↧
நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை
↧
உய்யடா ! உய்யடா ! உய் !
சுகுமாரன்- 60
” அள்ளி கைப் பள்ளத்தில் தேக்கிய நீர் “ என்று துவங்குவதற்கு பதில் இந்தக் கட்டுரையை துவங்காமலேயே இருக்கலாம். ஒவ்வொரு கவிஞனின் தலையிலும் நாம் ஒரு கவிதையை ஒட்ட வைத்திருக்கிறோம். அப்படி சுகுமாரனின் நெற்றியில் ஒட்டப்பட்டிருக்கும் கவிதை இது.. பாவம் நாம் அதை விட்டு விடுவோம். சுகுமாரன் வேறு சில கவிதைகளையும் எழுதியுள்ளார். அதைப் பார்க்கலாம்.
நவீனக் கவிதையை ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதில்லை என்று எனக்குச் சொல்லித் தந்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரது மொழி சரளமானது.அதன் எளிய உருவிற்கும், சப்த ஒழுங்கிற்கும் ஒரு அரவணைக்கும் தன்மை இருக்கிறது. புத்தகத்திலிருந்து தலையை திருப்பிக் கொள்ளும் படி கொடுங் கசப்பூட்டும் வரிகளை அவர் எழுதியிருந்தாலும் அதன் சங்கீதம் நம் நெஞ்சில் இனிக்கவே செய்கிறது.
“ விரல்கள் மழுங்கிய தொழு நோயாளி முகந்த
ஓட்டைக் குவளை நீர் – இந்த வாழ்க்கை “
என்கிற வரியையும்,
“ நான் காளவாயிலிருந்து வெளியேறிய பெருமூச்சு ”
என்கிற வரியையும் வாசிக்கும் ஒரு உயிர் கொள்ளும் ஆறுதல் அல்லது பதற்றம் கவிதைச் செயல்பாட்டின் முக்கியமான அம்சமாகும். அவரது ஆரம்ப காலக் கவிதைகள் மிகவும் உக்கிரமான படிமங்கள், உவமைகளைக் கொண்டவை.எனினும் அவை வாசகனை விரட்டவில்லை மாறாக அணுக்கமாக்கின. இருப்பின் வாதையை துளியும் கருணையற்ற சொற்களில் எழுதிக் காட்டியதின் மூலம் , வறண்டு தூர்ந்திருக்கும் மனித மனங்களில் கொஞ்மேணும் கருணையை கசிய விட அவர் விரும்பினார்.
நம்மை விதவிதமாக தண்டிக்கும் கடவுளை பதிலிற்கு விதவிதமாக தண்டிக்கும் போக்கு நவீனக் கவிதையில் ஒரு கூறாக இருந்து வந்திருக்கிறது. இவரது கவிதைகளிலும் இதைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் கடவுள் பெருச்சாளியின் வயிற்றில் செத்துப் போகிறார். அவரது மகுடத்தை பேய்கள் பறித்துக் கொள்கின்றன.அவர் செவிடாகவும், புருவம் நரைத்த கிழவராகவும், மண்டையோடாகவும் காணக் கிடைக்கிறார். கபாலீஸ்வரரை சாக்கடை அள்ளும் கபாலியோடு சேர்ந்து புகைபிடிக்க வைக்கிறார் சுகுமாரன்.
இருப்பின் துயத்திலிருந்து தப்பிக்க இவர் சரண்டைவது இசையின் தாய்மையை. இவரது கவிதைகளில் இசை குறித்த சித்திரங்களை நிறைய காண முடிகிறது.
வயலினிலிருந்து பெருகிய நதியில் மிதந்த
தோணியில் ஓர் இடம்
( கோடைக்காலக் குறிப்புகள் )
யேசுதாஸுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கிற கவிதையின் ஒரு வரி...
கூரையடியில் கொடியில் அமர
அழைக்கழியும் குருவி
( இசை தரும் படிமங்கள் )
புணர்ச்சியைக் கூட ” உடலின் சங்கீதம் “ என்றே இவர் எழுதுகிறார்
.
என் வாழ்வில் நான் பொய்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன். உண்மையின் பளீரிடலைக் காட்டிலும் பொய்மையின் மென்னிருளிள் நான் அதிக கதகதப்பை உணர்ந்திருக்கிறேன். பொய்யே என் அன்னை. அதுவே என் தாய்மடி. அதன் தாலாட்டில்தான் என் ஜீவன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. இன்புற்றுக் களி கூர்கிறது. சுகுமாரன் பொய்களைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறார். “பொய்ச் சிறப்பு “ என்கிற தலைப்பு வள்ளுவனின் “ வான் சிறப்பு “ அதிகாரத்தை நினைவூட்டுகிறது. “ நீரின்றி அமையாது உலகு “ என்பது போலவே பொய்யின்றி அமையாது என் உலகு... நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால் “நம் உலகு “ என்றும் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு கவிதைகளிலும் ஒரு மெல்லிய குற்றவுணர்ச்சியும் சேர்ந்தே ஒலிக்கிறது..
பொய் எப்படி சொல்கிறேன்?
அலகு குத்திய நாக்கசைத்து...
என்று எழுதுகிறார். 20 ஆம் நூற்றாண்டு கவிதையில் இருக்கும் இந்த அலகை 21 ஆம் நூற்றாண்டுக்காரர்களான நாங்கள் பிடிங்கி தூர எறிந்து விட்டோம். நாங்கள் உண்மையை விட இரண்டு மடங்கு உறுதியுடன், பிசிறு தட்டாமல், ஸ்ருதி பிசகாமல் “ கேஸ்வலாக “ பொய் சொல்லப் பழகிவிட்டோம் என்பதை அவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கவிதையை என் வாசிப்பின் பால்யத்தில் வாசித்து போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது நினைவிருக்கிறது. தேவையற்ற குழப்பங்களிலிருந்தும், அறச் சிக்கல்களிலிருந்தும் இக்கவிதை என்னை விடுவித்து விட்டது. ஒருவன் பொய்யும் பேசிக் கொண்டு எழுத்தாளனாகவும் வாழலாம் என்பதை அறிந்து கொண்ட போது அவ்வளவு விடுதலை பெற்ற மனிதனாக என்னை நான் உணர்ந்தேன்.
