ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- திரையாக்கமும் , திரைக்கதையும்
இசை
சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. அதில் “ ஓநாயும்,ஆட்டுக்குட்டியும்” புத்தகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பம்சம் உண்டு.அது “திரையாக்கம்” என்கிற ஒன்றயும் கூடுதலாக தாங்கி வந்திருக்கிறது. இந்த திரையாக்கம் பகுதியில் மிஷ்கினே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்குகிறார். ஏன் இந்தக் காட்சியை வைத்தேன்? அதை ஏன் இந்தக் கோணத்தில் வைத்தேன் ? என்பது உட்பட ஒவ்வொரு காட்சி குறித்தும் விரிவான உரையாடல்களை முன் வைக்கிறார். இப்படி இயக்குனரே தன் திரைக்கதையை விளக்கிச்சொல்லும் புத்தகம் தமிழில் இதுவரை வந்ததில்லையென்றும், இதுவே முதல் முறையென்றும் புத்தகத்தின் முன் அட்டைக் குறிப்பு சொல்கிறது .
எல்லோரையும் போல எனக்கும் மிஷ்கின் அறிமுகமானது “அந்தக் குத்துப்பாட்டின்” வழியேதான். அது குத்துப்பாடல்தான் ஆனால் கூடவே அதில் வேறொன்றும் இருந்தது .” வால மீனு “ பாடலை முதன்முதலாக பார்த்தபோதே அதில் ஒரு வித மயக்கம் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அந்த மயக்கம் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் தொடர்ந்தது. மிஷ்கின் என்னவோ வித்தை காட்டுகிறார். மயக்கு வித்தையது. இந்தப்புத்தகத்தில் அந்த மயக்கம் எங்கிருந்து வருகிறதென்று வித்தைக்காரரே பேசுகிறார்.
ஒரு மேஜிசியன் தன் தொப்பிக்குள் கோழிக்குஞ்சு எப்படி வந்து சேர்கிறது என்பதைச் சொல்வானா? அவனுக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது. அதுவன்றோ அவன் வாழ்வு..அவன் வசீகரம்..அவன் மர்மம்..? எனவே ஒரு மடையனும் அது குறித்து வாய் திறக்க மாட்டான். ஆனால் மிஷ்கின் சொல்கிறார். தொப்பிக்குள்ளிந்து கோழி எடுக்கும் வித்தை போனால் என்ன? கோழிக்குஞ்சிலிருந்தது தொப்பியை உருவும் வித்தையும் தனக்கு தெரியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்தத் துணிச்சல்... அந்தத் துணிச்சலில்தான் அவர் தன் எல்லா ஒப்பனைகளையும் களையத் துணிகிறார். எல்லா இரகசியங்களையும் வெளியரங்கமாக்குகிறார்.
ஒரு படத்தில் ஜீப் ஒன்று உறுமி கிளம்பப் பார்க்கிறது. உறுமுகிறது.... ஆனால் கிளம்ப முடியவில்ல்லை. உறுமுகிறது... ஆனால் கிளம்ப முடியவில்லை. கடைசியில் பார்த்தால் அந்த ஜீப்பை ஒரு நாயகன் தன் ஒற்றைக்காலில் கட்டி நிறுத்தியிருக்கிறான். இதற்கு நிகரான காட்சி ஒன்று இப்படத்திலும் உண்டு. “ SPLENECTOMY OPERATION “ செய்யப்பட்ட ஓநாய் எட்டு மணி நேரத்திற்குள் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. உட்காருவது மட்டுமல்ல. தாவுகிறது.. குதிக்கிறது.. சண்டையிடுகிறது.. “SPLENECTOMY OPERATION” செய்யப்பட்ட ஒருவர் எட்டு நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. நாம் முன்னதை மசாலா படம் என்கிறோம். இந்தப்படத்தை நல்ல சினிமா என்கிறோம்.. ஏன் ? ஒரு வேளை இந்தக்கேள்விக்கான விடை இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
தமிழில் உரைமரபு உண்டு. புரியக் கடினமானவற்றிற்கு உரை சொல்வது நமக்கு புதிதான ஒன்றல்ல. வள்ளுவரைத் தொட்டுணர சில சமயங்களில் பரிமேலழகர் அவசியமாகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கு சிக்கல் என்னவென்றால் படைப்பாளியே தன் படைப்புக்கு உரை சொல்வதுதான். இதில் தன்னைத் தானே பெருக்கிக் காட்டிக் கொள்ளும் “தற்பெருக்கம்”நிகழ்ந்து விட வாய்ப்புண்டு. ஆனால் மிஷ்கின் தன் மனம் திறந்த, பாசங்கற்ற உரையாடல்களின் வழியே இந்தச்சிக்கலை எளிதாக கடந்து விடுகிறார். தன் ஒவ்வொரு காட்சியையும் தானே வியந்து கொள்ள எழுதப்பட்டதல்ல இந்தப் புத்தகம் என்பதை நூலை வாசித்து முடிக்கையில் நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
படத்தின் இறுதிக்காட்சி.. கண் தெரியாத சிறுமியை தன் பின்னால் நிறுத்திக் கொண்டு சண்டையிடும் காட்சி.. மிஷ்கின் சொல்கிறார்...
