Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all 790 articles
Browse latest View live

ஆண்பால் – பெண்பால் – அன்பால்

$
0
0
                                 

        

            




 “ குடும்பம் எனும் வலிய தாம்புக்கயிற்றால்  இழுத்துக் கட்டபட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான்..”  இது என்னுடைய வரி தான். இந்தக் கட்டுரையை துவங்கும் முன் அந்த நாயிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “ எவ்வளவு புரட்சிக்குறைவாக தோன்றினாலும் உண்மையையே குரை “ ”என்பதையே.

     “ அந்திக்கருக்கலில் ஒரு மனிதன் நடந்து வந்துகொண்டிருந்தான் ” என்கிற வரியை ஒருவர் வாசிப்பதாகக் கொள்வோம். அவர் மனதில் விரியும் “மனிதன் “ நிச்சயம் ஒரு ஆண்தான். நமது மொழி ஆண் மையப்படுத்தப்பட்டது  என்பதை ஒரு எழுத்தாளனாக என்னால் அடிக்கடி உணர முடிந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் ஒரு மிஸ் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து , டீச்சர்ஸ் ரூமில் இருக்கும் இன்னொரு மிஸ்ஸிடம் கொடுத்து வரச்சொன்னார். நான் பள்ளி முழுக்க தேடியலைந்து விட்டு திரும்ப வந்து அதை அவரிடமே கொடுத்து விட்டேன். ஏனெனில் பள்ளியில் “ ஆசிரியர் அறை “ தான் இருந்தது. “ ஆசிரியைகள் அறை “ யை எங்கு தேடியும் காண வில்லை. “ ஆசிரியர் அறை “ என்றால் அங்கு மாஸ்டர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று என் புத்தியில் யார் வந்து புகட்டியது ? “ ர் “ விகுதி ஆண்களுக்கானது என்பதை அந்தச் சிறுவனுக்கு யார் தான் கற்பித்தது ?

    மனிதனுக்கு பதிலாக இன்று “ மனிதி “ எனும் சொல் புழக்கத்தில் வரத்துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  வரவேற்போம்... பயன்படுத்துவோம். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் என யாராலும் “ கற்பழிப்பு “ என்கிற சொல்லிலிருந்து இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லை. அவ்வப்போது வாய் தவறி விடுகிறது. நான் இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதையிலும் “ கற்பழிப்பு”வந்துவிட்டது. பிறகு புத்தி பதறி விழித்தே அதை “ வல்லாங்கு “ என்று மாற்றினேன்.

   இன்று சில ஆண்கள் பெருமையாகப் சொல்லிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு ...
“ நான் என் ஒய்ஃபுக்கு துணியெல்லாங் கூட துவச்சு குடுப்பேன்க..” “
துணி துவைப்பது வரை சரி தான்...  “ துவைத்துக் கொடுப்பேன்... “ என்றால்.... அதாவது துணி துவைப்பது பெண்களின் கடமை. அதில் இவர் பங்கெடுப்பது இவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பொருள். நான் இன்னும் “துணி துவைத்து கொடுப்பவனாகத்தான் “” இருக்கிறேன். சீக்கிரம் “ துணி துவைக்க வேண்டும்””.ஆமாம்.. இரண்டாயிரம் வருஷத்துப் பழக்கம். இரண்டு புத்தகங்களால் அப்படி சட்டென மாறிவிடாது. ஒரு ஆண் தனக்குள் இருக்கும் “ ஆணை “ ” துறப்பது அவ்வளவு எளிதானதல்ல. எழுத்தாளன் ஆன உடனே ஒருவன் “ சமதர்மன் “ ” ஆகி விடுவான் என்று  நம்ப நான் தயாராக இல்லை.

  எல்லோரையும் போலவே எனது உலகின் முதல் பெண்ணும் என் அம்மா தான். எல்லா அம்மாக்களையும் போலவே “தியாகஜோதி “ . எட்டாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அம்மாவின் ஆசிரியர் இப்படி பேசினார்...

 “ நாகரத்தினம் ரொம்ப நல்லா படிக்கிற புள்ளையாச்சே... இப்படி பாதியில நிறுத்தறாங்களே ... என்று எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு...அந்தக் குறை இன்று அவள் மகனின்  மூலமாக தீர்ந்து விட்டது ... “
உண்மையில் அந்தக்குறை அப்படி தீர்ந்து விடுகிற குறையா என்ன ?

  குடும்ப வண்டியை ஒரு மாட்டைப் போல் அவள்தான் இழுத்தாள். வீட்டு வேலை என்று அவள் எனக்குத் தந்தது தண்ணீர் எடுப்பது மட்டும் தான். அதுவும் “ வேறு வழியே இல்லை என்பதால். என் அப்பா ஒரு நாடக நடிகர்.. சமயங்களில்  நாயகன்.. இயக்குனர் வேறு... கவிஞரும் கூட.. எனவே அவர் சைக்கிளில் ரண்டு குடம் போட்டு தண்ணி எடுத்தால் பார்க்க அவ்வளவு பாந்தமாக இருக்காதல்லவா ? எனவே அம்மா என்னைத்தான் குழாயடிகளுக்கு அழைத்துப் போவாள்.  நீண்ட.. மிக நீண்ட வரிசைகளில் நான் நின்றிருக்கிறேன். அது ஒரு ஆக்ரோஷக் களம். களமாடுதல்தான் அது. களம் காண்பதில் எழுபது சதவீதம் பெண்களே . அந்தக் காட்சிகளை இப்போது திரும்ப எண்ணிப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. பல நூறு காளிகளை ஒரே திடலில் வைத்து பல மணி நேரங்கள் பார்த்துக் கொண்டே இருப்பதென்றால்... ஆமாம் சினிமாவில் வருவதைப் போன்றே எழுதக்கூசும் வசைகளால் அவர்கள் திட்டிக்கொள்வார்கள். மாறி மாறி குடுமியைப் பிடித்து தாக்கிக் கொள்வதும் உண்டு. தினமும் இது நடக்காதுதான் என்றாலும் எந்த நொடியும் நடந்து விடும் பதட்டம் எல்லா நொடிகளிலும் விரவிக் கிடக்கும்.

     நமது சீமான்களுக்கும், அறிஞர்களுக்கும் அற்பமான விஷயத்திற்கான உதாரணத்தை தேடுகையில் எளிதாக சிக்குவது  “ குழாயடிச்சண்டை “ தான் . ஆனால் ஒரு பெரும் கூட்டத்தை வெறும் தண்ணிக்கு அடித்துக் கொள்ள வைத்திருப்பதைப் பற்றிய “ கேவல உணர்வு “ நமது ஆட்சியாளர்களுக்கோ, அறிஞர் பெருமக்களுக்கோ நிச்சயமாக இருப்பதில்லை. அவர்களின் “ ஷவர்களில் “ எப்போது திருகினாலும் “ மழை மேகம் “ பொழிகிறது. பிறகு கேலி எழத்தானே செய்யும் ? இளிப்பு வரத்தானே செய்யும் ?

     ஒளவை ,  கே.பி. சுந்தராம்பாள் ( கே.பி.எஸ் ), பேச்சியம்மாள் ஆகிய என் பாட்டி மூவரையும் எப்படியோ என் நினைவு ஒரு சேரக் கட்டி வைத்திருக்கிறது. ஒளவையையும், கே.பி. எஸ்ஸையும்  குழப்பிக் கொள்வது இயல்பானதே. இதற்கிடையில் என் பாட்டி எப்படி நுழைந்தாள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை. என் பாட்டிக்கு கொஞ்சம் கேபிஎஸ் ஜாடை உண்டென்றே  நினைக்கிறேன் அல்லது என் மனம் அப்படி வலிந்து உருவாக்கி வைத்திருக்கிறதா?

  “ உணர்ச்சியில் விளையாடும்
   உன்னதக் கவிச்சிங்கம்
   தளர்ச்சியில் விழலாகுமா ? – மகனே
   சந்தனம் சேராகுமா “ ?
 என்கிற வரிக்கு  “ இந்தச்சிங்கம் “ தலை புதைத்துத் தேம்புவது கேபிஎஸ்ஸின் மடியிலா ?  அல்லது என் பாட்டியில் மடியிலா ?

  தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை– இந்தத்
  தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – எந்தச்
  சபையிலும் உனக்கு நடுக்கமில்லை ...
  சென்று வா ... மகனே ... சென்று வா ...”

என்று வாழ்த்தி வழியனுப்புவது சர்வ நிச்சயமாக என் பாட்டிதான். கேபிஎஸ் வெறுமனே வாயை மட்டும் தான் அசைக்கிறார்.



      





  பெண் உடலாகவும் , மனமாகவும் வலுவற்றவளாகவே தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறாள். என் தங்கையொருத்தி இந்தச் சித்திரங்கள் உண்மையில்லை என்று எனக்குக் காட்டித் தந்தாள். அப்போது அவளுக்கு மீறினால் பத்து வயதிருக்கும்.. விடுமுறைக்கு என் வீட்டுக்கு வந்திருந்தாள். இரவில் தூங்கிக்  கொண்டிருக்கையில் பெரிய தேள் ஒன்று கொட்டி விட்டது. கதறித் துடித்தாள்.. வீறிடலில் வீடு ஒலி வாங்கியது.. அவ்வளவு வலிக்கும், கண்ணீருக்கும் இடையே அவள் சொன்னது எனக்கு இன்றும் வியப்பளிப்பதாகவே இருக்கிறது ...
 “ நல்ல வேளை... எனக்குப் பதிலா சங்குப் பாப்பாவ கொட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்... “
சங்குப்பாப்பா என்று அவள் சொன்னது அவளை விட இரண்டு வயது குறைந்த என் உடன் பிறந்த தங்கையை. இருவரும் ஒன்றாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

      அதே உறுதியுடன் , அதே தீரத்துடன் பின்னாளில் அவள் சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்து தன் காதலை நிறைவேற்றிக் கொண்டாள். பார்க்க பூஞ்சையாக , தொட்டால் ஒடிந்து விடும் தேகத்துடன், பூனைபோல் திரியும் அவள்தான் என் உறவுகளிலேயே சாணிப் பொடிக்கு பயப்படாதவள். மற்றவர்களெல்லாம் சாவுக்கு பயந்து செத்தவர்கள். நான் ஒரு முறை அதைத் திறந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவு பச்சையாக , ஆக்ரோஷமாக மின்னியது.  “ பிறகு பார்த்துக் கொள்ளலாம்... “ என்று மூடி வைத்து விட்டேன்.

        நமது கனவுகள் பெருத்துப் போய்விட்டன. அதைக் கண்டு மகிழ நமக்கு நிறைய காசு வேண்டி இருக்கிறது. அப்பா ஆபிஸ் போய் அம்மா வீடு பெருக்கிய காலம் முடிவடைந்து விட்டது. அழுக்குப் பேக் ஒன்று அம்மாக்கள் தோளிலும் ஏறி விட்டது. தவிர, அம்மா ஆபிஸ் போக அப்பா டாஸ்மாக் போகும் குடும்பங்களையும் நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.

        அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் பேக்கை ஒரு மூலையில் ஏறிந்து விட்டு படுக்கையில் விழுவதோடு ஆணின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் பணி வீட்டிலும் தொடர்கிறது. சமயங்களில் நான் தெருமுனையிலேயே சட்டைப் பொத்தான்களை கழற்றத் துவங்கி விடுவேன். ஒரு பெண் இதற்கு எல்லாக் கதவுகளையும் எல்லா ஜன்னல்களையும் அடைக்க வேண்டி இருக்கிறது.
 
