளக்கவில்லை. ஆனாலும் தலைவன் அதை ஒருவாறு உணர்ந்து கொள்கிறான்.தலைவியின் இந்த அச்சத்தை தலைவன் தோழிக்கு உணர்த்தும் பாடல்கள் அடுத்து வரும் நான்கும்.
தலைவன் பெண்தன்மை என்று இங்கு குறிப்பது அவள் மடமையை என்கிறார் அழகர். தலைவனுக்கு பிரியும் எண்ணம் ஏதும் இல்லாத போதும் தலைவி அப்படி நினைத்து வருந்தியதால் அது மடமை ஆயிற்று.
காம்பு- மூங்கில்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு | (1273) |
மணியாரத்தில் ஒளிந்துள்ள நூல் போல் தலைவியின் அழகில் ஒளிந்துள்ள குறிப்பொன்று உண்டு.
நூல் தெரியாதது போல அவள் அழகில் புதிதாக தெரிகிற வேறுபாட்டையும் என்னால் உறுதியாக கணிக்க இயலவில்லை
நீயே அவளிடம் கேட்டுச் சொல் என்று தோழியைக் கோருகிறான் தலைவன்.
அவள் அழகில் ஒரு துயரம் ஒளிந்துள்ளது என்கிறான் தலைவன்.இங்கு "அணி" என்பது புணர்ச்சியால் வரும் அழகு என்கின்றன சில உரைகள். புணர்ச்சியின் அழகில் வேறுபாடு என்றால் , அது புணர்ச்சியில் மனம் கலவாததாக இருக்கக்கூடும்.
அணி- அழகு
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு | (1274) |
மலர் மொக்குள் ஒளிந்துள்ள வாசம் போல தலைவியின் சிரிப்பிற்குள் ஒளிந்துள்ள குறிப்பொன்று உண்டு.
தலைவி என்னவோ சொல்ல வருகிறாள் அதற்கு பதிலே சிரித்து வைக்கிறாள்.
"நகை"என்பது புணர்ச்சி இன்பத்தால் வருவது என்கிறார் அழகர். அதாவது புணர்ச்சியின் இன்பத்தில் வருகிற சிரிப்பும் வழமையானதாக இல்லாமல் ஏதோ ஒன்றை ஒளித்து வைத்துள்ளதாகவே தோன்றுகிறது தலைவனுக்கு.
இந்தப் பாடலை அதிகாரப்பிடியிலிருந்து விடுவித்து தனியான ஒரு காதல் கவிதையாக வாசித்துப் பார்த்தால், உங்களை உருக்குலைத்த உங்கள் காதலியின் முதல் சிரிப்பை இதில் காண இயலும்.
"நகைமொக்கு"என்கிற சொற்கட்டை எப்போது எண்ணிப்பார்த்தாலும் அடர்ந்ததொரு நறுமணம் எழுந்து வருவதை உணர முடியும்.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து | (1275) |
செறிந்த வளையல்களை அணிந்த தலைவி குறிப்பாக மறைத்துள்ள துயரைத் தீர்கும் மருந்து ஒன்று உண்டு.
இங்கு கள்ளம் என்பது "உடன் போக்கு". தலைவன் அப்படி பிரிவானாயின் தலைவியும் அவனுடனேயே சென்றுவிட தீர்மானித்துள்ளாள்.
அந்தத் துயரைத் தீர்க்கும் மருந்தென்றால் அது என் பிரியாமைதான். எனவே நான் அவளைப் பிரியமாட்டேன் என்று அவளிடம் உறுதிசொல் என்று தோழியிடம் கோருகிறான் தலைவன்.
ஒளித்துள்ள குறிப்பு என்பதால் "கள்ளம்"என்கிறார்.
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து | (1276) |
அவ்வளவு ஆசையொடு தலைவன் என்னைக் கூடிக் களிக்கும் இந்தச் செய்கையானது அவன் மீண்டும் நம்மைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு பிரிந்து செல்லப்போவதையே குறிப்புணர்த்துகிறது.
இது உன் துயரக் குறிப்புகளுக்கான காரணம் என்ன என்று விளித்த தோழிக்கு தலைவி உரைத்தது.