“ என் கோட்டைக் கழற்றி, கையில் மாட்டிக்கொண்டு அந்தக் குழந்தையை அப்படியே இழுத்து வருகிறேன். நடந்து வருகிற பொழுது, என் கால்களுக்கு அடியில், அந்தக் குழந்தையின் சிறுகால்களும் வரும். சில சமயங்களில் நான் சினிமா எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரா விதமாக சில சிறந்த moments கிடைக்கும்..இந்த moments- ஐ நான் மிகச்சிறந்த cinematic achievement ஆக பார்க்கிறேன்.அதாவது என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னுடைய சுயம் அங்கில்லாமல், தானாக ஒரு சினிமா அங்கே நடந்திருக்கிறது. அதைக் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொள்வது மட்டுமே இங்கு இயக்குனராக என் வேலை. மேலும் இது போன்ற moments -கள் ஒரு இயக்குனரை தலையில் குட்டு வைத்து கீழே உட்கார வைக்கின்றன. ”
திரைக்கதை எழுதி, இயக்கி நடித்திருப்பதால் அதனதன் தனித்துவமான சவால்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார். ஒரு திரைக்கதை ஆசிரியராக எளிதாக எழுதி விட முடிந்ததை, ஒரு இயக்குனராக அவ்வளவு எளிதாக இயக்கி விட முடிந்திருக்கவில்லை. ஒரு இயக்குனராக எளிதாக சொல்லி விட முடிந்ததை, ஒரு நடிகராக எளிதில் நடித்து விட முடியவில்லை.
இப்படத்தில் பெரிதாக மெச்சப்பட்ட காட்சி எதுவெனில், அதுவரையிலான படத்தின் மொத்தக் கதையையும் ப்ளாஷ்பேக் ஏதுமின்றி ஒரு சிறுமிக்கு கதை சொல்லும் வடிவில் சொல்லும் காட்சிதான். அந்தக் காட்சி மக்களுக்கு புரியாது, வேண்டவே வேண்டாம் என்று கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. உண்மையில் இந்தக்காட்சி பற்றி எழுதத்தான் இந்தப்புத்தமே எழுதப்பட்டதாக சொல்கிறார் மிஷ்கின். அந்தக்காட்சி குறித்து மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார். கொஞ்சமாக இங்கு பார்க்கலாம்...
“ என் எழுத்தாள நண்பர்களையும், உதவி இயக்குனர்கள் பத்து பேரையும் இந்தக் காட்சிக்குசம்மதிக்க வைக்கவே முடியவில்லை....
“ எழுத்தாளனுக்கு, கலைஞனுக்கு ஒரு காட்சி எழுதும் பொழுதே அதன் முடிவு தீர்க்கமாக வெளிப்படுகிறது.சிலர் அந்தத் தரிசனத்தைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதனால் அந்தக் காட்சியில் பிழை இருப்பதாக அர்த்தமா ? நான் இன்னமும் உறுதியாக சொல்கிறேன். அந்தக் காட்சி மக்களுக்கு புரியாமல், பிடிக்காமல் போயிருந்தாலும் அதுதான் சரியான காட்சி. அந்தக் கதைக்கு அதுதான் கச்சிதமான கதைசொல்லல் என்பது சத்தியம் “
“ எனக்கு முன்னால் பத்து பக்கங்கள் வசனமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துப்பக்கங்களையும் ஒரு எழுத்தாளராக மிகவும் கவனத்தோடு படிப்படியாக எழுதியிருக்கிறேன்.....”