           அலுவலகத்திலிந்து வீடு வந்தததும்  சற்றே தலைசாய்த்திருக்கும் என் மனைவி 
 “ ஒரு பத்து நிமுஷங்க.. எந்திருச்சு சமச்சர்றேன்,,, “ என்று சொல்லும் போது உண்மையில் என் முகத்தை எங்கு வைத்துக் கொள்வதென்று எனக்குத் தெரிவதில்லை.
“ ஒண்ணும் அவசரமில்லை... மெதுவா எந்திரி...”என்று தாராளம் காட்டுவேன் தான் என்றாலும் அடுப்படியை பொறுத்தமட்டிலும் எனக்கு தண்ணீர் சுட வைப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே உண்மை. மற்றபடி நான் அங்கு அதிகம் புழங்குவதில்லை. கரப்பான்பூச்சி தொந்தரவு அதிகமானால் போய் அடித்து விட்டு வருவேன்..அவ்வளவு தான்..

  “ கரம் மசாலா...சின்ன பாக்கெட்..” எங்க சொல்லுங்க... கரம் மசாலா..” என்று என் மனைவி விளக்கும் போது எனக்கு ஆத்திரம் வரத்தான் செய்கிறது.
“ என்ன இது...பார் போற்றும் ஒரு கவிக்கு மசாலா பாக்கெட் வாங்கத் தெரியாதா என்ன ?
என்றாலும், சமயங்களில் அவள் பயந்தது போலவே வேறு மசாலாவுடன் தான் வீடு போய் சேர்கிறேன்.

  நமது குடும்ப அமைப்பின் மீது , அதன் ஆகச் சிறந்த அங்கத்தினனாக இருக்கும் பட்சத்திலும் எனக்கு நிறைய புகார்கள் உண்டு.  இழுத்துப் பிடித்து சேர்த்துக் கட்டும் நமது திருமண பந்தங்களின் மீது நிறையக் கேள்விகள் உண்டு...

 இந்தச்செருப்பைப் போல்
 எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
 இந்தக் கைகுட்டையைப் போல்
 எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
 இந்தச்சட்டையைப் போல்
 எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
 அவர்கள் சார்பில்
 உங்களுக்கு நன்றி
 இத்துடனாவது விட்டதற்கு.

   
ஆத்மாநாமின் இந்தக் கவிதையை நமது குடும்ப அமைப்பை நோக்கிச் சத்தமாக சொல்லலாம்.

    பெண் மட்டுமல்ல..ஆணும்தான் அந்த எலிப்பொந்தில் வகையாக மாட்டிக் கொள்கிறான். பிறகு ஆயுள் முழுக்க அதற்குள்ளேயே ஓடிச் சாகிறான். நமது எலிகளுக்கு அதிலிருந்து எப்படி வெளி வருவது என்று தெரிவதில்லை. வெளியே வந்தால்  உயிர் வாழ முடியுமா ? என்கிற அச்சமும் விடுவதில்லை.  எனவே தான் “ அந்தப் பொந்துகள் “ இன்னும் வாழ்வாங்கு வாழ்கின்றன. 

  இவ்வளவு ஊழல்களுக்குப் பிறகும், இவ்வளவு கிட்ணி திருட்டுகளுக்கு பிறகும் “மருத்துவர் “ என்கிற சொல்லின் மீது இன்னும் கொஞ்சம் புனிதம் ஒட்டித்தான் கிடக்கிறது. ஆனால் ஒரு பெண் மருத்துவரானால் என்ன ? ராக்கெட் ஏவினால் என்ன?  பெண் வெறும் பெண்தான் நமது ஆண்களுக்கு.

  ஒரு மருத்துவர்... அதுவும் பொறுப்பு மருத்துவ அலுவலர்.. அவரின் கீழே சுமார் நூறு பேர் பணிபுரிகிறார்கள்.. அந்த மருத்துவர் நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவர் கணவன் உள்ளே நுழைகிறார்... அவரை அத்தனை பேர் மத்தியிலும் அடித்து இழுத்துச சென்றார்.. காதணிகள் அறுந்து ரத்தம் சொட்டியது.. பணியாளர்கள் நூறு பேராலும் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.. ஏனெனில் அடிப்பது அவளின் ஆண். அவன் தாராளாமாக அடிக்கலாம். அது அவர்கள் குடும்ப பிரச்சனை.. போகிற வழியில் தாறுமாறாக வண்டியோட்டி அவள் வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்து விட , அவன் திரும்பி வந்து இரத்தச் சிராயப்புகளுடன் இருந்தவளை

  “ ஒழுங்காக...உட்கார கூடத் தெரியாதா சனியனே...”? “ என்று திரும்பவும் அடித்தான்.
 நமது தலைவியர் மட்டும் என்ன சாதரணர்களா ? காலையில் தலைவன் குடிக்கும் காபியில் கொஞ்சமாக விஷத்தை கலந்துவிடுகிறார்கள். அவனும் அதை சப்புக் கொட்டிக் குடித்து விடுகிறான்.

  நமது குடும்ப அமைப்பை இன்னும் சற்று தளர்த்த வேண்டுமா ? அல்லது முற்றாக மாற்ற வேண்டுமா  ? அப்படி மாற்றி அமைக்கப்படும் அமைப்பு வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் எவ்வளவு ? அந்த புதிய அமைப்பு எம் மனிதனின், மனிதியின் முகங்களில் ஒளி மலரை மலர விட்டு விடுமா ? என்பது குறித்தெல்லாம் என்னிடம் தீர்க்கமான பதில்கள் இல்லை. “ வலிக்கிறது “ என்பது மட்டும் தெரிகிறது. மருந்து என்ன ? என்பதை “ மருத்துவர்கள் “ தான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை அலுவலக சகா ஒருவரிடம் சொன்னேன்..

  “ சார்.. நமது விலாஸ்கள் மட்டும்  இன்னும் கொஞ்சம் அன்போடு, இன்னும்  கொஞ்சம் சுத்தமாக,  இன்னும் கொஞ்சம் முறுவலாக , புளிக்காத மாவில் வயிற்றுக்கு ஊறு செய்யாத தோசைகளை தயாரிக்கத் துவங்கி விட்டால் போதும்..நமது குடும்பங்கள் ஆட்டம் கண்டுவிடும்....
அதற்கு அவர் சொன்னார்...

நல்ல பகடி ... நீங்களே சிரித்துக் கொள்ளுங்கள்... தம்பி, ஒரு புல்டோசரே எங்கிருந்து துவங்குவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் இடம் அது ...
வீடு பெறாவண்ணம் யாப்பதை வீடென்பார் “ என்கிறது நமது மகாகவியின் வரியொன்று.

   காம சூத்திரமும், கொக்கோக சாஸ்திரமும் நடம் பயின்ற நாட்டில் இன்று நிலைமை சரியில்லை.வயதிற்கு வந்த பெண்ணை வீட்டில் தனியாக விடுவது எப்படி? “  என்பது முந்தைய தலைமுறையினருக்கான கவலையாக மாறிவிட்டது.  இன்றோ யோனியுடன் ஒரு உயிர் பிறந்து விட்டால் அடுத்த கணத்திலிருந்து அதற்குப் பாதுகாப்பில்லை என்பதே நமது அவலம். இரண்டு வருடச் சிசவை வல்லாங்கு செய்துவிட்டதாக வருகிற செய்திகளை எப்படி ஜீரணித்துக் கொள்வதென்றெ தெரியவில்லை. உறுப்பைச் சிதைப்பது மட்டுமல்ல... ஒரு ஆட்டை துண்டாக்குவது போல் கூறு கூறாக அறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சாதாரணமாக மூடி வைத்து விடுகிறார்கள்.

  சென்னை புத்தக்காட்சியில் ஒரு  நண்பரைச் சந்தித்தேன். அவர் “ முசுடு “ என்று பேர் எடுத்து வைத்திருக்கும் ஒரு பிரபலம்.. இது மூன்றாவது சந்திப்பு.. முதல் இரண்டு சந்திப்புகள் கூட அவ்வளவு நீண்டதல்ல. அவர் வாசகர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். கிடைத்த இடைவெளியில் கட்டிக்கொண்டோம். அங்கு ஒரு இருக்கை தான் இருந்தது. அதில் அவர் மகள் அமர்ந்திருந்தாள். அவளை எழச் சொல்லி விட்டு என்னை அதில் அமரச் சொல்லி வற்புறுத்தினார்.. நான் மறுத்து மறுத்துப் பார்த்து விட்டு கடைசியாக அமர்ந்து கொண்டேன். பிறகு அவர் தன் மகளிடம் சொன்னார்...

   “ நீ வேணா அங்கிள் மடில உட்கார்ந்துக்கடி..

  அவர் மகள் அநேகமாக பத்தாவதோ, பண்ணிரண்டாவதோ படிப்பவளாக இருக்க வேண்டும். அவ்வளவு அன்பிற்கு , அவ்வளவு நம்பிக்கைக்கு நான் பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. நல்லவேளையாக அம் மகள் அப்படி அமராததின் வழியே என் கண்ணீரைத் தடுத்தாட் கொண்டாள். ஆண்பால் – பெண்பால்- அன்பால் “ பற்றி அவரிடம் தான் – அவனிடம் தான் - கேட்க வேண்டும்.  அவன் “ அன்பால்- அன்பால்- அன்பால் “ என்று சொல்லக்கூடும். “ நல்லார் ஒருவர் உளரேல்.. “ என்பதன்றொ நம் கவி மரபின் பித்து. என்னடி என் பாட்டி... ! பித்தச்சி..! போகிற போக்கில் எப்படியொரு வரியை எழுதித் தொலைத்து விட்டாய் ! எவ்வளவு பெரிய மடமையிலிருந்து விளைந்தெழுந்த செழுங்கனி இவ்வரி.

   “காதல்” ....   இந்த ஒற்றைச் சொல்லை நமது எழுத்தாளர்கள், கவிஞர்கள், தத்துவாசிரியர்கள், ஆன்மீக யோகிகள், மருத்துவ வல்லுநர்கள் ... எனப் பலரும் வேறு வேறாக விதவிதமாக விளக்கி விட்டார்கள். ஆயினும் அது ஒற்றைச் சட்டகத்திற்குள் ஒழுங்காக ஒடுங்கி அமர மாட்டேன் என்கிறது. நாம் என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது விஷமமாக புன்னகைக்கிறது. விலக்க விலக்க அதன் திரைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

 “ வெறும் காமம்.. நாம் பயப்படும் படி வேறொன்றுமில்லை...என்பது காதலில் இருந்து தப்ப முயல்பவர்கள் கைக்கொள்ளும் எளிய வழிமுறை. இரயில் முன் பாய்ந்து இரண்டு துண்டாகப் போவதை வெறும் காமம் என்று எப்படி சுருக்குவது ? இச்சை தான் பிரதானமெனில்  கள்ளக்காதல் ஜோடிகள் ஏன் கட்டியணைத்த படியே விடுதி அறைகளில் விஷமருந்தி மடிகிறார்கள் ?

     நமது சங்கப்பாடல்களில் கண்ணீர் கொட்டிக் கிடக்கிறது..அதிகமும் தலைவியின் கண்ணீர்.தலைவன் பொருட்வயின் பிரிந்து விடுகிறான். தலைவி அவன் போன திசை பார்த்து யுகயுகமாய் காத்திருக்கிறாள். கார் வருகிறது... காதலன் வர மாட்டேன் என்கிறான். நார் இல் மாலை “... அதாவது அன்பற்ற மாலை என்று மாலைப் பொழுதை தூற்றுகிறாள்.  பிரிவுடை இராத்திரி நீண்டு கொண்டே போக “ நெருப்பு வட்டமான நிலா “ உச்சியில் நின்று எரிக்கிறது. ஏக்கம் தாளாது அவள் மேனியில் பசலை ஏறுகிறது.  “ நிலம் புடை பெயரினும், நீர் திரிந்து பிறழினும்..நாடனொடுகொண்ட நட்பு மாறவே மாறாதென்று உறுதி காத்திருக்கிறாள்.