திருகலற்ற, எளிய உரையாடல்களின் மூலம் வாசகனிடம் பேசுவதையே இவர் விரும்புகிறார். ஒரு மருத்துவ அறிக்கையின் பாவனையிலிருக்கும் கவிதை ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமானது...
கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்
கண்ணே
சகல நோய்க்கும் காரணம்
இந்தக் கவிதையை என் தோழி ஒருத்திக்கு வாசித்துக் காட்டிய போது அவள் சொன்னாள் “ நல்லாருக்கு.. உனக்குனே எழுதுன மாதிரி இருக்கு ... “
” அன்பே ! அப்படிச் சொல்லாதே.. இது உனக்கும் சேர்த்து எழுதப் பட்டதுதான் ... ஒட்டு மொத்த மானுட குலத்துக்குமானது ... “
” அன்பே ! அப்படிச் சொல்லாதே.. இது உனக்கும் சேர்த்து எழுதப் பட்டதுதான் ... ஒட்டு மொத்த மானுட குலத்துக்குமானது ... “
கண்களைப் பற்றிய இன்னொரு கவிதையும் முக்கியமானது..
கண்ணை விரி –
வானத்தை அளப்பதுடன்
மூத்திரத்தின் உப்பை அரிக்கும்
எறும்புகளையும் மொய்க்க.
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் / ஒரே வீட்டிலும் / ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்... என்று சொல்லும் சுகுமாரனின் கவிதைகளில் பெண்கள் கணவர்களை வெளியே தள்ளி தாழிட்டதும் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றுகிறார்கள். அவர்களின் ஷவர்களிலிருந்து வன அருவி கொட்டுகிறது. அவர்கள் அந்த விடுதலையில் திளைக்த் திளைக்க நீராடுகிறார்கள். ஆண்கள் அவ்வப்போது “ பரோலில் “ போய் காத்லித்து விட்டு அப்பாவியைப் போல் வீடு திரும்புகிறார்கள். “ பரோல்” என்கிற தலைப்பே நிறைய விசயங்களைப் பேசி விடுகிறது..
அவ்வப்போது
பரோலில் வெளிவந்து
உன்னோடு காதல் செய்வதில்
குற்றமுணர்கிறேன் பெண்ணே !
எனவே
என்னை நீ இழந்து போவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை
............................................................
....................................................................
அடிக்கடி பரோல்
அனுமதிக்கப்படுவதில்லை பெண்ணே
என்னை நீ இழந்து போவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை
ஆபூர்வமான சித்தரிப்பு கொண்டவை சில வரிகள்..
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
( பூனை )
உன் பெயர் –
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
( உன் பெயர் )
என்கிற வரி அந்தக் கடிகாரம் போலவே துல்லியமாக ஒலிக்கிறது.
மூட்டைப் பூச்சியானதால்
ரத்தம் குடிக்கிறோமே தவிர
ரத்தம் குடிப்பதற்காய்
மூட்டையாகப் பிறக்கவில்லை.
( வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு )
என்கிற ஒரு கவிதையின் இடைவரிகள் என்னளவில் தனிக்கவிதையாகும் தகுதியுடையது.
இவரின் சில கவிதைகள் தேவையற்று நீள்வதாக எனக்குத் தோன்றுகின்றன.பேசி முடித்த பின்னும் பேசுகின்றன. சில கவிதையின் மையப்புள்ளியை விட்டு விலகி கொஞ்சம் வேறு கதைகள் பேசுகின்றன. மொழியை லகுவாக்குவதன் உபவிளைவாக இதைக் கருதலாம் அல்லது அடிக்கடி அவர் கைக்கொள்ளும் ஒரு வித உரையாடல் பாணியின் விளைவு என்றும் கொள்ளலாம். சுகுமாரனின் நிறைய கவிதைகளில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் எதையோ ஒன்றைக் கேட்கிறார். இங்கு அவர் கொஞ்சம் விளக்க முற்படுகிறார். இந்த உரையாடல் தன்மை சமயங்களில் ஒரு வித “ கச்சிதமின்னையை “ உருவாக்கி விடுகிறது..
உதாரணமாக ”பேபி ஸார் ” கவிதையை பார்க்கலாம்...
பேபி சார்
எல்லோரையும் போல
எப்போதும் தன்னை
பேபி சார் என்றே சொல்லிக் கொள்கிறார்
அழைத்து விசாரித்தால்
தொலைபேசிப் பதில் :
“ ஆமாம், நான் பேபி சார்தான் பேசறேன்..
தட்டலுக்கு பதில் கேட்டால்
வாசற் குரல் :
“ ஆமாம், நாம் பேபி சார்தான் வந்திருக்கேன் “
“ ஆமாம், நான் பேபி சார்தான் பேசறேன்.. ” , “ ஆமாம், நாம் பேபி சார்தான் வந்திருக்கேன் “ என்கிற பதில்களே இந்தக் கவிதைக்கு போதுமானது என்று தோன்றுகிறது. அதற்கு முந்தைய வரிகள் அவசியமற்றவையாகவே தோன்றுகின்றன.
“ அன்றிரவு “ என்கிற தலைப்பில் மதவெறிக் கும்பலிடம் சிக்கி நிர்வாணமாக்கப்படும் ஒருவனைப் பற்றிய கவிதை ஒன்று இருக்கிறது. இதே விசயம் பற்றி கட்டுரை ஒன்றையும் சுகுமாரன் எழுதி இருக்கிறார். எனக்கு கவிதையை விட கட்டுரை பிடித்திருக்கிறது. “ பலிக்கோழை “ கவிதையின் நீளம் உறுத்தினாலும் நவீன யுகத்தின் குறிப்பிடத் தகுந்த அரசியல் கவிதை இது.
இவரின் கவிதைகளில் காதலும், காமமும் திரும்பத் திரும்ப பேசப் படுகின்றன. இவ்விரண்டையும் பிரிக்கும் கோடு அவ்வளவு திடமானதல்ல என்பதையும் சொல்லி விட வேண்டும். காதலைக் காட்டிலும் காமம் கூடுதலாகவே பேசப் பட்டுள்ளது. இவர் கடலை குறித்து எழுதினாலும், நதியைக் குறித்து எழுதினாலும், கபாலியைப் பற்றி எழுதினாலும், காளியைப் பற்றி எழுதினாலும் அதில் காமம் கலந்து விடுகிறது. இது தவிர தனியாக வேறு காமம் பற்றி எழுதுகிறார்.ஆனாலும் இவரின் கவிதைகளில் பெண் வெறும் இச்சைப் பண்டமல்ல. பெண்னைக் குறித்தான அங்க வர்ணனைகளை பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது.ஸ்பரிச மின்னல், இதழ்ச் சுனை , நாபிச்சுழல் போன்ற உருவகங்களே காணக்கிடைக்கின்றன. இவர் கவிதைகளில் காமம் என்பது ஒருவர் மற்றொருவரைச் சரணடையும் நிலம். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நிரப்பிக் கொள்வது. இயல்பானதும், அவசியமானதும், மதுரமானதுமான ஒரு உயிர்ச்செயல்பாடு.