“ இரண்டு முறை மனப்பாடம் செய்ய முயற்சித்தேன். நான்கு வரிகள் சரியாக சொல்லி முடித்தவுடன் ” அப்பாடா.. இந்த வரிகளை சரியாகச் சொல்லியாயிற்று” என்ற சிந்தனை வருகிறது. அடுத்த வரிகளையும் சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற பயமும் அடுத்து வருகிறது. இப்படியே ஏதாவதொரு சிந்தனை என் மூளையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது என் முகத்திலும் பிரதிபலிக்கிறது.”
“ அந்தப் பத்துபக்க வசனங்களையும் தூக்கியெறிந்தேன். என்னுடைய உதவியாளர்களிடமும் , குழுமியிருக்கிற படப்பிடிப்புக் குழுவினரிடமும் நான் சொன்னது.. “ கேமராவை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எல்லாமே தயாராக இருக்கட்டும். நானும் முன்னால் எனக்கான இடத்தில் அமர்ந்து கொள்கிறேன். கேமரா ஓடட்டும், ஒரே டேக்தான் நடிப்பேன், எவ்வளவு தூரம் அந்தக் காட்சி நன்றாக வருகிறதோ, இல்லையோ, எதுவானாலும் சரி. கதையை ஆரம்பித்துவிட்டு நான்கு வரிகளுக்கு மேல் என்னால் சொல்ல முடியாவிட்டாலும் நான் அப்படியே உட்கார்ந்திருப்பேன். கேமராவை நிறுத்த வேண்டாம். அப்படியே சிறிதுநேரம் இருந்துவிட்டு அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுகிறேன்.. “
“ கவிதைகளைப் குறித்துச் சொல்கிற போது எழுத்தாளனும் படிப்பவனும் கைகோர்த்துக் கொண்டு அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதுண்டு.” Poetry is half completed, and another half is completed dy the reader.அந்தக் கவிதைக்கு ஈடாகத்தான் என் திரைப்படங்களை வைக்கிறேன் .
“ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளியான முதல் நாள் திரையரங்க வாசலில் நின்ற பொழுது படம் பார்த்து முடித்து வருகிற பார்வையாளர்கள் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அந்தக்காட்சியை என் ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டதை அந்த அரவணைப்பில் உணர்ந்தேன். அங்கிருந்தே என் உதவி இயக்குனர்களைத் திரும்பிப் பார்த்து சொன்னேன். “please never never under estimate audience, they are geniuses, they are collective geniuses”
ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது குறித்து சொல்லும் போது...
“ ஒரு படத்தின் இருதயமாக டைட்டிலைப் பார்க்கிறேன்.ஒரு படத்தின் நாகரீகத்தை அந்த டைட்டிலை வைத்து அறிந்து கொள்ள முடியும். ஒரு டைட்டில் அந்தப் படத்தின் இயக்குனரை அடையாளங் காட்டுகிறது. அப்படத்தின் திரைக்கதையைப் பற்றிச் சொல்கிறது. அந்தப் படத்தின் சன்னலாக டைட்டிலே இருக்கிறது....”
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” என்கிற தலைப்பில் இருக்கிற குறியீட்டுத்தன்மை படத்தின் பல காட்சிகளை உருவாக்கிக்கொள்ள உதவியிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓநாய் தன் குடும்பத்துடன் கல்லறையில் ஒளிந்திருக்கும் காட்சியில் போலீஸ் சுடுகிறது. அப்போது “DOWN… DOWN …DOWN “ என்று கத்தும் மிஷ்கினின் குரல் நிஜமாலுமே ஒரு மிருகத்தின் உறுமலாகவே ஒலிக்கிறது. கிளைமேக்ஸ் “ பெரிய வலைபோன்றதொரு பகுதியில் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் மிஷ்கின். ஆம்.. ஓநாய், ஆட்டுக்குட்டி, கரடி, கழுதைப்புலிகள், புலிகள்...என எல்லாமும் அந்த “ UNDER GROUND CAR PARKING “ - ல் ஒன்றிடம் ஒன்று சிக்கிக்கொள்கின்றன.