  அன்று தொடங்கிய “ ஊடல் “ இன்றும் நம் காதல்களை அழகாக்கிய படியே தொடர்கிறது. தன் காதலை ஏற்றுக்கொள்ள மன்றாடிய படி , காதலியின் வீதி வழியே பனங்கருக்குக் குதிரையில் “ மடலேறி“ வந்து ,  தன்னைத் தானே வதைத்துக் கொண்டான் தலைவன். இன்று அவன் “ அமிலப்புட்டிகளுடன் “ அலைவது தான் ஆகக் கொடூரமானது.


   ஒரு கவிஞனின் எல்லாப் பித்தலாட்டங்களையும் பொறுத்துக் கொண்டு  எப்போதும் அவனை ஏந்திப்பிடிக்க எல்லாப் பருவத்திலும் ஒருத்தி இருக்கிறாள். அவள் பொருட்டே அவன் காணி மும்மாரி காண்கிறது.


 கட்டுரைக்கு இடையே பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று பழந்தமிழ்ப் பாடல்கள்...


  1. “ நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
    விலங்குஇரு முந்நீர் காலின் செல்லார்;
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்
    கெடுநரும் உளரோ ? நம் காதலோரே. ”
              ( முந்நீர்- கடல் )
                         ( வெள்ளி வீதியார்- குறுந்தொகை )
நம் காதலர் நிலத்தை தோண்டி அதனுள்ளே புகுந்து விட மாட்டார். வானத்தில் ஏறி விடவும் மாட்டார். பெருங்கடலை காலால் தாண்டியிருக்கவும் மாட்டார். நாடுகள் தோறும் அதிலுள்ள ஊர்கள் தோறும் அதிலுள்ள வீடுகள் தோறும் தேடிச்சலித்தால் அவர் சிக்காது போய் விடுவாரா என்ன ?

2.              கபிலர் - கலித்தொகை

          நீயும் தவறில்லை , நின்னை புறங்கடைப்
          போதர விட்ட நுமரும் தவறிலர்
          நிரைஅழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்
          “பறையறைந் தல்லது செல்லற்க” என்னா
          இறையே தவறுடையான்.
                    

   உன் மீதும் தவறில்லை. உன்னை வெளியே விட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை. மதம் கொண்ட யானையை நீராட அனுப்பும் முன் அது வரும் செய்தியை பறையறைந்து எச்சரிப்பது போல,  நீ வரும் செய்தியை முன் கூட்டியே அறிவிக்காத மன்னனே தவறுடையவன்.

3.   
      கச்சுஇருக்கும் போது கரும்பானேன்: கைக்குழந்தை
  வச்சுஇருக்கும் போது மருந்தானேன்: நச்சுஇருக்கும்
  கண்ணார் கரும்பானார்: காணவும் நான் வேம்பானேன்
  அண்ணாமலை அரசுக்கு.
                 (  நச்சுஇருக்கும்கண்ணார்- பரத்தை )
                            
                    ( சுப்ரதீபக் கவிராயர் – தனிப்பாடல் திரட்டு ) 

அண்ணாமலை எனும் அரசனை நோக்கி அவன்தலைவி பாடியது போல் பாடப்பட்டது....
செழித்த மார்பை கச்சிட்டுக் கட்டிய இளம்பருவத்தில்  நான் கரும்பை போல் இனித்தேன். ஒரு குழந்தையை பெற்று என் உடற்கட்டு சற்றே தளர்ந்திருக்கும் தற்போதோ மருந்தைப் போல் கசக்கிறேன். நஞ்சை விழிகளில் தேக்கித் திரியும் பரத்தையர் தற்போது கரும்பாகிவிட்டார்கள். காணவும் நான் வேம்பாகி விட்டேன்.
                         
                       நன்றி : ஆனந்தவிகடன்



நோய் – வாய்ப் - படுதல்

$
0
0
                                            
                                                                                                                                                                      

அவ்வளவு
வலுக்கட்டாயமாக
தலையை வலப்பக்கம் திருப்பிக் கொள்ளாதே
பிறகு
ஒரு நூறு கைகள் ஒன்று கூடி
அதை
இடப்பக்கம் இழுக்கும்     

                              நன்றி : கல்கி தீபாவளி மலர்

சீன்

$
0
0

உண்மையில்
இது ஒரு நகைச்சுவைக் காட்சி இசை
நீ மட்டும் 
கொஞ்சம் மனசு வைத்தால்
இந்த சீனிற்கு சிரித்து விடலாம்.

119

$
0
0
                                    



இந்தமுறை
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையாட்டிக் கொள்வதென.
எப்படித் தலையாட்ட வேண்டுமென்று
ஆட்டியாட்டிப் பார்ப்பது
இது 119 வது முறை.

இன்று ஒரு தகவல் !

$
0
0
                                                

பிள்ளைப் பிராயத்தில்
எப்போதாவது குளிப்பேன்
அடித்தால் பல் துலக்குவேன்
அறிவு வளர்ந்த பிறகு
தவறாது குளித்தேன்
தினசரி பல்துலக்கினேன்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதிஎன்றான் ஒருவன்.
நான் அதை நம்பினேன்.
இன்னொருவன் வந்தான்...
பல்லிடுக்கு, நுண்கிருமி என்றெல்லாம்
பயங்கரக் கதைகள் சொன்னான்.
உடனடியாக நெளிந்து வளைந்த புருசுக்கு மாறினேன்.
பிறகொருவன்  சொன்னான்..
ஒரு துலக்கால் பண்ணிரண்டு மணி நேரத்தைத் தான் பாதுகாக்க இயலும்..
பல் போனால் சொல் போச்சு...
நான் அன்றிரவே
இதுவரை தவற விட்ட எல்லா இரவுக்குமாய் சேர்த்துத் துலக்கினேன்.
என்னிடம் உள்ள ஒரே நல்லொழுக்கம் புகையாமை மட்டுந்தான்
நேற்றொருவன் எச்சரிக்கிறான்...
“ நீ ஒரு முறை பல் துலக்குவது ஆறு சிகரெட் புகைப்பதற்குச்  சமம்..
 பல்முளைத்த காலந்தொட்டு
 நான் துலக்கோதுலக்கென்று துலக்கி வரும் பற்பசையில்
 நிக்கோடின் கலந்துள்ளதாம்.
 நாளையிலிருந்து
 நாள் ஒரு தகவலாக அழித்துக் கொள்ள இருக்கிறேன்.

உண்டு

$
0
0
                       
                     


அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகு
பிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லை
ஒழுகாத வீடு கிடைத்ததில்லை
ஒழுங்கான கல்வி கிடைத்ததில்லை
தகப்பனைக் காணவில்லை
சரியான காலத்தில் ருதுவாகவில்லை
சரியான காலத்தில் மணமாகவில்லை
புருஷன் வீடு தங்குவதில்லை
வயிற்றில் கருத் தங்குவதில்லை
எனவே புத்தி ஒரு ஒழுங்கில் இல்லை
எந்த அசதியாலும் அவளை தூங்க வைக்க இயலவில்லை
எத்தனை அடி உயரத்திலிருந்து விழுகின்ற போதிலும்
எந்தக் கோமாளியாலும்      
அவளைச் சிரிக்க வைக்கக் கூடவில்லை
அவள் முறை வருகையில்
வெறுங் கையை நீட்டுவதுதான்
இவ்வுலகத்து வரிசைகளின் இயல்பு.
ஆனால்
அதிசயமாக அவளுக்கு ஒரு புது 500 ரூபாய் கிடைத்துவிட்டது
“ சக்சஸ்....”
 என்றவள் கத்திய கத்திற்கு
 கடவுளின் இமைகளில் நீர் கோர்த்து விட்டது    
அவர் அதைச் சுண்டியெறிய,
நேற்று வெளுத்துக் கட்டிய மழை அதுதான்.


உலகு

$
0
0
                                       
           





இடையில் இருப்பவர்க்கு
காற்றென்றால்
அறவே ஆகாது
கடைசியில் உள்ளவருக்கு
கிளியனார் கொஞ்சலன்ன
லேசாக அலச வேண்டும்.
ஜன்னலோரத்தானுக்கோ
அது வழியே உலகமே
தெரிய வேண்டும்
ஒத்தைக்கண்ணாடி
படாத பாடு படுவதைப் பார்.

அன்புள்ள இசை

$
0
0
                                             
         



அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.
    உங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.
      “பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது
      இப்படி மழை வந்து விசுறுகிறது”
என்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை  சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.
   இப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்?,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)
    செவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)

“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, விரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.
     இத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).

                                                                             அன்புடன்
                                                                             தனசேகர்
                                                                 

”குக்கூ” என்காதோ கோழி !

$
0
0



                    
                                            
  ஆமாம்...அவர் என் வாத்தியார். வாத்தியார் தான். குரு அல்ல. குருவெனில் அவர் ஆடைகளை துவைத்துப் போட வேண்டும். வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே நல்ல பழங்களாக பறித்து வந்து பசியாற்ற வேண்டும். மடிதனில் கிடத்தி உறங்க வைக்க வேண்டும். அப்போது ஒரு வண்டு நம் தொடையைத் ஆழத்துளைத்து மறுபுறமாகப் பறந்து போனாலும் , பற்களைக் கடித்துக் கொண்டு, முகத்தை முந்நூறு கோணலாக்கி அவர் நித்திரையைக் காக்க வேண்டும்.எல்லாம் செய்து விட்டு கடைசியாக கமண்டல நீரால் சாபமும் வாங்க வேண்டும். வாத்தியாரெனில் இருக்கும் இரண்டு தலையணைகளை ஆளுக்கொன்றாக வைத்துக் கொள்ளலாம்.
“ ஏனோ கால் வலிக்கிற மாதிரி இருக்கு... “ என்று வாத்தியார் முனகினால்
 “ நல்லா தூங்கி எந்திருச்சா எல்லா சரியா போயிடும்.. பேசமா படுங்க...:
   என்று அதட்டி தூங்க வைத்து விடலாம். அதாவது நம் தலையணையை அவர் காலணையாக்க வேண்டிய அவசியமேதுமில்லை.
    இரண்டாயிரத்தின் துவக்கத்தில்  இளஞ்சேரல், பொன்.இளவேனில், செல்வராசு, கணேசன் ஆகிய நண்பர்களுடன் நானும் சேர்ந்து “பாரதி இலக்கியப் பேரவை “ என்று ஒரு அமைப்பை உருவாக்கி எங்கள் ஊரில் இலக்கியம் வளர்த்து வந்தோம். அது வைரமுத்துவின் முறுக்கு மீசையிலிருந்து நாங்கள் ஒவ்வொருவராக இறங்கத் துவங்கியிருந்த பருவம். மனுஷ்யபுத்திரனின் “இடமும் இருப்பும் “ புத்தகம் எப்படியோ கைக்கு வந்து சேர்ந்தது. படித்தோம்.. ஒன்றுமே விளங்கவில்லை. ராத்திரி கூடிய சபை இரண்டாக பிரிந்து நின்று வாதிட்டது.
“ இது ஏதோ ஏமாற்று வேலை..  இவை கவிதைகளே அல்ல..என்று ஒரு  அணியும்,
“ இல்லை.. சுஜாதாவெல்லாம் சும்மாவா சொல்லுவாரு ..நமக்குத் தான் அறிவு போதவில்லை .. “ என்று இன்னொரு அணியும்
   வாதிடத் துவங்கி வாதம் நீண்டு நீண்டு பல டீ-க்களுடன் விடிந்தது. இன்றோடு நட்பே முடிந்து விட்டது .. “ என்று எண்ணுமளவிற்கு காரசாரமான விவாதம். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அன்று நான் அக்கவிதைகளுக்கு எதிரணியில் நின்று பிரதான வீரனாகத் தொண்டை கிழியக் கத்தினேன் என்பதுதான். அப்போதுதான் சுகுமாரனின் “ சிலைகளின் காலம் “ தொகுப்பும் வாசிக்க கிடைத்தது. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாக புரிவது போல் தோன்றியது.. அவன் எழுதுகையில் “ என்கிற பாரதியைப் பற்றிய கவிதையை வாசித்த போது வெறுமனே புரிவது மட்டுமல்ல பரவசமாகவும் இருந்தது. கவிதையின் மர்மப் பிரதேசங்களை நோக்கி ஒரு சின்ன ஜன்னல் திறந்தது.. அக்கவிதையின் பரவசம் மற்ற பல கவிதைகளையும் துலங்கச் செய்தது. “ பாட்டி மணம் “ என்கிற கவிதை என் பாட்டியை நினைத்துக் கொண்டு வாசிக்கும் போது வெகு எளிய கவிதை போல் தோன்றியது.
     உங்கள் குசுவிற்கு
      நீங்களே மூக்கை
       பொத்துவதுண்டா ?... என்கிற கேள்வியின் அதிரடி தெளிவாக விளங்கியது. பிறகு “ இடமும் இருப்பை “  தேடி வாசித்தேன். இப்போது பல கவிதைகள் எவ்விதச் சிக்கலுமில்லாமல் அனுபவமாவதை உணர முடிந்தது.
     இப்படியாக சுகுமாரன் எங்கள் ஆதர்ஷ கவியாக ஆகிப்போன தருணத்தில்தான் பொன்.இளவேனிலின் தங்கைக்கு திருமணம் வந்தது. பத்திரிக்கையில் சுகுமாரனின் கவிதை ஒன்றை அச்சிட்டோம். திருமண அழைப்பிதழ் என்பதால் மங்களகரம்தேவைப்பட்டது. எனவே “ மழை “ பற்றிய கவிதை ஒன்றை அச்சிட்டோம். “ என்பதால் மழை “ என்கிற கவிதை அது..
     “ மழை பிடிக்கும் எனக்கு –
       ஏனெனில்
       நீர்க்கம்பிகளின் மீட்டலில்
      இலை நடனம் நிகழும்
      .........................................
      மழை பிடிக்கும் எனக்கு
      ஏனெனில்
      மூடப்பட்ட பிள்ளைப் பருவத்தின்
      ஞாபகக் கதவைத் திறக்கும்
      ...........................................