“ சலமழப் பேழை ; ஊத்தைப் புன் தோல்
நாற்றப் பாண்டம் ; பீற்றல் துண்டம்
மாயா விகாரம் ; மரணப் பஞ்சரம்
நீரில் குமிழி ; நீர் மேல் எழுத்து
என்றெல்லாம் சித்தர்கள் வசைபாட , சுகுமாரனோ
“ பழகப்பழக பெண்
உடல் மட்டும் ஆவாளா ?
முட்டாளே , நான்
மழையில் திளைக்கும் பெரு நிலமில்லையா ?
என்று திருப்பி ஏசுகிறார்.
“ஈரம் கசிய விரியும் என் மழிக்கப்படாத உறுப்பு
சிறையல்ல , முட்டாளே ! தபோவனம் “
என்று ஏசுகிறது இன்னொரு பெண் குரல்.
” ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
உய்யடா ! உய்யடா ! உய் !...
என்று கூவிய படியே பட்டினத்தாரும், பத்திரகிரியாரும் சுகுமாரனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். ரொம்பவும் லாவகமாக அவர்களை வேறு திசையில் போக்கி விட்டு ஒரு பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொள்கிறார் இவர். பிறகு சீழ்க்கையடித்த படியே தன் ” தபோவனத்திற்கு “ திரும்புகிறார். சுகுமாரனின் கணக்கில் உய்ய வேண்டியது அவர்கள்தான்.
எனினும் சுகுமாரன் 60 வயதை தொட இருக்கிறார். இனிமேலாவது அவர் இது போன்ற சிற்றின்பச் சகதிகளிலிருந்து விடுபட்டு, பேரின்ப வெளியேகி , சிவானந்தத் தேன் பருகி, சும்மா இருக்கும் சுகம் காண எல்லாம் வல்ல கச்சி ஏகாம்பன் அருள் புரியட்டும் !
நன்றி : ஆத்மாநாம் அறக்கட்டளை
↧
↧
நகைமொக்குள் உள்ளது ஒன்று
மனுஷ்யபுத்திரனின் “ தித்திக்காதே “
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை.
மாயங்கள் புரிவதில் வல்லவனான இக் கள்வனின் கொஞ்சு மொழியும், கெஞ்சு மொழியுமன்றோ நம் பெண்மையை உடைக்கும் படை.
( திருக்குறள் –காமத்துப்பால் )
”சிலைகளின் காலம் , இடமும் இருப்பும்ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு...” என்பதாக என் நூல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறேன். இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை.ஆனால் அது அடங்கி விடவும் இல்லை. மனுஷை சமீபத்தில்தான் சந்தித்தேன். இது உண்மை... ஆனால் இந்த உண்மையைச் சொன்னால் இது ஏதோ அபாண்டமான பொய் போல தொனிக்கிறது. அவரை எனக்கு சுமார் 16 வருடங்களாகத் தெரியும் என்று மொக்கையாக ஒரு கணக்கு சொல்லலாம். ஆனால் அதுவும் பொய் போன்றே தொனிக்கிறது. உண்மையில் நான் என் பிள்ளைப்பிராயத்தில் எப்போது முதன்முதலாக மனங்கசந்து தனித்தழுதேனோ அப்போதிருந்தே எனக்கு மனுஷைத் தெரியும்.
எந்தக்காதலி என்னை மடியில் கிடத்திக்கொண்டாளோ, எந்தக்காதலி என் தலைகோதி விட்டாளோ, எவள் என் விசும்பலை முத்தத்தில் ஒற்றி எடுத்தாளோ, எவள் தன் மூக்கு நுனியால் என் மூக்கு நுனியை முதன்முதலாகத் தொட்டாளோ, எவள் என் காதுமடல்களை இனிக்கக் கடித்தாளோ அவளுக்கு “ நீராலானது “ என்று பெயர். அவளைத் தவிர வேறு யாரும் என்னை மடியேந்தவோ, முடிகோதவோ இல்லை. இவை உங்களுக்கு முக்கியமற்றைவைகளாக இருக்கலாம். எனக்கு முக்கியம். நேராக “ தித்திக்காதே “ தொகுப்பின் 19-ம் பக்கத்தை பாருங்கள்... என்று சொல்லி விடலாம். ஆனால் அது கயமை. என்னை “ என் இளைஞன் “ பார்த்துக்கொண்டிருக்கிறான். “ எவ்வளவு பெரிய வேடதாரி நீ.. எவ்வளவை மறைக்கிறாய் பார்... “ என்றவன் கேட்கிறான்.
தன் அந்தரங்கத்து காதலியை முத்தமிடக் களமிறங்கும் ஒருவனைப் பார்த்து அவன் அவ்வளவு கேலியாக நகைக்கிறான். அவனுக்கு துளி கூட பதற்றமில்லை. யாராலும் தன் முத்தத்தை பதிலி செய்து விட முடியாது என்பதில் அவனுக்கு அசைக்கமுடியாத இறுமாப்பு. “ இளைஞனே.. நீயே அவரது அந்தரங்கன்.. நான் வெறுமனே அவரது புத்தகத்தைப் பற்றி 10 நிமிடங்கள் பேசிவிட்டுப் போக வந்தவன். என் வழியின் குறுக்கே நின்று கொண்டு ஏன் தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடுகிறாய்..? “
இலக்கியம் சார்ந்தும், கவிதை சார்ந்தும் மிக அரிதாக எனக்கு சில திமிரான உறுதிப்பாடுகள் உண்டு. அதிலொன்று “ மனுஷின் கவிதைகள் குறித்து என்னை விட வேறு எவனாலும் சிறப்பாக பேசி விட முடியாது ..” என்பது. ஆனால் அந்தத் திமிர் என்னைப் போன்றே அநேக மனிதர்களிடமும் இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன். புதிதாக வாசிக்கத் துவங்கியிருக்கும் ஒருவனின் மனதிலும் இந்தத் திமிர் இயல்பாகவே குடியேறி விடுகிறது. ஏனெனில் மனுஷின் கவிதைப் புத்தகத்தை புரட்டும் ஒரு புது வாசகன் சில பக்கங்களிலேயே தன்னை அதில் பார்க்கத் துவங்கி விடுகிறான். அவனை பரவசம் பற்றிக்கொள்கிறது. அவன் கண்கள் நிறைந்து, நிறைந்து வழிகின்றன. “ இது நான்தான்.. இது நான்தான்... “ என்று கத்திக்கொண்டே நடுரோட்டில் ஓட வேண்டும் என்று தோன்றிவிடுகிறது அவனுக்கு. அங்கு பிடிக்கிறது அவனுக்குச் சனி.