தலைவன் மிகையாக அன்பு செய்கிறான். மிகையாக அவளைப் புகழ்கிறான். இது ஒரு நடிப்பு என்று படுகிறது தலைவிக்கு. நம்மை புகழ்ந்து மயக்கி அந்த மயக்கத்திலேயே பிரிந்து சென்று விடுவதுதான் அவன் திட்டம் என்று எண்ணுகிறாள்.
தலைவனின் இந்த மிகை அன்பை "கழிபெருநல்கல்"என்கிறது ஒரு பழம்பாடல். அதாவது அன்பை வாரிவாரிக் கொட்டுவது.
பெரிதாற்றி - பிரிவுத்துயரை எப்படியெல்லாம் ஆற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஆற்றுவது. காலமாகவும் இந்தச் சொல்லை வாசிக்கலாம். தலைவன் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. வெகு காலம் உடனிருந்து ஆற்றிவிட்டான். எனவே அவனுக்கு கடமை நினைவு வந்துவிட்டது. அவன் பிரிந்து செல்லவே விரும்புவான்.
அரிதாற்றி- ஆற்றவே முடியாத துயரம் .
பெட்ப- விருப்பம், மிகுதி
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை | (1277) |
தலைவன் நம்மைப் பிரிந்து செல்ல இருப்பதை எனக்கு முன்பே என் வளையல்கள் அறிந்து விட்டன.
பிரிந்து சென்ற பிறகு கழன்று விழுவதல்ல, பிரியுமுன்னே ஒரு நிமித்தம் போல கழன்று விழுகின்றன தலைவியின் வளைகள்.
தணத்தல்- பிரிதல்
தண்ணந் துறைவன்- குளிர்ந்த நீர் நிலைகளை உடையவன்
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து | (1278) |
நேற்றுதான் பிரிந்து சென்றார் எம் காதலர். என் மேனியோ பல நாட்கள் ஆனதின் பசப்பில் வாடுகிறது.
காதலன் பிரியவில்லை. பிரிந்தது போலப் பேசுகிறாள் தலைவி. பிரிந்து விட்டால் இவ்வளவு வாடிப் போவேன் என்று தோழிக்கு உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
நெருநற்று- நேற்று
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃது ஆண்டவள் செய்தது | (1279) |
தலைவி தன் தோள் நோக்கி, தொடி நோக்கி பிறகவள் அடி நோக்கிச் செய்கிறாள் ஒரு குறிப்பு.
இது தோழி தலைவனுக்கு உரைத்தது.
தலைவி அடியை நோக்கியது உடன்போக்கை உணர்த்தியது. இந்தமுறை தலைவனோடு தானும் போய்விடுவேன் என்றது.
"தொடி நோக்கி, தோள் நோக்கி அடி நோக்கி"என்கிற குறிப்பு ரசமானது. ஐநூறு சொற்களை மிச்சப்படுத்திய குறிப்பது.
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு | (1280) |
தலைவி தன் காமநோயினை கண்களாலேயே உணர்த்தி பிரியாமை வேண்டுவது பெண்மைக்கு மேலும் பெண்மை சேர்த்தாற் போன்று உள்ளது.
இது தலைவன் தோழிக்குச் சொல்லியது.
தலைவி, உடன்போக்கை தோழியிடம் கூட வாய்விட்டுச் சொல்லாமல் அடியைக் காட்டி குறிப்பால் உணர்த்தியது என்று இந்தப் பெண்மையை விளக்குகிறார் அழகர். இது தலைவியை ஒரு போதும் பிரியேன் என்று தலைவன் குறிப்பால் உணர்த்தியது என்பதும் அவரது விளக்கம்.
இவ்வதிகாரம் "குறிப்பறிவித்தல்"என்கிற பெயரால் விளங்குகிறது. ஒரு மகாகவி ஒளித்து வைத்துள்ள குறிப்புகள் என்பதால் அதை எதிர்கொள்ள முடியாமல் நமது உரையாசிரியர்கள் பலரும் விழிபிதுங்கி நிற்பதைக் காணமுடிகிறது. அழகர் மட்டுமே இச்சவாலை எதிர்கொள்ள முனைந்துள்ளார். அதுவும் முழுவெற்றி என்று சொல்வதற்கில்லை.
படங்கள் உதவி: செந்தில்குமார் நடராஜன்