  பின்னொரு நாளில் “ நீர்க்கம்பி, ஞாபகக் கதவு , மனச்சுவர் போன்ற  உருவகங்கள் இப்போது வாசிக்கையில் மெல்லிய சலிப்பைத் தருகின்றன என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். தமிழில் எனக்கு பிடித்த ஒரே ஒரு கவிஞர் பெயரை மட்டும் சொல்லச்சொல்லிக் கேட்டால் நான் அவரது பெயரை சொல்ல மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் எனது வாத்தியார் அவர்தான். அதில் எந்த மாற்றமுமில்லை. எப்போதும் அவரே என் வாசகர்.
                




    என் முதல் தொகுப்பு 2002-ல் வெளியான போது அந்த திருமண அழைப்பிதழையும் புத்தகத்தோடு இணைத்து அவருக்கு அனுப்பியிருந்தேன். அவரது முகவரியை எப்படி பெற்றேன் என்பது நினைவில்லை. 22/04/2002 தேதியிட்டு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது. அந்தக் கடிதத்தின் இறுதி வரிகள்...
“ எழுத்திற்கு நான் பயின்றதும் பயன்படுத்துவதுமான் சூத்திரம்.. “தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல்..”   இது  உங்களுக்கும் பயன் தரலாம் “
     உண்மையில் அச்சூத்திரம் எனக்கு நிறையவே பயன் தந்தது.
  “ நாம இலக்கியத்துக்குள்ள நுழையறப்ப யார் மூஞ்சில முழிக்கறோம்கறது ரொம்ப முக்கியம்.. நான் வருகையில் எதிர்நின்று கொண்டிருந்த சுகுமாரனுக்கு என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் பங்கிருக்கிறது.. இது முன்பு சுகுமாரன் குறித்து நான் எழுதியது. ஆம்... நான் வருகையில் ஜிப்பாவும், சிகரெட்டுமாக அவர் தான் நின்று கொண்டிருந்தார். சந்தேகமே இல்லாமல் அது என் நல்லூழ்.
  அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த இன்னொரு வரி..
“ இதே கவனத்துடன்  தொடர்ந்தால்  உங்களிடமிருந்து செறிவான கவிதைகள் நிச்சயம்  வெளிப்படும்..
   நான் 2014 ஆண்டு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தரராமசாமி விருது “  பெற்ற போது கிட்டதட்ட 14 ஆண்டுகள் பாதுகாத்து வந்த அந்தக் கடிதத்தின் ஒளிநகல் ஒன்றை, பெரும் பரிசொன்றை அளிப்பதன் உவகையோடு அவருக்கு வழங்கினேன்.
  எனக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகளின் தேர்வுக்குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அது என் அல்லது அவரது துரதிர்ஷ்டம். என் நிமித்தம் அவர் ஏராளமான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்.
  இந்த மனுஷன் தன் வாழ்க்கையிலேயே அதிகமாக வாங்கிய வசைகள் பாவம்.. நம் நிமித்தம் தான்  என்கிற எண்ணம் எனக்கிருந்தது. இல்லை.. இது இலக்கியத்தில், கவிதையில் அவர் உறுதியாக நம்பும் ஒன்றின் நிமித்தம் பெறுகிற வசைகள்...எப்படியாயினும்...யாருக்காகவேனும் இதை அவர் பெற்றுத்தான் ஆக வேண்டும்  என்று உணர்ந்து கொண்ட தருணத்தில் அந்தப் பெருமையைத் துறந்து விட்டேன்.
    சிலர் என் கவிதைகளில் அவர் பாதிப்பு உண்டு என்று சொல்கிறார்கள் அது குறித்து என்னால் உறுதியாக எதையும் சொல்ல இயலவில்லை. ஆனால் என் உரைநடையில் அவரது வலுவான பாதிப்புகள் உண்டு. அது எங்கு ஒளிந்து கொண்டிருந்தாலும் அதை  என்னால் கண்டுபிடித்து விட இயலும்.
    சுகுமாரன் ஒரு கவிஞராக இருந்த போதும் என் தனிப்பட்ட ரசனையில் அவரது சிறந்த ஆக்கம் “ தனிமையின் வழி “ என்கிற அவரது உரைநடைப் புத்தகம்தான் என்று சொல்வேன். அந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் உயிர்மையில் பத்திகளாக வந்த போது மிகுந்த கவனம் பெற்றன. எழுத்து, இலக்கியம் என்பதோடு நில்லாமல் விதவிதமான மனிதர்களை, உலகங்களை அது அறிமுகம் செய்து வைத்தது. வாழ்வு குறித்த பார்வைகளைக் கட்டமைத்தது. வீட்டை  மட்டும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த ஒரு கிராமத்து இளைஞனுக்கு அது விரித்துக் காட்டிய உலகம் அளப்பரியது. “ முதுமைப் பருவத்தில் தனது இளமைக்கால புகைப்படத்துடன், கண்ணாடி முன்னே சேலையை சரிய விட்டு நிற்கிற ஒரு நடிகையை “ அந்தப் பையனால் எந்த ஜென்மத்திலும் சந்தித்திருக்க இயலாது. அந்தப் புத்தகத்தின் எல்லா கட்டுரைகளும் நண்பர்களால் சீராட்டப்பட்டன. நண்பர் இளஞ்சேரல் உயிர்மையின் ஒவ்வொரு இதழிலும் சுகுமாரனின் கட்டுரைகள் குறித்து வாசகர் கடிதங்களை எழுதினார். பிறகு அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்த போது சுகுமாரன் அதை “ இருகூர் இளங்சேரலுக்கு “ என்றே சமர்ப்பித்திருந்தார். பு.வ.மணிக்கண்ணனை பற்றிய கட்டுரை எங்கள் எல்லோரையும் ஒரு சேர ஆக்கிரமித்துக் கொண்டது. இளங்கோ அப்போது எழுதிய கவிதை ஒன்றை பு.வ.மணிக்கண்ணனுக்கு சமர்ப்பித்தான்.
   அப்போது வாசிக்கையில் ஒரு எழுத்தாளனின் துயரம், வறுமை, கண்ணீர், காத்திருப்பு போன்றவை ஒரு வகையில் எனக்கு சுவையூட்டக் கூடிய ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். அவலச்சுவையில் தித்திப்பு அதிகம் அல்லவா ?
“ அநேகமாகத் தமிழ்நாட்டிலுள்ள சிறியதும், பெரியதுமான எல்லாப் பேருந்து நிலையங்களிலும், பிரதான எல்லா ரயில்வே சந்திப்புகளிலும் ஓர் இரவையாவது உறங்காமல் கழித்திருப்பேன்.. “
  என்று அன்று எழுதும் போது , அவர் எனக்கு வெறும் எழுத்தாளன் மட்டுமே. சேலம் பேருந்து நிலையத்தின் அழுகிய நாற்றத்திற்கிடையே ஒரு விடுதி அறைக்கு கூட வக்கில்லாமல், ராத்திரியை விடிய வைக்க சூட்கேஸுடன் இப்போது அமர்ந்திருப்பவர் என் வாத்தியார்... என் நண்பர்... ”குக்கூ” என்காதோ கோழி !
  “ பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம் ...“ என்கிற வரியை இப்போது வாசிக்கையில் தலையை திருப்பிக் கொண்டேன். அமெரிக்க ஆதிவாசி தலைவன் சியாட்டில், தங்களது மண்ணை விற்குமாறு கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை திருச்சி ரயில்வே பிளாட்பாரத்தில் தஞ்சமான ஓரிரவில்தான் மொழி பெயர்த்தேன் என்று எழுதியிருப்பதை ஒரு நண்பராக இப்போது ஜீரணிக்க இயலவில்லை.
   இலக்கியம் குறித்த, கவிதை குறித்த  அடிப்படைகளைப் பேசுவதில் எப்போதும் எனக்கு தீராத ஆர்வமிருக்கிறது. நானும், இளங்கோவும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அடிப்படைகளைக் குறித்தே அதிகமும் உரையாடினோம். அப்போது எங்களுடன் அரூபமாக நடந்து வந்தவர் சுகுமாரன்.
 வாத்தியாராக தூரத்தில் இருந்தவர் நண்பராக நெருங்கியது 2010 – ல் தான். அப்போது அவர் காலச்சுவடு பதிப்பக பணிகளை கவனித்து வந்தார். என் ‘ சிவாஜி கணேசனின் முத்தங்கள் “ தொகுப்பிற்கு நான் ஒரு முன்னுரை எழுதி அனுப்பியிருந்தேன். ரொம்பவும் தயங்கி தயங்கி முன்னுரை எப்படி இருக்கிறது ? என்று  சாட்டில் கேட்டேன். ஒரு பாராட்டு மொழியை பதிலாக தந்தார். அந்தப் பாராட்டை விட அதன் கடைசியில் துளியாக ஒட்டிக்கொண்டிருந்த “ டா “ என்கிற விளிப்புதான் என்னை அதிகமும் இன்புறுத்தியது.
“ இந்த “ டா “ வுக்காகத் தான் சார் இத்தனை வருஷமா காத்துக் கிடந்தேன்.. என்று பதில் அனுப்பினேன்.
  கோவை கணபதி லாட்ஜின் மாலை நேர உரையாடலொன்று 20 வருட வயது வித்தியாசத்தை அழித்துப் போட்டது. அதன் பிறகு அவரிடம் நான் உளறாததென்று எதுவுமில்லை. என் அந்தரங்கத்து அபிமான நடிகை ரேஷ்மா பற்றி கூட அவருடன் ஆக்ரோஷமாக உரையாடியிருக்கிறேன்.
“  அவ வெறும் செக்ஸ் நடிகையில்லை சார்... காமத்தோட தேவதை... தன் உடலை அவ்வளவு மனமுவந்து தருவது நல்ல நடிப்பில் சேராதா என்ன ... ? தன்னைத் தொட்டு திருப்பும் அவனுக்கு மாத்திரமல்ல, அவனை முன்னிறுத்தி காமத்தில் வெந்து தணியும் ஒவ்வொருவனுக்கும் அவள் தன்னை மனமுவந்து அளிக்கிறாள்... சிருங்காரமும் ஒரு இரசம் தானே சார்.. “
  ரேஷ்மா திடீரென காணாமல் போய் விட்டதாக வந்த இணையச் செய்தியை அவர்தான் முதன்முதலில் எனக்கு இன் –பாக்ஸில் அனுப்பினார்.
  திருக்குறளை மறுவாசிப்பு செய்கையில் காமத்துப்பாலின் ஒவ்வொரு பாடலும் என்னைத் தூக்கிப் போட்டது. தாங்கவொண்ணாத பரவசத்துள் தள்ளியது. அதை முதலில் அவரிடம் “ குறுஞ்செய்தி “ மூலம் பகிர்ந்து கொண்டேன். அப்போதும் அடங்காது போனில் அழைத்து பேசினேன் ...
வள்ளுவன் கவியில்லையென்றால் வேறு யார்தான் கவிஞர் ? குறிப்பாக காமத்துப்பால் நிலைகொள்ள விட மாட்டென் என்கிறது... தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நவீனக் கவி யாராவது காமத்துப்பாலிற்கு மட்டும் தனியாக உரை செய்ய வேண்டும்.. வெறுமனே செய்யுளிற்கு பொருள் சொல்லாமல் , அதனுள்ளே இருக்கும் கவிதையைச் சொல்ல வேண்டும் ...“
      இன்னும் என்னென்னவோ பிதற்றினேன்..
  ம் “ கொட்டிக் கொண்டிருந்தவர், தீடீரென
       செய்யலாமா ...  ? என்று கேட்டார்.
செய்யலாமா என்றால்.. நாம இரண்டு பேரும் சேர்ந்தா சார்.. ?
    “ஆமா... செய்வோம்... “
அவர் ஒரு வரி பதிலுடன் நிறுத்திக் கொண்டார். அடுத்த அரைமணி நேரத்திற்குள்
“ திருக்குறள் – காமத்துப்பால் – நயவுரை : சுகுமாரன், இசை “
        என்று ஒரு அட்டைப்படமே தயாராகிவிட்டது  எனக்குள்.
உடனே அந்த மகிழ்ச்சியை நண்பர்கள் சாம்ராஜ், கவின், செந்தில் ஆகியோருடன் குறுஞ்செய்தியில் பகிர்ந்து கொண்டேன்.
கே.என் செந்திலிடமிருந்து வந்த பதில்...
 “ நல்லது... வாத்தியாரும், மாணவரும் சேர்ந்து செய்ய வேண்டிய அவசியமான பணி...வாழ்த்துகள்...
கலகலப்பற்றவர்.. யாரிடமும் அதிகம் ஒட்டாது “ உம்மென்று இருப்பவர் என்பதே அவரைப் பற்றிய பொதுச் சித்திரம். காலச்சுவடும், பனுவல் புத்தக நிலையமும் பாரதியைப் போற்றும் வகையில் “ பாரதி – 93 “ என்கிற பெயரில் தொடர் இலக்கிய உரைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு வாரம் நான் பாரதியின் கவிதைகளை குறித்துப் பேசினேன். அந்த அமர்வைப் பற்றி பழ.அதியமான் அவர்கள் கொஞ்சம் புகழ்ந்து எழுதியிருந்தார். அதை படித்த சுகுமாரன்.. “ ஒத்துக்கறேன்...எனக்கு கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு... “ என்று சொன்னார். இதை நான் அதியமானிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னதை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு பொத்துக் கொள்ளும்..
  “ ஒத்துக்கறேன்/ எனக்கு / கொஞ்சம் / பொறாமையாத்தான் / இருக்கு..நெறயா வார்த்தை வருதே இசை... இவ்வளவு பேசினாரா அவரு... “
  எல்லா விதிக்கும் விலக்குகள் உண்டல்லவா ? ஒரு முறை  அவர் மனைவி சொன்னதாக நான் கேள்விப்பட்டது இது..
“ மத்தவங்க போன் பண்ணின,  ம்.. “ ... “ ம். “.ன்னு உறுமுற....ஒரு நாலஞ்சு பேர் இருக்காங்க... அவங்க போன் வந்தா மட்டும் மொகம் அப்படியே பிரகாசமாயிடுது... “
அவர் முகத்தை பிரகாசமாக்கும் நாலைந்து பேரில் ஒருவனாக இருப்பதில்  எனக்குப் பெருமை உண்டு.
  எவ்வளவோ பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர் என்றாலும் குடியை விரும்பியவரல்ல அவர். ஒரு வேளை இதற்கு அவர் அப்பாவின் மிதமிஞ்சிய பொறுப்பற்ற குடி ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நான் அறிந்த வரையில் அயல்தேசத்து பெண் கவிஞர்களுடன் ஒரே ஒரு முறை பியர் அருந்தியிருக்கிறார்.
  அவரது ஆதர்ஷ எழுத்தாளர் மார்க்வெஸின் நூலை அவர் தமிழில் மொழி பெயர்திருந்தார். அப்புத்தகம் வெளிவரும் நாளில் அவருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இயலவில்லை. இரவு அவரை போனில் அழைத்துப் பேசினேன்...
  “ சார்.. ஒரு பியர் அருந்த இதை விட பொருத்தமான, சந்தோசமான காரணம்  கிடைக்காது. எனவே போய்  சில்லுன்னு ஒரு பியர் சாப்பிடுங்க... “
  அவர்  “ வேண்டாம்... “ என்று மறுத்து விட்டார். அயல்தேசத்து பெண்கவிஞர்கள் அவசரத்துக்கு கிடைக்கிறார்களா என்ன ?
  அவர் கேளிக்கைகளில் கலந்து கொள்ளாதது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் நடனங்களில் கலந்து கொள்ளாதது குறித்து வருத்தமுண்டு.
 “ இப்படி...ஐம்புலனையும் அடக்கி...சாமியார் மாதிரி வாழ்ந்து , வாழ்க்கைல என்ன சந்தோஷத்த காணப் போறீங்க ‘ என்று கேட்டால்,
“ இப்ப நான் சந்தோஷமா இல்லைன்னு உனக்கு யார் சொன்னது.. ? என்று திருப்பிக் கேட்பார்.
 ஆங்கிலத்தில் எனக்கு “ ஐ லவ் யூவைத் தவிர வேறொன்றும் தெரியாது. சுகுமாரனின் மொழிபெயர்ப்பின் வழியாகவே நான் சிலி கவிஞர் நிக்கனார் பாராவை சந்தித்தேன்...
 