” தித்திக்காதே “ தொகுப்பில் 2016 -ம் ஆண்டில் அவர் எழுதிக்குவித்த 186 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதை விட இரண்டு மடங்கு கவிதைகளையும் அவர் இதே ஆண்டில் எழுதியிருக்கிறார். அவை இரு வேறு நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. தித்திக்காதே தொகுப்பின் கவிதைகளை காதல் கவிதைகள் என்று ஒரு வசதிக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம். உண்மையில் மனுஷின் அநேக கவிதைகளும் காதல் கவிதைகள்தான் என்பது என் எண்ணம். ஒரு காதலியின் முன் கசிந்துருகுவது போல் தான், காதலியின் முன் கண்ணீர் மல்குவது போல் தான், அவள் முன்னே கைநரம்பை அறுத்துக்கொள்வது போல் தான் அவர் அநேக கவிதைகளை எழுதுகிறார். சமயங்களில் முத்தஞ்செய்கிறார். சமயங்களில் கடித்து வைக்கிறார். ஒரு ” அந்தரங்கத்தின் கிசுகிசு “ அவரது கவிதைகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் வழியே அவர் இன்னொரு மனத்தின் ரகசியத்தை மிகச்சரியாக சென்று தொட்டு விடுகிறார். இந்த அந்தரங்கத்து கிசுகிசுக்களின் வழியே தான் அவரை நோக்கி எண்ணற்ற “ லூஸ்ஹேர்கள் “ படையெடுத்து வருகின்றன.
பெருந்தவிப்பின் உக்கிரத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட கவிதைகளுக்கே உரிய சூடு இதில் உண்டு. இதன் உபவிளைவாக சில கவிதைகள் ஒரு வித “ கச்சிதமின்மை “யுடன் வெளிப்பட்டுள்ளன.சில கவிதைகளை நீக்கியிருக்கலாம் என்றும், சில கவிதைகளை முடித்திருப்பதற்கும் சற்று முன்பாகவே முடித்திருக்கலாம என்றும் தோன்றுகிறது. உதாரணமாக “ நீ என்னை உணரச்செய்யும் விதம் “ கவிதையில் வரும் இடை வரிகளான..
“ அவனது நடனம் / அவனைக் கொன்று விட்டது
ஒருவர் பிரபஞ்சத்தின் விளிம்புகளுக்கு
நடனமாடிக் கொண்டே செல்லலாம்
என்று நினைக்கக் கூடாது.
சட்டென அந்தப் பக்கம் / விழுந்து விடுவோம் ... “
என்கிற வரிகள் எனக்குப் போதுமானவை. ஆனால் அவருக்கு போதவில்லை. அதைச்சொல்ல அவர் அக்கவிதையை எழுதவும் இல்லை. நின்று நிதானிக்க அவருக்கு நேரமில்லை. நின்று நிதானித்திருந்தால் இவ்வளவு கவிதைகளை எழுதியிருக்கவும் வாய்ப்பில்லை.. கனகச்சிதம் என்று சொல்லவும் நிறைய உதாரணங்கள் உண்டு..
அன்பைத்தின்னுதல்
சாப்பிட உனக்கு
என்ன பிடிக்கும் ?
அன்பாய்த் தரும்
எதையும்
சாப்பிடப் பிடிக்கும்.
அன்பையே சாப்பிட
அதைவிடப் பிடிக்கும்.
தூய்மை தரும் தனிமை
உன் அன்பை
உன் காதலை
இவ்வளவு பரிசுத்தமாக
வைத்துக் கொள்ளாதே
என்னால்
அதைக் கூச்சமின்றி
புழங்க முடியவில்லை.
இயல்பாகவே நான் மனுஷின் கவிதைகளிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன்.” வரவில்லை“ என்பதற்கும் “ வரவேயில்லை “ என்பதற்கும் இடையே ஒலிப்பது வெறும் ஏகாரமல்ல என்பதை அவரிமிருந்து தான் கற்றுக் கொண்டேன். “ ஒரு “ என்கிற சாதாரணச் சொல் எவ்வளவு சங்கீதமானது என்பதையும். அவரது பல கவிதைகளில் இந்த “ஒரு“ வை நீக்கி விட்டு வாசிக்கவே இயலாது. வாசித்தால் வாய் கோணித்துக் கொள்ளும். உரைநடையை ஒடித்துப் போட்டது போன்று பாவனை காட்டும் இக்கவிதைகள், உண்மையில் பாடல்களின் சாயல்களால் ஆனவை.
வெற்று அழகில் மயங்கிப் பிதற்றும் சாதாரணக் காதல் கவிதைகள் அல்ல இவை. காதலின் லீலாவினோதங்களை கண்டடைய முயல்பவை. எவ்வளவு புரட்டினாலும் தீர்ந்துவிடாத காதலின் புத்தகத்தை முழுசாகப் புரட்டிப் பார்த்து விட பேராசை கொள்பவை. “ சூது கவ்வும் “ திரைப்படத்தில் மிகச்சரியான ஒரு தருணத்தில், மிகச்சரியாக ஒரு வசனம் வரும்... “ வாழ்றான்யா ... “ என்று. “ நகம் “ கவிதையை வாசிக்கையில் அவ்வசனத்தைச் சொல்லிக் கொண்டேன். இத்தனை இத்தனை கவிஞர்கள் தோன்றி காதலை இப்படி புரட்டிப் புரட்டி எடுத்தாலும் அதன் வசம் இன்னும் ஏதோ மிச்சமிருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்..