ஓடும் ரயிலில் இருந்து டூப் போடாமல் குதித்த காட்சி பற்றி பேசும் இடத்தில் தன்னம்பிக்கை வசனங்களை பீய்ச்சியடிக்க ஒரு அரிய வாய்ப்பிருந்தது. ஆனால் மிஷ்கின் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. “துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை..” என்றவர் கர்ஜிக்கவில்லை.
“இரயிலிலிருந்து குதிக்கிற போது எனக்கு தற்கொலை மனப்பான்மை தான் இருந்தது. இந்தக்காட்சியில் மட்டுமல்ல இந்தப்படம் முழுக்கவே எனக்கு தற்கொலை மனப்பான்மை இருந்தது......இந்தக்காட்சியை செய்து முடித்த பின்னர், நன்றாக செய்திருப்பதாக பாராட்டினார்கள்.அதெல்லாம் ஒன்றுமேயில்லை. இந்த மனம், நன்றாக செய்ய வேண்டும் என்ற வேகம், இரயிலிலிருந்து குதிக்க வேண்டும் என்ற தைரியம், எல்லாமே தற்கொலை உணர்ச்சியிலிருந்துதான் எனக்கு கிடைத்தது....”
மனம் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டால் எது சாதாரணம்? எது சாகசம்?
இப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்த காட்சி எதுவெனில், அந்த “ head constable “ வில்லனின் துப்பாக்கிக்கு சல்யூட் அடித்த படி நெடுநேரம் நின்று, பிறகு செத்து விழும் காட்சி. இந்தப்படத்தை காய்ந்தாலும் உவத்தாலும் அந்தக் காட்சி குறித்து சொல்லாமல் இருக்க இயலாது. விரைவில் பணி ஓய்வு பெறப் போகும் வயதில் இருக்கிறார் அந்த கான்ஸ்டபிள். அவர் வாயில் “ ஐயா “ என்கிற சொல்லைத் தவிர வேறு சொல்லே இல்லை போலும். பணியில் சேர்ந்த நாள் முதல் “ஐயா”... “ஐயா”... என்றே சதாகாலமும் தன் உயரதிகாரிகளை பணிந்து வந்தவர் அவர். ஒரு துப்பாக்கி ரவை எல்லா உயரத்திற்கும் உயரமானது. எனவே அதையும் “ஐயா “ என்று வணங்கி நிற்கிறார்.
திரைக்கதை எப்படி எழுதப்பட்டதோ அதே வடிவத்தில் தரப்பட்டிருக்கிறது. படமாக்கும் போது நிகழ்ந்த மாற்றங்கள், எடிட்டிங்கில் போனவை என எதுவும் கத்தரிக்கப்படவில்லை. மிஷ்கின் குறிப்புணர்த்தல்களால் கவனம் பெற்ற ஒரு கலைஞன். க்ளைமாக்ஸில் ஓநாய் ஆட்டுக்குட்டியின் கையில் முத்தமிடுவது போல எழுதியிருக்கிறார். இது குறிப்புணர்த்தலின் அழகியலுக்கு எதிராக இயங்கும் காட்சியாக இருக்கிறது. இக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை.ஆனால் திரைக்கதைப் புத்தகத்தில் இருக்கிறது. இவ்வரியை தன் புகழுக்கு இழுக்கு என்று அவர் கருதியதாகத் தெரியவில்லை. நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய் தம்பி? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். சந்தேகமென்ன... தம்பி கவனமாக கத்தரித்து எரிந்திருப்பான். தன்னை யானை என்று அவர் கருதிக் கொள்ளவில்லை எனவே அடி சறுக்கியதை மறைக்கவுமில்லை.