   “ கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
    சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
    வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்  “
                                            ( நிக்கனார் பாரா )

“கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது “ .. இது என் நெஞ்சில் ஆழ விழுந்து விட்டது. கவிதைக்குள் ஒரு குத்துப்பாட்டை வைக்கும் தைரியத்தை இவ்வரியே எனக்கு வழங்கியிருக்க வேண்டும்.
  சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டின் போது ஜெயமோகன் பேசினார்...
 “ ஒரு காலத்துல சுகுமாரன் கவிதைய நின்னுட்டுதான் படிக்க முடியும்.. உட்கார்ந்துட்டு ரிலாக்ஸா அதை படிக்க முடியாது... அவ்வளவு உக்கிரம் இருந்தது அதுல.. “
 சுகுமாரன் தமிழுக்கு இன்னும் கொஞ்சம் “ கனல் மணக்கும் பூக்களை “ வழங்கட்டுமென்று அவரை நான் ஆசீர்வதிக்கிறேன்.
                        
                  நன்றி : விகடன் - தடம் டிசம்பர்- 2016
                                       

  தலைப்பு : 
    ” குக்கூ என்றது கோழி..என்கிற சங்கப்பாடல் வரியின் திரிபு. 

              
                          

மார்கழி- 01

$
0
0
                             



நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன.

சத்தம்

$
0
0




இந்த உலகத்தில்
தேவையற்ற சத்தங்கள்
நிறைய.
அதில்
ஆகக்கொடூரமானது
சிரிப்புச்சத்தம்.
அது எப்போதும்
சிரிக்க வக்கற்றவனின்
நடுமண்டையில் விழுகிறது.

விபத்து

$
0
0






பதினோரு கால்களையும் ஊன்றி
இருபத்தைந்து  கைகளிலும் பற்றி
எவ்வளவோ
இழுத்துப் பிடித்தேன் அந்தச் சொல்லை
ஆனாலும், அது உன் மீது மோதி விட்டது.

போலீஸ் வதனம்

$
0
0

                           



நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப் போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது.
“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “
 என  வாழ்த்தியது வானொலி.
 போலீஸ் தன் சுடரை
 ஒரு கந்துவட்டிக்காரனிடன் பற்ற வைத்து விட்டுப்போனார்.
 அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்த படியே
“ நாளைக்கு... “ என்றாள்.
 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

                             நன்றி : ஆனந்தவிகடன் 

                        

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

$
0
0
                                                   
           
                                                    
          
இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..

“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன்.
“ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன்ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம்.  என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை’’திட்டமிட்டுஉருக்கிவிட்டார்.
    
  என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப பிரயத்தனப் பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

  சிறுவயதிலிருந்தே எனக்கு வயசுக்கு மீறிய சகவாசம் தான் வாய்த்திருக்கிறது. டவுசரோடு லுங்கி கட்டிய அண்ணன்களோடு அலைந்தது தான் என் பால்யத்தின் சித்திரம். அது இன்று வரை தொடர்கிறது. வண்ணதாசனின் கரங்களைப் பற்றிக்கொள்ளும் தருணத்திற்காக காத்திருக்கும் பலரையும் நான் அறிவேன். அப்படியிருக்க அவரோடு “ எல்லாம் “ செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டு. சில நேரம் அவர் தனி அறையில் இருப்பார். சில இரவுகளில் எங்கள் கூடவும் இருந்திருக்கிறார். அவருடன் இருந்த ராத்திரிகள் மகிழ்ச்சியானவை. கூடவே கண்ணீர்க்கும் குறைவில்லாதவை. ஒரு ராத்திரியில் அறையில் இருந்த எல்லாரும் அழுதோம். இதுதான் சாக்கு என்பது போல ... அவர் முன்னால் தான் கொட்ட வேண்டும் என்பதற்காகவே அத்தனை கண்ணீரையும் சேர்த்து வைத்திருந்தது போல. அநேகமாக எல்லாரும் அவர் மடியில் விழுந்தார்கள். இந்தக் கயவனுமா .. ? என்பது சரியாக நினைவில்லை. காலையில் ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு பார்த்துக்கொண்டோம். “என்னய்யா இது...எழவு வீடு மாதிரி ..என்கிற கேலிக்கு பின் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.
  அவரது அந்தரங்க சினேகிதர் சாம்ராஜ் மூலமாகத்தான் அவரோடு நேரடி அறிமுகம் கிடைத்தது. அவர் எழுத வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக மதுரையில் “ வண்ணதாசன் 50 “ என்கிற நிகழ்ச்சி நடந்தது. அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். எனது சிவாஜி கணேசனின் முத்தங்கள்தொகுப்பு அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தது என்பதை சாம் மூலம் அறிந்திருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர் எல்லோருக்கும் கையொப்பம் இட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் ஒரு ஓரமாக நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடைவெளியில் என்னைப் பார்த்து “ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன்..எனக்கு வெட்கமா இருக்கு .. “ என்றார். நான் நடுங்கிப் போனேன். தனிமையில் ஒரு எழுத்தாளனால் இன்னொரு எழுத்தாளைப் பார்த்து இப்படி சொல்லி விட முடியும் தான். அவரது ரசிகர்கள் புடை சூழ நின்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் அப்போது தான் எழுதத் துவங்கியிருக்கும் ஒரு சிறுவனைப் பார்த்து எப்படி ஒரு மனிதனால் இப்படி சொல்ல முடிந்தது என்பதை இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிறகு எழுத வந்த இளைஞர்கள் எத்தனை பேரிடம் நான் உரையாடுகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். “எத்தனை ஏணி வச்சா நீ கல்யாண்ஜி ஆவ.. “ என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்.