நகம்
நகம் வெட்டிக் கொள்வது
எனக்கு மிகவும்
பிடித்தமான செயல்
யாரோ ஒருவர்
என் கைகளைத்
தன் தொடை மேல் வைத்துக் கொண்டு
என் நகத்தைத் கவனமாகத் துண்டிக்கும் போது
அந்த நகம் உடையும் ஓசையில்
பிரியத்தின் சங்கீதங்கள் கேட்பது
எனக்கு மட்டும்தானா ?
அந்த நகங்களால்
பிரியத்தின் மென் இதழ்களை
சற்றே கிள்ளிப் பார்த்திருக்கிறேன்.
என்னால்
பிறருக்குக் கீறல்கள் ஏற்படும்
காலங்களில் எல்லாம்
எனக்கு நகம் வெட்டிவிடும் ஒருவரைத் தேடி
நான் தாமதிக்காமல் கிளம்பி விடுகிறேன்.
நான் நகம் வெட்டிக்கொள்ளும்
ஒவ்வொருமுறையும்
என் உடல் எடை
கணிசமாக குறைந்து விடுகிறது.
காதலின் சின்ன்ஞ்சிறு தருணத்தை கூட கவிதையாக்கி விட மனுஷால் முடிகிறது. உண்மையில் காதலில் சின்னஞ்சிறு தருணம் என்று ஏதேனும் உண்டா என்ன ? நகம் கவிதையை வாசித்து முடிக்கையில் தன்னியல்பாக எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. ”ஆஹா.. வெகு காலம் கழித்து நாமும் ஒரு காதல் கவிதை எழுதி விட்டோம் ... “ என்று அகம் மகிழ்ந்து போனேன். சில பக்கங்களைப் புரட்டினால் அந்தக் கவிதையையும் மனுஷே எழுதி வைத்திருப்பதை கண்டேன். மனமொடிந்து போனேன்.. “ மஹா ப்ரபொ ... நாங்களும் காதலிக்கிறோம்... எங்களுக்கும் கொஞ்சம் கவிதைகள் வேண்டும்.. “
ஒரே ஒரு ஆசுவாசம் தான் எனக்கு. காதலைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிற ஒருவனால் சத்தியமாக நிம்மதியாக காதலித்து விட முடியாது என்பதுதான் அது
.
காதலைப் போலவே காமத்தின் வெவ்வேறு குணரூபங்களையும் நெருங்கிப் பார்க்கின்றன இக்கவிதைகள். தொகுப்பில் நிறைய ” ஹுக்குகள் “ காணக்கிடைக்கின்றன. ஹூக்குகளில் தானே மொத்த காமமும் முடிச்சிட்டுக் கட்டப்பட்டுள்ளது. மனிதனுக்கு அதை அவிழ்த்து,அவிழ்த்து தீர்ந்து விட்டதா என்ன ? மோகனரங்கனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..
“ களைந்த பின் / தேடி / ஏமாறுகிறேன்
உடுத்தி/ நீ / நடக்கையில்/ பிறப்பித்து
உலவவிட்ட இரகசியங்கள் ஒவ்வொன்றையும்.
உண்மையில் ஹூக்கை அவிழ்த்ததும் காமம் விடை பெற்றுக்கொள்கிறதா என்ன ? நான் இதில் சிறுவன்.. மனுஷைப் போன்ற அறிஞர்களிடம் இந்த சந்தேகத்தை விட்டு விடுகிறேன். ஹூக்குக்கு பதிலாக பொத்தானைப் பற்றிய வரியொன்று போகத்திற்கு நிகரான போதையை அளித்தது..
“ இறுக்கமான ஆடைகளிலிருந்து
மெல்லிய ஆடைகளுக்கு
மாறிக் கொண்டிருக்கிறாயா என்ன
ஒரு பட்டன் விடுபடும் ஓசை
ஒரு சிறிய துப்பாக்கி குண்டினைப் போல
என் மூளையில் வெடித்துச் சிதறுகிறது ....
( தண்ணீரைப் போல வந்தவளுக்காக )
” வாழும் வரை ராமச்சந்திர மூர்த்தியாகவே வாழ்ந்து மரிக்கக் கடவது.. “ என்று சபிக்கப்பட்ட ஜீவன்களின் மனதில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்த வல்லவை மனுஷின் சொற்கள்...
“ எதிர்பாராத
ஒரு ஸ்பரிசத்தை விடவும்
எதிர்பாராத
ஒரு முத்தத்தை விடவும்
சடாரென உதறும் கூந்தலின்
ஒரு நீர்த்துளி
என் இச்சையின் கதவுகளைப்
படபடவென வேகமாகத் தட்டுகிறது ...
( உதறும் கூந்தலில் உதிரும் நீர்த்துளிகள் )
இந்த ” சடார் சத்தத்தின் சவுக்கு வீச்சு “ என்னைப் போன்ற எளிய ஜீவன்களின் நெஞ்சில் வந்து விழுகிறது.
மனுஷய்புத்திரன் தன் எழுத்துக்களின் வழியே எனக்கு நிறைய தந்திருக்கிறார். பதிலுக்கு நான் ஒரு “ வாணி ஸ்ரீ ” யை அவருக்கு தந்து கணக்கை நேர் செய்து கொண்டேன். மிச்சமிருக்கும் கணக்கு என்பது பல்லிடைத் துணுக்கு. உண்மையில் என் வாணி ஸ்ரீ அவ்வளவு சோர்ந்தவளாக வீணையின் மேல் தலைசாய்த்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். .மனுஷ் தான் அவளைத் தொட்டெழுப்பினார். ”நீ ஒரு வாணி ஸ்ரீ.. இப்படி சோம்பித் திரியலாமா ? “ என்று அவர் தான் அவளை உற்சாகீ ஆக்கினார். பிறகு அவள் வீணையிலிருந்து மகத்தான நாதங்கள் எழுந்து வந்தன.
உண்மையில் அவளை என்னை விட நன்றாகவே பார்த்துக்கொண்டார் மனுஷ். அவளை முகநூல் முழுக்க பெருமிதத்தோடு உலவ விட்டார். அவள் நாளிதழ்களில் வந்தாள். சேனல்களில் பேசப்பட்டாள். இவ்வளவு சொகுசை அனுபவித்து விட்ட பின் , அவள் மீண்டும் வானம் பொத்துக் கொண்டு ஊற்றும் 42 A - வில் என் பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்து வருவாள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இனி “ அவள் இல்லை... வரமாட்டாள் ... நம்பாதே... “ என்று என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.