இப்புத்தகத்தின் குறையென்று சொன்னால் ஒன்றைச் சொல்லலாம். அது இந்தப் புத்தகதிற்கேயான தனித்த குறை கூட அல்ல. பொதுவாகவே “ உரைசொல்லலின்” குறைதான் அது. ஒரு ரசிகராக நாம் நமது சிந்தைனையிலிருந்து, நமது ரசனையிலிருந்து தான் காட்சிகளை உருவாக்கிக் கொள்கிறோம். இந்தப் புத்தகம் இயல்பாகவே அந்த உருவாக்கங்களின் மீது குறுக்கீடு செய்கிறது. ஆனால் நான் பேசியது தான் பேச்சு... புதிதாக நீங்கள் வேறு எதுவும் பேசி விடக்கூடாது என்று கட்டளையிடுவதில்லை. இடவும் முடியாது. மிஷ்கினின் விளக்கத்தை விடுத்து நாம் நமது சினிமாவை இதில் உருவாக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதுமில்லை.
மிஷ்கின் க்ளைமாக்ஸில் நிராதரவாக நிற்கும் அந்தச் சிறுமியின் காலில் விழும் காட்சி.....
“ அந்தக் குழந்தையின் காலில் விழுகிற பொழுது, கேமராவானது குழந்தைக்கு பின்னால் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைக்கு பின்னால் யார் ? அது ஆடியன்ஸ். சொல்லப்போனால் நான் ஆடியன்ஸ் காலிலும் விழுகிறேன். அதற்கு காரணமாக என் நண்பர் ஒருவர் அழகான விளக்கம் அளித்தார்..
“ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் “ என்ற நல்ல படத்தை எடுக்கத் தெரிந்த மிஷ்கின், தப்பான படமாக இதற்கு முன் “ முகமூடி” எடுத்ததற்காக மக்கள் காலில் விழுகிறார்” என்று சொன்னார். இந்தப் பார்வையையும் ஒத்துக்கொள்கிறேன்..”
எல்லாவற்றைறையும் தாண்டி நல்ல சினிமாவைக் காதலிப்பவர்களுக்கும். கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்தப்புத்தகம் ஒரு “நல்வரவு” என்றே சொல்ல வேண்டும்.
சிவாஜி நடித்த “திருவருட்செல்வர்” படத்தின் இறுதிக்காட்சி.... திருநாவுக்கரசர் முதுமையின் வாயில் விழுந்து விடுவார். நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லும் அளவுக்கு தளர்ந்து விடுவார். இந்தக் கோலத்தில் திருக்காளத்தி கோவிலுக்கு வேறு கிளம்பி விடுவார். தரிசனம் முடித்து எதிர்ப்படும் அடியார் ஒருவர் கேட்பார்..
.
“ ஐயா.. நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் அளவிற்கு உடலில் வலுவிழந்துவிட்ட தாங்கள் இவ்வளவு சிரமத்தோடு எங்கு செல்கிறீர்கள்?
“ திருக்காளத்திக்கு.. அவ்வூர் கோவிலில் குடிகொண்டிருக்கும் காளத்தியப்பரைத் தரிசிக்க செல்கிறேன்..”
“திருக்காளத்திக்கா..? தாங்களா? இன்னும் இருபது காத தூரமிருக்கிறதே..? இப்போதே பலவீனமாகக் காணப்படும் தாங்கள் எப்போது அங்கு போய் சேரப்போகிறீர்கள்? அது வரை தங்கள் உடலில் உயிர் இருக்குமா? பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்று விடுங்கள்...”
இதற்கு அப்பர் உறுதியாக மறுத்து விடுவார்..
“ என்னையாளும் காளத்தியப்பரை கண்ணாரக் காணாமல் மாளும் இவ்வுடல் கொண்டு எந்த இடத்திற்கும் மீளேன்...” என்று சொல்லி விடுவார்.
வேறு வழியின்றி அடியார் இப்படி விடை தருவார்..
“ சரி.. உங்கள் மனவலிமை உங்களைக் காப்பாற்றட்டும்..பத்திரமாகப் போய் வாருங்கள்..”
நானும் மிஷ்கினிடம் இதைப் போன்றே சொல்ல விரும்புகிறேன்..
“ சரி... உங்கள் நேர்மை உங்களைக் காப்பாற்றட்டும்.. பத்திரமாக போய் வாருங்கள்..”
பேசாமொழி வெளியீடு - விலை.ரூ: 600
நன்றி : அம்ருதா ஜூலை - 2016