   “இன்னைக்கு ஒரு மகத்தான தூக்கம் தூக்கினேன் ... “ என்று சாம் ஒரு முறை சொன்னார்..
அதென்ன தோழர் தூக்கத்துல ஒரு மகத்தான தூக்கம் ? என்று சீண்டினேன் .

 “ திருவனந்தபுரம் போயிட்டு அப்படியே வண்ணதாசன் சார் வீட்டுக்கு போயிருந்தேன்.. போய் சாப்பிட்டு படுத்தவன்தான் என்ன நடந்ததுன்னே தெரியல.. அப்படி ஒரு தூக்கம்.. மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் தூக்கம்.. என் வாழ்க்கைலயே நான் இப்படி தூங்கியது அரிது தோழர்.. ஒரு வேளை நமக்கு ப்ரியமானவங்க பக்கதிலிருந்தா, அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கிற நினைப்பிருந்தா ,  இப்படி தூக்கம் வரும் போல..” 
  மகத்தான மனிதர்களால் மகத்தான காரியங்களை மட்டுமல்ல மகத்தான தூக்கத்தையும் அருள முடிகிறது.

      கல்யாண்ஜியின் பல கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. சில கவிதைகளின் வரிகள் அவ்வப்போது தீடீரென நினைவில் தோன்றுவதும் உண்டு.  “ முடிதிருத்துகிற ஒரு தெய்வம் / செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது “ என்கிற வரி சமீபநாட்களாக அடிக்கடி நினைவில் வருகிறது. எங்கள் ஊரில் என் தலைமுறைப் பிள்ளைகள் எல்லோரும் சலூனிலேயே வளர்ந்தோம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் கவிதைளில் எனக்கு சில போதாமைகள் உண்டு. அதாவது அந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறதோ அதை ஒரு கட்டுரையின் முடிவுரையைப் போல சுருக்கி கடைசி இரண்டு வரிகளில் சொல்வார். எல்லா கவிதைகளிலுமல்ல சில கவிதைகளில் இப்படி நிழந்திருக்கிறது.  இது ஒரு தொழிற்நுட்ப குறைபாடுஎன்பதை அவர் இருந்த மேடையிலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன்.ஆனாலும் எங்களுக்கிடையில் இது வரை எதுவும் அறுந்து விடவில்லை. சமீபத்தில் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று “ ஆட்டுதி அமுதே “ இரண்டு பிரதிகள் வாங்கியிருப்பதாகச் சொன்னது.

         



  அவர் சமீபத்தில் எழுத வந்த ஒருவரின் எழுத்துக்களை கூட அக்கறையுடன் வாசிக்கிறார்.  விஷால் ராஜா எழுதிய ஒரு கட்டுரையை வாசித்து விட்டு அவன்  உள்பெட்டிக்கு சென்று வாழ்த்துகிறார். என் கவிதையின் சாயைகள் விழத் துவங்கியிருந்த ஒரு கவிஞரிடம் “ அவன் வண்டில நீங்க ஏன் ஏறறீங்க..என்று எச்சரிக்கிறார்.

 “ நீங்கள் கேட்டவை “ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் ‘பாடலில் ஒரு காட்சி வரும் ஒரு டிரைவர் தன் கார்  ஜன்னலுக்கு வெளியே கால்களை நீட்டியவாறு  தூங்கிக் கொண்டிருப்பார். கேமரா வெளியே நீண்டிருக்கும் அந்த கனுக்கால் பாதத்தை மட்டும் அழகாக காட்டிச்செல்லும். நண்பர் ஜான் இந்தக் காட்சியை பார்த்த பிறகு தான் பாலுமகேந்திராவின் தீவிர ரசிகராகி விட்டதாக ஒரு முறை சொன்னார். வண்ணதாசனின் “ மிச்சம் “ கதையை வாசித்து விட்டு ஜானை அழைத்துச் சொன்னேன்..
“ ஜான்.. உங்க டைரக்டருக்கு முன்னாலேயே  வண்ணதாசன் அந்த சீன எழுதிட்டாரு ஜான்.. நாம தான் அதைப் படிக்கல.. “

  நான் கதைகளை வாசிக்கத் துவங்கிய பருவத்தை எண்ணிப் பார்க்கிறேன். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்ட நான் வாசித்த எல்லாக் கதைகளிலுமே ஒரு சூரியோதயமோ, அஸ்தமனமோ இருந்தது. கதாசிரியன் அதை உருகி உருகி சொல்லி இருந்தான். எப்போதாவது அண்ணாந்து கொட்டாவி விடுகையில் கண்ணுக்கு சிக்கினால் உண்டு. மற்றபடி அது பாட்டுக்கு அது இருக்கிறது. நான் பாட்டுக்கு நான் இருக்கிறேன். கன்னியாகுமரியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்று கூட சேர்ந்து வேடிக்கை பார்த்ததை விட்டு விட்டால் நம் வாழ்வில் நாம் எப்போது சூரியனை நின்று பார்த்தோம் என்று தோன்றியது. எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. சில கதைகளில் வர்ணனைகள் ஒரு பக்க அளவுக்கு கூட நீண்டிருந்தன.  “ நீ களஞ்சியத்தையே கையளிப்பதாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம்... “ என்று அந்தப் புத்தகங்களை தூர எறிந்திருக்கிறேன். சித்தரிப்புகளின் மேல் இவ்வளவு வெறுப்புடைய ஒருவனுக்கு வண்ணதாசன் கதைகள்  எரிச்சலைத்தான் அளித்திருக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

  எல்லோரும் சிலாகித்துச் சொன்ன அவருடைய தனுமை”  கதையை வாசித்து விட்டு “ இப்ப என்னய்யா பிரச்சனை... அந்த டீச்சரு இவன லவ் பண்றா.. இவன் வேரொருத்திய லவ் பண்றான்.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கால் வராது.. அவ்வளவு தான மேட்டரு..என்று தான் தோன்றியது.

  வண்ணதாசன் கதைகள் போய்ச் சேரும் இடத்தில் அல்ல, போகும் வழியில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த அவசரக்குடுக்கைக்கு கொஞ்சம் காலம் பிடித்தது. அவர் கதைகளுக்குள் நான் பெரிய பெரிய விஷயங்களை, பெரிய பெரிய சிக்கல்களை எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவர் சின்ன விஷயங்களின் மனிதன் என்பதை காலம் தாழ்ந்தே அறிந்து கொண்டேன். சின்ன விஷயங்கள் உண்மையில் அவ்வளவு சின்ன விஷயங்கள் அல்ல என்பதையும்.

   “ தனுமைகதையை நாம் முடிவை நோக்கி வேகமாக வாசித்து விட்டுப் போகையில் , ஞானப்பன்  “ தட்டுங்கள் திறக்கப்படும் “ என்று பாட ,  அது அநாதை விடுதிச் சிறுவர்களுக்கு “ இந்த நல் உணவை நமக்குத் தந்த நம் இறைவனை வணங்குவோம் “ என்பதாக கேட்கிற பிரமாதமான கதையை இழந்து விடுகிறோம் என்று தோன்றுகிறது. அநாதைகளை மேலும் அநாதையாக்குகிற பாடல் என்று இதை எழுதிச்செல்கிறார் வண்ணதாசன். அவரின் கதைகளுக்குள் இது போல பல உப கதைகள் காணக் கிடைக்கின்றன. சில கதைகளில் உபகதைகள் கதையை காட்டிலும் அழகில் விஞ்சி நிற்கின்றன. ஓர் உல்லாசப் பயணம் “கதையில் உல்லாசப் பயணம் போக வாய்க்காத சிறுவன் தோணித் தண்ணியை குற்றாலம் என்று சொல்லி குளித்துக்களிப்பதைக் காட்டிலும், அவன் அப்பா  பயணத் திட்டம்  குறித்த நோட்டீசைப் படித்து விட்டு  தன் இயலாமையின் கரிப்போடு “  என்ன தாமரைப்பூ வரையுதியா “ என்று பேச்சை மாற்றும் இடம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு  வெகுநேரம் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தேன்.

  அவர் கதைகளின் பலகீனமாக சொல்லப்படும் சித்தரிப்புகளின் வழியேதான் அவர் நல்ல கதைகள் பலதையும் எழுதிக்காட்டி இருக்கிறார். ஆனால் எல்லாக் கதையிலும் இந்தச் சித்தரிப்பு அவருக்கு உதவியிருக்கிறது என்பதை என்னால் நம்ப இயலவில்லை. “ சபலம் “ கதையில் ஒரு வாத்தியார் ஒரு மாணவனைப் அடிப்பதற்காக பிரம்பை தேடி மேஜை ட்ராயரை இழுக்கிறார்.. பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.. நானாக இருந்திருந்தால்  “ உள்ளே கண்டதும் கடியதும் கிடந்தது.. அதனூடே பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது என்று எழுதியிருப்பேன்.. ஏனெனில் நாம் பிரம்பைத் தேடுகையில் பிரம்பைத் தவிர மற்றதெல்லாம் நமக்கு கண்டதும் கடியதும் தானே ? ஆனால் வண்ணதாசன் ஒரு ஓவியர் . அவருக்கு கித்தானின் ஒவ்வொரு அனுவிலும் வரைய வேண்டியிருக்கிறது. அவர் அந்த மேஜைக்குள் என்னென்ன இருந்தன என்று ஒவ்வொரு பொருளாக சொல்லிச் செல்கிறார். இது வண்ணதாசன் கதை. இது இப்படித் தான் இருக்கும். இது அவர் வண்ணம். அவர் ஓவியம்.

  அவரது கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதன் ஒரு வீட்டுக் கதவின் முன் காத்து நிற்கிறான்..அவன் ஒரு பொருளை அங்கு ஒப்படைக்க வேண்டும். மின்தடையால் அழைப்பு மணி இயங்கவில்லை. கதவு திறக்க கால தாமதமாகிறது. அந்தக் காத்திருப்புக் காலத்தில் அவன் எதை எதைப் பார்க்கிறான் என்று சொல்வார்...
பூட்டிய கதவில் ஒரு சிலந்தி மனிதனின் ஒட்டுப்படம் / அங்கிருந்த முட்டைத் தோடை விட்டு / நெடுந்தூரம் வந்திராத ஒரு குட்டிப்பல்லி இடம் மாறியது/ வேறொரு கண்டத்திற்கு பறப்பது போலத் தாவியதில் அது எங்கு விழுந்ததோ ? பின்வாங்கியதில் என் மேல் உரசியது /காட்டமான வாசனையுடன் அரளிக்கொத்து / இதுவரை பார்க்காத ஒரு துருவேறிய நிறத்தில் ஏழெட்டுக் காளான்கள் வரிசையாய் / உபரியாக ஒரு தேரைத் துள்ளலும் /  தரைச்சக்கரம் போல் சுருண்ட வளையல் பூச்சியும்.
இவ்வளவையும் அவன் பார்க்கிறான். அந்தக் கவிதை இப்படி முடிகிறது
 “ ரொம்ப நேரமாக நிற்கிறீர்களா ? / கதவைத் திறந்த கைவளையல்கள்
   கனிவுடன் சரிந்தன மணிக்கட்டின் மெலிவில் / சொல்லவில்லை நான் ,
   இத்தனையும் பார்க்க  / நின்றால்தான் என்ன / எத்தனை நேரமும் என்று.