வாணி ஸ்ரீ கவிதைகளை குறித்த நண்பர் விஷால்ராஜா வின் கட்டுரை ஒன்று இப்படிச் சொல்கிறது...
“ நான் இதில் முக்கியமாக கவனிக்கிற விஷயம். மனுஷ் தன்னுடைய கவிதைகளில் பகடியை இவ்வளவு தூரத்திற்கு அனுமதிப்பது. அவர் சமீபமாக எழுதுகிற கவிதைகளில் வழக்கத்திற்கும் மாறாக அதிகமாக பகடியைப் பார்க்க முடிகிறது. மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் மட்டுமல்ல. இன்றைய தமிழ் கவிதைகளில் பகடி ஒரு அங்கமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு சிலரின் தனி அடையாளமாக இருந்த பகடி தற்போது ஒரு பொதுக் கூறாக மாறி விட்டதோ என்கிற எண்ணம் வருகிறது.. “
“ நீ இப்படி திடுதிப்பென
பஸ்சைப் பிடித்து வந்து இறங்கினால்
எனக்கு அலுவலகத்தில்
பெர்மிஷன் போடுவது
மிகவும் கஷ்டம் வாணி ஸ்ரீ ..... “
என்கிற வரிக்கு நான் வெடித்துச் சிரித்தேன். மனுஷின் வரியொன்றை வாசித்து விட்டு நான் வெடித்துச் சிரிப்பது அநேகமாக இது முதன்முறை என்றே நினைக்கிறேன்.
பகடிக்கவிதைகளில் விளையாட்டு உண்டு. ஆனால் அவை ஒருக்காலும் வெற்று விளையாட்டுகள் அல்ல. வாசகனை கிச்சுகிச்சு மூட்டுவது அதன் நோக்கமல்ல.அதற்கு ஒரு நகைச்சுவை துணுக்கு போதுமல்லவா? இன்னோரு மனிதன் இதே வரிக்கு தலையை தரையில் முட்டிக்கொண்டு அழுதிருக்கவும் கூடும் .அவனுக்கு உண்மையிலேயே பெர்மிசன் கிடைக்காமல் போயிக்கலாம். வாணி ஸ்ரீ யை பார்ப்பதற்கு கூட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்பதை விட, சிவாஜிகளின் வாழ்க்கையில் வேறு என்ன துயரம் இருக்க முடியும்?
இத் தொகுப்பில் ” பேன் புராணம் “ என்கிற ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“ மருந்துகளும் ஷாம்புகளும் வந்து விட்டன.
ஒரு முறை கூட
கரத்தால் பேன் பார்க்கப்பட்ட
ஆன்மிக அனுபவம் கிட்டாத
ஒரு தலைமுறையே வந்து விட்டது .... “
என்கிறது இதன் சில வரிகள்.. “ ஆன்மிக அனுபவம் “ என்கிற வரியை வெறுமனே நாம் சிரித்து விட்டுக் கடந்தால் அது நல்ல வாசிப்பல்ல என்பதே என் எண்ணம். உண்மையில் பேன் பார்க்கும் நிகழ்வின் மாயங்களைப் பேசுகிறது இக்கவிதை . ஒரு சாதாரண நிகழ்வாகத் தெரிகிற, எழுதினால் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்வின் புதிர்களை ஆராய விரும்புகிறது. அது என்ன விதமானதொரு விசித்திர அனுபவம் ? என்கிற கேள்வியை எழுப்பிப் பார்க்கிறது.
இவரது கவிதைகளின் மேல் “ கூறியது கூறல் “ என்கிற குற்றச்சாட்டு உண்டு. ஆம்.. மனுஷின் கவிதைகளில் அது உண்டு தான். அதாவது எல்லா கவிகளின் கவிதைகளிலும் ஒரு வித கூறியது கூறல் உள்ளது போலவே மனுஷின் கவிதைகளிலும் அது உண்டு.
முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.
முகைமொக்குள் உள்ளது ஒரு நறுமணம். அது போலே அவள் நகைமொக்குள் உள்ளது ஒரு குறிப்பு.
( திருக்குறள் – காமத்துப்பால் )
( தித்திக்காதே – மனுஷ்யபுத்திரன் – உயிர்மை பதிப்பகம் - விலை ; 330 )
↧
வார்த்தையில் வாழ்தல்
மனிதஇனத்தின் வாயிலும், எழுத்திலும் தொடர்ந்து பயின்று வரும் வரிகள் “ பொன் மொழிகள் “ ஆகி விடுகின்றன. பழமொழிகளும் இவற்றில் அடங்கும். இரண்டு எழுத்தாளர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இருவரின் சார்பிலும் மாறி மாறி நின்று “ வால்டேர்” வழக்காடுவதைக் காண முடியும். ஜி.நாகராஜன் பொன்மொழிகளைக் கேலி செய்யும் பாவனையில் எழுதிய ஒரு பத்தியில் உள்ளதுதான்...“ மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றுதான் சொல்வேன் ” என்பது. இப்போது அது ஒரு “பொன் மொழியாகவே” மாறி தீவிர புழக்கத்தில் இருக்கிறது.
எனக்கு பொன்மொழிகளின் மீது ஈர்ப்பு உண்டு. “அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும்” என்கிற பழமொழி படித்த கணத்திலிருந்து இன்று வரை என்னைத் தொடர்கிறது. ஆயினும் பொன்மொழிகளின் குணமும், கவிதையின் குணமும் ஒன்றல்ல. எனவே இக்கட்டுரை “பொன்னால் ஆன சொற்களை” பேசுகிறது.கூடவே பொன்மொழியின் இயல்பான “பலர் வாய்ப்படுதல்” என்கிற தன்மையையும் கணக்கில் கொள்கிறது.
இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய தொடர்ச்சியுள்ள நமது மொழியில் தகத்தகாயம் காட்டும் சொற்கள் ஏராளம். இந்த மூன்று பக்கத்தில் அவற்றை முழுவதும் சொல்ல இயலாது. எனவே சிலவற்றைப் பார்ப்போம்...
“ அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையு மிலமே.
தன் தந்தையான பாரியையும், தமது நிலமான பறம்பு மலையையும் இழந்து தவிக்கும் பிரிவுத்துயரில் “பாரி மகளிர்” பாடியது.. சிடுக்கற்ற எளிய ஐந்து வரிகள்.. ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” என்கிற சொற்ச்சேர்க்கையிலேயே ஏதோ ஒரு மாயம் இருக்கிறது போலும்? எல்லாப் பிரிவுகளுக்குமான ஏக்கத்தையும் தாங்கிக் கொண்டு இன்று வரை வாழ்வாங்கு வாழ்கிறது இக்கவிதை.
”கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
என்கிறாள் ஒளவை.
முதல் வரியை “ பொன் மொழி” என்றும், இரண்டாவது வரியை ” கவிதையின் பொன் மொழி “ என்றும் சொல்லலாம். வறுமையும், இளமையில் வறுமையும் ஒன்றல்ல என்று பிரித்துக் காட்டியதின் மூலம் எம் பாட்டி இதைக் கவிதையாக்கி விடுகிறாள்.மேல்நிலை வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று தேறி, ஒரு ஷூ வாங்கித் தரவில்லை என்பதற்காக கல்லூரிப் படிப்பையே பாதியில் நிறுத்திக் கொண்ட ஒருவனை எனக்குத் தெரியும்.
திருக்குறள் பள்ளித்தலத்திலிருந்து பேருந்துகளின் முகப்பு வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. வாழ்க்கையில் ? என்று கேட்காதீர்கள். “ சொல்லுதல் யார்க்கும் எளியவாம்...” என்று அய்யனே சொல்லி இருக்கிறார். “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை” என்று மங்களகரமாகத்தான் நாம் வாழ்க்கையை துவங்குகிறோம்.ஆனாலும் பாருங்கள், எவ்வளவு இழுத்துப் பிடித்தும் நிற்காமல் “வண்டி”ரோட்டோர புளியமரத்தை நோக்கியே ஓயாமல் பாய்கிறது. குறளில் பொன்னால் ஆனவை அதிகம். அவை மனிதருக்குத் தக்க மாறவும் செய்யும்.
“ அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை “
என்பதை நாம் தொடர்ந்து நம்புவோம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
” அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்கிற குறள் நமக்கு மனப்பாடம். ஆனால் அதன் அர்த்தத்தின் முன்தான் மானுடகுலம் மண்டையை சொரிந்தபடி நிற்கிறது.
கம்பனின் பாடல் ஒன்று... அசோகவனத்தில் சீதையை கண்டதைப் பற்றி அனுமன் இராமனுக்குச் சொல்லும் பாடல். பட்டிமன்றங்களில் கூறு போட்டு வித்தும் இன்னும் மிச்சமிருப்பது. எத்தனை நாவில் புரண்டெழுந்தாலும் அழுக்கடையாதது ...
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர் ;
அண்டர் நாயக! இனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயரும், என்று அனுமன் பன்னுவான்.
உண்மையில் இப்பாடலை முதன்முதலாக ஒரு பட்டிமன்றத்தில்தான் கேட்டேன். கண்டென் / கற்பினுக்கு அணியை / கண்களால் / என்று ஒவ்வொரு வார்த்தையும் நிரல்பட நிற்கும் கோலத்தைப் பற்றி பேச்சாளர் உருகி உருகிப் பேசினார். சீதையை என்று தொடங்கினால் அடுத்த வார்த்தை காணவில்லை என்று கூட வரலாம் அல்லவா ?அந்த ஒரு நொடி மயக்கமும், அது தரும் வேதனையும் கூட தன் தலைவனுக்குத் தகாது என்று எண்ணித்தான் “ கண்டனென்” என்று துவங்குகிறானாம் அனுமன். சரி .. கண்டது சீதையை என்றும் சொல்லவில்லை... “கற்பினுக்கு அணியை “ என்கிறான். சீதையை என்று மட்டும் சொன்னால் அவள் கற்பு நிலை குறித்த ஐயம் வருமாம்.. இப்படி விளக்கிக் கொண்டே போனார்.. எனக்கு நம்பும் முன்னே அழுகை பொத்துக் கொண்டது. அழுத பிறகு சந்தேகம் கொள்ளுதல் தகாது.
” கம்ப ராமாயணம் ” என்.சி.பி.எச் பதிப்பு இப்படி சொல்கிறது....
“ ‘ கண்டனென் ’என்ற சொல், ‘த்ருஷ்டா ஸீதா‘ என்ற முதல் நூல் தொடரைத் தழுவியது. ஆனால், அடுத்துள்ள ”கற்பினுக்கு அணியை”என்ற தொடர், ஸீதா என்கிற சொல்லைக் காட்டிலும் ஆழ்ந்த, சிறந்த, நுணுக்கமான பொருளை உடையதாகும் “
“ கண்களால் “ என்கிற சொல் அமைப்பிற்கு இவ்வுரை தருகிற விளக்கம் ஏற்கவே முடியாதபடி இருக்கிறது. இப்படி இன்னும் பலப்பலவாக இப்பாடலை விரித்து விரித்து விதந்தோதுவர் கம்பனடிப் பொடிகள்.
இன்று எங்கெங்கு காணினும் பாரதி. பாரதி சிட் பண்ட்ஸிலிருந்து பாரதி பரோட்டா ஸ்டால் வரை நான் பார்த்திருக்கிறேன். வெள்ளித்திரையிலிருந்து ஆட்டோ முதுகு வரை அவன் ஆட்சி நடக்கிறது. இன்று பாரதியின்றி ஒரு நாளைக் கூட தங்களால் கடக்க முடியாது என்பது போல் பாவனை காட்டும் தழிழ்ச்சமூகத்தால், அன்று அவனை காப்பாற்றி வைக்க இயலவில்லை. “ அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு” என்கிற அவன் வரியையும், அவன் வாழ்வையும் சேர்த்துவைத்து யோசிக்கையில் அவ்வளவு கசக்கிறது.
. பாரதியின் புகழ்பெற்ற வரிகள் பலவும் ”விநாயகர் நான்மணிமாலை” என்கிற வழிபாட்டுப் பாடலொன்றில் வருகிறது..
“ நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கு இனிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்:
சிந்தையே ! இம்மூன்றும் செய்.