நான் அந்த வளைக்கரத்தின் மணிக்கட்டு மெலிவைத் தவிர இதில் வேறு எதையாவது பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். ஆனால் அவருக்கு ஆயிரம் கண்கள். அத்தனையும் பார்க்க வேண்டும் அவருக்கு.

  தற்போது அவருக்கு விஷ்ணுபுரம் விருது, சாகித்ய அகாடமி விருது என இரண்டு முக்கியமான விருதுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகம் முழுக்க அதை கொண்டாடிக் களிக்கிறது. முகநூலில் அவரது புகைப்படங்கள கொட்டித் தீர்க்கப்படுகின்றன. எல்லோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியும் அவை போலியான மகிழ்ச்சிகள் அல்ல. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவை அல்ல. அந்த மனிதர் எத்தனை மனங்களை அவ்வளவு அந்தரங்கமாகத் தொட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இவை.

   “ அவர் நடிக்கிறார்.. என்று சிலர் என் காது படவே சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிக்கொள்வது இது தான்... “ அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்திருந்தால் அவரால் இத்தனை மனங்களை வெல்ல முடிந்திருக்கும்.. உங்களால் முடிந்தால் நீங்களும் நடியுங்கள்... நானும் நடிக்கிறேன்.. இவரும் நடிக்கட்டும்.. அவரும் நடிக்கட்டும்.. உலகம் அன்பின் நடிப்பில் புரளட்டும்.
            


                                                  

                                                            நன்றி : உயிர்மை – ஜனவரி 2017

அநாதைகளின் அமரகாவியங்கள்

$
0
0

                                                 




        பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக்குரலும் பொருந்தவில்லை என்பதைக் கண்டுகொண்டேன் என்றாலும், எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என்பதை முன்பே அறிந்து கொண்டேன். எனவே எனக்கு முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டும் இளையராஜா போன்றே கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளை செருகிஎடுத்த போதும் இந்த நோயை குணமாக்க கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்கு பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும் மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால், இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களின் கதைகளைப் பேசுகிறது.

  நானும் ஒன்றும் சாதாரண கலைஞனல்ல. எட்டாவது படிக்கும் போதே “ டவுசர் விறைக்க, கைகளைக் கட்டிக்கொண்டு “ இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை .. நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை...என்று பாடி அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெருங்கலைஞன். எனக்குத் தெரியும் பாடிவிட முடியாதென்று. ஆனால், தோற்றுப்போனாலும் டி.ஆர்.மகாலிங்கத்திடம் தோற்றுப் போக வேண்டும். அதுவன்றோ கலைத்தாயின் காலடியில் செலுத்தும் காணிக்கை? அதை விடுத்து எளிய எஸ்.பி.பி யின் எளிய பாடலொன்றைப் பாடி சின்ன டிபன்பாக்ஸை வெல்வதில் என்ன சாதனை இருக்கிறது ? அன்றிலிருந்து அந்தப் பாட்டு வாத்தியார் என்னை எங்கு பார்த்தாலும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பார். என்னை வெறும் பாடகன் என்று மட்டும் சுருக்கி விட முடியாது. “ வாத்திய மாமணியும்கூட. அப்போது  அந்தப்பாட்டு வாத்தியாருக்கு  தபெலா வாசிக்க ஒரு மாணவன் தேவைப் பட்டான். ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு நன்றாக படிக்க வேண்டியிருந்தது.வாழ்க்கையில் உயர வேண்டி இருந்தது. எராளமான லட்சியங்கள் பாக்கி இருந்தன. எனவே அவன் என்னை சிக்க வைத்து விட்டு நழுவி விட்டான். தபெலாவை விட்டு விட்டுக் கிளம்பியவன் அமெரிக்கா போய்தான் நின்றான். இன்றும் அவ்வப்போது எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவான். எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? இருந்தது.. ஆனால் தபெலாவின் வழியே, தபெலாவையும் தூக்கிக் கொண்டு அமெரிக்கா போனால் இன்னும் கொஞ்சம் இனிக்குமே என்று கொஞ்சம் யோசித்து விட்டேன். அப்போது கடவுள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து விழுந்து சிரித்தது எனக்குக் கேட்கவில்லை. இப்படித்தான் ஒரு நகலிசைக் கலைஞனின் வாழ்வு தடம் மாறிப்போகிறது.

ப்யானோ கலைஞரும் கடுங் கோபக்காரருமான வசந்தன் சொல்கிறார்...
“ அந்த முண்டை “ம்க்கும்பா... அவங்காத்தா “ஏம்பா...மில்லுக்காவது போலாமில்லம்பா...எல்லா என் நேரம்... “
அந்த முண்டை யாரென்று புரிகிறதல்லவா?
“ ஒழுங்கா படிச்சு வேலைக்கு போயிருப்பேன்..எல்லாம் இந்த தாயளினால வந்தது..என்று இளையராஜாவைக் காட்டி வசைபாடும் வசந்தன் கொஞ்ச நேரத்திற்குப் பின் “ ரியலி.. ஹீ இஸ் அன் ஏஞ்சல் ப்ரம்... “ என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டுகிறார்.

  தனியார் வங்கி ஒன்றில் கடன்பாக்கி வசூலிப்பவராக ஜானை யோசித்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் துணிந்தார்.வேலையைத் துறந்தார். பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை வந்து விட்டபோதிலும் இனி இசைதான் வாழ்க்கை. அதுதான் வழி . ஜானைப் போலவே நகலிசைக்கலைஞர்கள் பலரும் “ வேண்டுமானால் வெட்டிக்கொள்... “ என்று பலிபீடத்தில் தலைவைத்தவர்கள் தான்.

   நகலிசைக்கலைஞர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக ஒலிபரப்ப வேண்டியிருக்கிறது. உருளைக்கிழங்கோ போண்டாவையோ, எண்ணெய் பச்சியையோ தின்று விட்டு ஒவ்வொரு முறையும் ஒன்று போலவே முக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் “கேலிப் பண்டம் “ ஆக்கி விடுவார்கள். திரைமேதைகளுக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவர்கள் தம் கட்ட அவசியம் இல்லை. தொழிற்நுடபம் வளர்ந்து விட்டது. ஒவ்வொரு வரியாகப் பாடிக் கூட சேர்த்துக் கொள்ளலாம். நான் சில நட்சத்திரப் பாடகர்களின் ‘லைவ் ஷோ “ க்களை பார்த்திருக்கிறேன். பார்த்திருக்க கூடாது என்று பிறகு எண்ணிக்கொண்டேன். சமீபத்தில் ராஜாவின் “ காதல் கசக்குதய்யா...பாடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து பாடியதைக் கேட்டேன். எனக்கென்னவோ அந்நிகழ்ச்சி ராஜாவின் ஆயுளைக் குறிவைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகவே பட்டது. உறுதியாக என்னையும் சேர்த்து ஒரு பத்தாயிரம் பேராவது அந்தப் பாடலை அவர்களை விட பிரமாதமாகப் பாடுவார்கள் என்று தோன்றியது. பெரும்பான்மையாக நகலிசைக்கலைஞனின் லட்சியம் திரையிசையில் மின்னுவதுதான் . ஆனால் எல்லோராலும் அங்கு சென்று விட முடிவதில்லை. அதற்குத் தேவையான சகலமும் இருக்கின்ற போதிலும் அவனிடம் ஏதோ ஒன்று குறைந்து விடுகிறது. அது இசை தொடர்பானதாக இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால் அவர்கள் கலைஞர்கள்தான்.. சிலர் மகத்தான கலைஞர்கள்..அதிலொன்றும் சந்தேகமில்லை. மற்றபடி “நகலிசைக் கலைஞன் “ என்கிற விளிப்பு  அடையாளத்தின் நிமித்தம் வழங்கப்படும் ஒரு தொழிற்பெயர் ... அவ்வளவே.

   டி.எம்.எஸ்,  பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீனிவாஸ், வாணிஜெயராம் போன்றோரால் “ சிம்ஹம் “ என்று அழைக்கப்பட்ட , கீபோர்டு ப்ளேயர் ராமேட்டன் என்கிற ராமச்சந்திரனுக்கு ஒரு போதாத காலம் வந்துவிடுகிறது. ரூ.500 க்கு வாங்கிய செல்போனுக்கு பில் கட்ட இயலவில்லை.  கட்டச்சொல்லி அறிவுறுத்தும் ரெக்கார்டிங் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர் அதை எடுக்கவே இல்லை. தன் கண்ணாளனுக்கு என்னவோ சிக்கல்.. நாமே அதைத் தீர்த்து வைத்து விடலாம் என்று முடிவுசெய்த அவர் தர்மபத்தினி இந்த முறை போனை எடுத்து விடுகிறார்.

“ ஹல்யோ ஆரா ...
ஒரு பெண் குரலில் அறிவுறுத்தல்கள் துவங்குகின்றன.
“ அது அவருக்கு கச்சேரி இல்லம்மா...இரிந்நா அவுரு கெட்டிடும்..
மறுமுனையில் பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள்.
“ ஆ...செரிம்ம்மா...
“ ஆங்.. கெட்டிடும்...
“ என்னம்மா ந்நீ... இங்ஙன , ஞான் இத்தர ச்சொல்லிட்டும் அதையே சொன்னா எப்பிடியாக்கும்... கச்சேரி இல்லம்மா..இரிந்நா அவுரு கெட்டிடும்... “
பார்க்க பாவமாக இருக்க  கடைசியில் அது ரெக்காட்டிங் வாய்ஸ்...என்று சொல்லி தன் மனைவியை சாந்தப்படுத்துகிறார் ராமேட்டன். ஒரு நகைச்சுவை காட்சி போலவே சொல்லப்படிருக்கும்  இக்கட்டுரையில் துக்கத்தின் சாயலே இல்லை.
” .... இவ்வளவு நேரமும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சேச்சியின் முகம் போன போக்கைப் பார்த்து ஏட்டனுக்கு நிலைகொள்ளாத, முகம்கொள்ளாத சிரிப்பு. சேச்சிக்கும் ...”  இப்படி முடிந்து விடுகிறது கட்டுரை.

   பெருந்துக்கம், ஆறாத கண்ணீர், ஆழ்ந்த கசப்பு என்றெல்லாம் ஜான் அங்கு எதையும் எழுதி வைக்கவில்லை. அவ்வளவு தானா? அவ்வளவு தானா ? என்று நாம் தான் பதறுகிறோம். இவ்வளவுதான் சொல்வாயா இதை...? என்று அவர் சட்டையை பிடித்து உலுக்குகிறோம். அதில் அவர் மேல் பட்டன் தெரித்து விடுகிறது. அங்கு அக்கட்டுரை “ அமரகாவியம் “ ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றை எழுதிய ஜான், இன்னொரு இடத்தில் “ அந்தச் சிரிப்புக்கு உள்ளிருப்பது வலியன்றி வேறென்ன தோழர்களே ... “ என்று கட்டுரை வடிக்கத் துவங்கும் போதுதான்  நமக்கு சப்பென்று ஆகிறது.

 ஜான் தான் முதன்முதலாக பாடிய அனுபவத்தை முன்னுரையில் சொல்லி இருக்கிறார்.. அதிலிருந்து எனக்கு ஒரு ஞானம் கிட்டியது. அவர் முதன் முதலாக பாடிய பாடல் வருஷம் 16 படத்தில் இடம் பெற்ற  “ பழமுதிர்ச்சோலை உனக்காகத் தான் “ பாடல். ஜானின் பேரதிர்ஷம் அது ஒரு பறக்கும் ஹம்மிங்ஹோடு துவங்குகிறது.  ஜான் எழுதுகிறார்..
“ நடுங்கும் கால்களை உதறிக் கொண்டேன். “ வாழ்த்துக்கள் தம்பி ! “ என்று சொல்லி மைக்கை என் கையில் கொடுத்தார் சூரியண்ணன். ஓன்.. டூ.. த்ரீ.. ஃபோர்  சொல்ல, என் செட்டைகள் விரிந்தன.
“ ஏஹே ..ஓஹோ..  லாலலா..
இங்கு எனக்கு கிடைத்த ஞானமாவது எந்த மகத்தான வரியாலும் இந்த ஹம்மீங்கை பதிலீடு செய்திருக்க முடியாது என்பது. “ ஏஹே.. ஓஹோ.. லாலலா ... “ வின் விடுதலையை , ஆனந்தத்தை எந்த வரியிட்டு நிரப்ப முடியும். ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் முதல் வரியை அர்த்தமற்ற ஆனந்தப் பரவசத்தில் துவங்குவது எவ்வளவு பொருத்தமானது ?
                



    உண்மையில் அமரகாவியங்களின் தொகைதான் நகலிசைக்கலைஞனின் வாழ்க்கை. ஆனால் கொண்டாடத்தான் நாதியில்லை. அதை கொண்டாடித் தீர்க்கத்தான் ஜான் இந்தப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  இந்நூல் மெச்சப்படுவதற்கான காரணங்களில் பிரதானமானது இதன் சுவாரஸ்யமான புனைவம்சம் என்றே நினைக்கிறேன். கதை சொல்வதில் பெருவிருப்பமுடைய ஜானின் எழுத்தில் கதைகள் இயல்பாகவே கலந்து விட்டிருக்கின்றன. 
தாள வாத்திய கலைஞர் ஒருவரைப் பற்றிய கதை ஒன்று உண்டு...
 “ டொக்... அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல எந்த நேரத்துல எந்த வடிவத்தில வரும்னு சொல்ல முடியாதுங்க.. டொக்.. இது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கிற ஒருதலை ராகமில்லைங்க.. அனைவருக்கும் கிடைக்க கூடிய ஆபூர்வராகங்க.. ஆனந்தராகங்க.. டொக்.. ‘

“ டொக்.. பூட்டான்.. பூட்டான்.. உங்களைக் கைவிட மாட்டான்.. ராயல் பூட்டான்.. டொக்.. இமயமலை அடிவாரத்திலே பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறு மாநிலம்ங்க..சிங்கார மாநிலம்ங்க..சிக்கிம் மாநிலம்.. பெரியோர்களே... சிக்கிம்...சிக்கிம்.. என்று கேட்டு வாங்குங்கள் நண்பர்களே... டொக்...

ஒவ்வொரு வாக்கியம் முடிந்த பின்னும் ஆட்டோவில் அந்த அறிவிப்பாளர் நாக்கை மேலண்ணத்தில் சப்புக்கொட்டுவது போலத் தட்டி “ டொக் “ ஒலிக்கச் செய்கிறார். அதைக் கேட்கும் போதெல்லாம் பரவசமாயிருக்கிறது ஸ்டீபனுக்கு..

 இப்படியாக தாளத்தால் ஈர்க்கப்படும் ஒரு சிறுவன் ஒருநாள் நிறைய தாளக்கருவிகள் புழங்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறான்.. அதாவது தனது கலைவாழ்வில் அடியெடுத்து வைக்கிறான்.. அந்த அறையில் பேங்கோஸ் வாசித்துக் கொண்டிருந்த அண்ணனொருவன்  வெளியே பரவசத்தில் நின்று கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து..
“ உள்ள வா தம்பி “ என்றழைக்கிறார்..
அங்கு ஜான் அந்த பழைய வசனத்தை திரும்ப எழுதிக்காட்டுகிறார்..
“ டொக்.. அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல... எந்த நேரத்துல.. எந்த வடிவத்தில... வரும்னு சொல்ல முடியாது.. “
என் கையிலிருந்த பென்சில் அந்த வரிகளை  அழுத்தி அடிக்கோடிட்டது. பிறகு அதை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிறகு அதற்குப் பக்கத்தில் “ முக்கியக்குறி “ இட்டது. அந்தவரி அற்புதமானதுதான் என்றாலும் அற்புதம் “ என்று சொல்ல முடியாது. முகநூலின் சரளமான புழக்கத்துக்கு பின் அற்புதத்தில் ஒரு அற்புதமும் இல்லாமல் போய் விட்டது. அது பரஸ்பரம் சொல்லிக்கொள்ளும்  பாசாங்கான உபச்சார சொல்லாக மாறிவிட்டது. முகநூல் அற்புதத்தின் பிரகாசத்தை மங்கிய மினிபல்ப் ஆக்கிவிட்டது.

     "எண்பதுகளிலேயே  கேரளம், தமிழகத்து மேடைப் பாடகனுக்குக் “கட்-அவுட் “வைத்துக் “ கலைசெல்வன் நைட் “ என்று நிகழ்ச்சி நடத்தி கொண்டாடியிருக்கிறது. அதற்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டரின் மீதே அந்த மகாகலைஞன் போதையில் படுத்துக் கிடந்தான்...
 இது கலைச்செல்வன் என்கிற பாடகரின் கதை. அவருக்கு என்ன குறைந்தது? எதை நிரப்பிக்கொள்ள அவர் இவ்வளவு குடித்தார்? இதற்கான காரணம் எதையும் கட்டுரை சொல்லவில்லை. “ வெறும் பழக்கமாக “ கூட இருக்கலாம். அந்தக் காரணமே போதுமானதுதான். ஏனெனில் “பழக்கம் “ வேறெந்த துக்கத்திற்கும் குறைந்ததல்ல.

      ஒரு இடத்திற்கு அந்த மனிதன் போய்ச் சேருமுன்பே அவன் சாதி போய்ச் சேர்ந்து விடும் என்று சொல்லப்படுவதுண்டு. கலைச்செல்வன் நமது சாதி அடுக்கில் ஆகக் கீழே கிடக்கும் “ அருந்ததியர் “ இனத்தை சேர்ந்தவராக இருந்திருக்கிறார். ஆனாலும் கொண்டாடப்பட்டிருக்கிறார். கலை இழிவுகளை கடக்கவல்லது என்பதை நாமும் நம்புவோம்.

            



   சிவாஜிக்கு கட்-அவுட் வைக்கலாம். லாட்டரிசீட்டு வீசலாம். தோரணங்கள் கட்டலாம். அவர் பெயரில் நீர்மோர் ஊற்றவோ, நிழற்குடை அமைக்கவோ செய்யலாம். மகனுக்கு எஸ்பி செளத்ரி என்று கூட பெயரிட்டுக் கொள்ளலாம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து “ நானும் சிவாஜி தான் “ என்று கிளம்பும் போதுதான் சகல கேடுகளும் கூடவே கிளம்புகின்றன. ஆனால் சிவாஜிகளால் எப்படி சும்மா இருக்க முடியும் ? சிலருக்காவது ஓரிரு வருடங்களில் தான் சிவாஜி இல்லை “ கருப்பணன் ‘ தான் என்று தெரிந்து விடுகிறது. சிலரோ மரணப்படுக்கையிலும் சிவாஜியைப் போலவே முனகிய படி அவரைப் போலவே இரும முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கலையின் அழைப்பு அவ்வளவு வசீகரமானது. புறந்தள்ள இயலாதது. தன்னை கலைஞன் என்று கருத்திக் கொள்பவனை நோக்கி அது ஒரு சிறுமுறுவல் பூத்துவிட்டு போய் விடுகிறது. அந்த சின்னஞ்சிறு முறுவலுக்கு அவன் தன் வாழ்வையே பணயம் வைக்கிறான்.

  ஜானுக்குள் ஒரு துடுக்குத்தனமான சிறுவன் இருக்கிறான். “ அவர் சாதாரணமானவரல்ல...ஸ்பெஷல்ரணமானவர் “ போன்ற வரிகளை அந்தப் பையன்தான் எழுதுகிறான். உணர்வு பெருக்கொடு எழுதப்பட்டிருக்கும் கடைசி கட்டுரைக்கு “ திம்ஸூ “ என்று பொறுப்பற்று தலைப்பிட்டிருப்பதும் அந்தப் பையனின் சேட்டைகளில் ஒன்றுதான். ஜான் அந்தப்பையனிடம் கவனமாக இருக்க வேண்டும்.தனக்குத்தானே சிரித்துக்கொள்ளும் சில அற்பநகைச்சுவைகளிடமும்.

                          நன்றி : காலச்சுவடு - ஜனவரி 2017

     நகலிசைக்கலைஞன் - ஜான்சுந்தர்- காலச்சுவடு பதிப்பகம்

பெருமூச்சின் புயவலி

$
0
0

                                   





பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு
என்னோடு சண்டையிட  வந்தது.
நான் அதனோடு  நடனமிட்டேன்

அது வனமிருகத்தின்  வாயால்
அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது
நான் அதனுடன்
நிதானமாக உரையாடினேன்

அது  தன்  தலையால்
என் நெஞ்சை உடைக்க வந்தது
நான் சற்றே விலகிக் கொண்டேன்

என்  இதழ்க்கடை மலர்  கண்டு
அதன்  சித்தம் கலங்கி விட்டது


கடைசியில் 
ஒரு மல்லன் 
தன் புயவலியைக்  காட்டுவதைப் போலே,
பொறாமை 
சட்டையைக் கழற்றி  எறிந்து விட்டு 
அதன்  ஏக்கங்களைக்  காட்டிக் கொண்டு  நின்றது.
அது கண்டு
நான் காலொடு மண்டு விட்டேன்.

பரட்டைத்தலை அன்பு

$
0
0
                                           
 



தெருமுக்கில் குந்தி 
பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு
நீ பார்க்கும் போது
அது பீடியைக் கீழே எறிவதில்லை
நீ காணும் போது எறிய வேண்டும் 
என்பதற்காகவே
அதைப் பற்ற வைப்பதுமில்லை


ஒரு நிமிடம் முன்புதான்
அது ஒரு குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவியது
அதற்குத் தெரியும் ஒரு நிமிடத்தில்
நீ வந்து விடுவாயென.
அதற்குத் தெரியாததோ
ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம்


அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே
கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே
கிளிப்பசையிலிருந்து  மென்கட்டச் சட்டைகளுக்கு மாறும் முன்பே
அதை கால்சட்டைக்குள் செருகி விட்டுக் கொள்ளும் முன்பே
கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே
பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச் சீராக்கும் முன்பே
அவசர அவசரமாக 
அதற்கு அன்பு வந்து விட்டது


நேர்த்தியற்ற அன்பு
உன்னை முத்தமிடுகிறது
அது இந்த உலகத்தில்
இது வரை யாராலும் இடப்படாத ஒரு முத்தம்
ஆனாலும் என்ன,
கடைவாயில் கொஞ்சமாக  சல்லொழுகி விட்டது
சல்லொழுக்கும் நேர்ந்தே  அதன் முத்தம்.


                                          நன்றி  : குங்குமம்  வாரஇதழ்









இப்போதோ...

$
0
0



நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன்...
உண்மையை 
அவ்வளவு பக்கத்தில் போய் 
பார்க்காதே என்று
இப்போதோ
தலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்.

இன்புறுத்தல்

$
0
0
                       
     

இந்தக் கொடும் பனிக்காலம்
இப்படி
கொட்டித் தீர்ப்பதெல்லாம்
நம் தேநீரை
மேலும் கொஞ்சம்
சுவையூட்டத்தான் தம்பி !


சிறுமீ

$
0
0

                                 





சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சமீபத்தில் சமைந்த
ஒருத்தியின்
சமைப்புடன்
விளையாடிப் பார்க்கிறது
ஒரு தப்பட்டைக் குச்சி

                                                       நன்றி : ஆனந்த விகடன்

Viewing all 790 articles
Browse latest View live