உப்பு, புளி, மிளகாய் போன்ற அற்பப் பிரச்சனைகளை கணநாதன் பார்த்துக் கொள்வான். நீ வீட்டை விடுத்து நாட்டைப் பற்று மனமே என்கிறான்.
“ உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் ”என்கிற வரியோடு சேர்த்து ” கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் “ என்றெழுத நெஞ்சத்தில் நேர்மையும் துணிவும் வேண்டும்.
அவனது இன்னொரு கவிதை ...
விடுதலைப் பாட்டு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாய் நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றே?
யான் எதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்மின்: பாடுபடல் வேண்டா:
ஊன்உடலை வருத்தாதீர்: உணவு இயற்கை கொடுக்கும்:
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் !
பிரமிள் என்கிற பெயரோடு சேர்த்தே உச்சரிக்கப்படுவது அவரது ” காவியம் “ என்கிற கவிதை. ஆனாலும் “எல்லை”என்கிற கவிதை எதற்கும் குறைந்ததல்ல..
கருகித்தான் விறகு/ தீயாகும்
அதிராத தந்தி/ இசைக்குமா?
ஆனாலும்/ அதிர்கிற தந்தியில்/ தூசு குந்தாது
கொசு/ நெருப்பில் மொய்க்காது
ஒரு காலத்தில் எனக்கு சிடுக்கானவராக இருந்த ஆத்மாநாம் இன்று எளிய கவிஞராகி விட்டார். அதாவது “ இந்தக்காலம்” அவரது ஒவ்வொரு சொற்களையும் தெளிவாக விளக்கி விடுகிறது.
ஏதாவது செய்
ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப் படுகிறான்.
உன் சகோதரி
நடுத்தெருவில கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னை சும்மா விடாது...
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
பொன்னாலான மேலும் இரு கவிதைகள்..
சுண்டல்
கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்.
( கலாப்ரியா)
ஒரு காட்சியை, கடைசியில் இடம் பெறும் ஒரே ஒரு சொல்லால் கவிதையாக்கி நிலைநிறுத்தியும் விட்டது இக்கவிதை.
கையில் அள்ளிய நீர்
அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
( சுகுமாரன் )
காலப் பெருவெள்ளத்தில் துளியாய் மிஞ்சும் தனிமனிதனின் அகங்காரத்தை நோக்கி பல்லாண்டுகளாய் பேசி வருகிறது இக்கவிதை.
மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று..
குட்டி இளவரசியன் அறிதல்கள்
காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
“ நாளைக்கு மழை பெய்தது “
என்கிறாள் அமைதியாக.
அமைதியாக என்ன பேச்சு பேசிவிட்டாள் !
ஷங்கர்ராம சுப்பிரமணியனின் “ சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்” பலர் வாய்ப் பட்ட“ கவிதை. சென்ற வாரம் கூட தோல்வியுற்ற பாடகனொருவன் மனம் கசந்து, முகம் மலர்ந்து இக்கவிதையைச் சொல்லக் கேட்டேன். நான் இக்கவிதையின் குழந்தை.
சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்
ஒரு வேலைக்கும் பொருத்தமற்றவர் என
உங்கள் மேல் புகார்கள் அதிகரிக்க/ அதிகரிக்க
உங்கள் அன்றாட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு
உங்களுக்கு ஒரு எளிய பணி வழங்கப்படுகிறது.
ஊரின் புறவழிச் சாலையில் உள்ள
மிருகக் காட்சி சாலையின் சிங்கத்துக்கு
பல்துலக்கும் வேலை அது
காவல் காப்பவனும் நீங்களும்
கூண்டில் அலையும் பட்சிகளும் மிருகங்களும்
உங்கள் மனஉலகில்
ஒரு கவித்துவத்தை எழுப்புகின்றன
அதிகாலையில் பிரத்யேக பேஸ்ட்டை பிரஷில் பிதுக்கி
உங்கள் பணியிடத்திற்கு ஆட்வத்தோடு கிளம்புகிறீர்கள்
அதிகாலை
மான்கள் உலவும் புல்வெளி
உங்கள் கவித்துவத்தை மீண்டும் சீண்டுகிறது
முதலில் கடமை
பின்பே மற்றதெல்லாம் எனச்சொல்லிக் கொள்கிறீர்கள்
கூண்டை மெதுவாய்த் திறந்து மூலையில்
விட்டேத்தியாய் படுத்திருக்கும் சிங்கத்திடம்
உங்களுக்கு பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளேன்
நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று
விவரத்தை கூறி பிரஷை காட்டுகிறீர்கள்
ஒரு கொட்டாவியை அலட்சியமாக விட்டு
வாயை இறுக்க மூடிக் கொள்கிறது சிங்கம்
ஸபரிசம் தேவைப்படலாம் என ஊகித்து
தாடையின் மேல்புறம் கையைக் கொண்டு போகிறீர்கள்
சிங்கம் உறுமத் தொடங்கியது
கையில் உள்ள பிரஷ் நடுங்க
உங்களுக்கு பிரஷ் செய்வது
என் அன்றாட வேலை
அது எனக்கு சம்பளம் தரக்கூடியது
எவ்வளவு நாற்றம் பாருங்கள்
உங்கள் பற்களின் துர்நாற்றம் அது
சிறிது நேரம் ஒத்துழையுங்கள்
மீண்டும் சிங்கம் உறுமுகின்றது
அது பசியின் உறுமலாகவும் இருக்கலாம்
நீங்கள் மூலையில் சென்று அமர்கிறீர்கள்
காலையின் நம்பிக்கையெல்லாம் வற்றிப் போக
பக்கத்து கூண்டுப் பறவைகளிடம்
வழக்கம் போல
பணி குறித்த முதல் புகாரைச் சொல்லத் தொடங்குகிறீர்கள்
எனது வேலையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது சிங்கம்
பறவைகள் ஈ...ஈ...எனப்
புரிந்தும் புரியாமலும் இளித்தன.
கூண்டைச் சுற்றி மரங்கள்
படரத் தொடங்கும் வெயில்
வாயில் காப்போன் உங்களைப் பார்வையிட
தூரத்தில் வந்து கொண்டிருக்கிறான்.
மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச் செய்க ! நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக ! நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க ! நமது பாட்டு மின்னலுடைத்தாகுக !
நன்றி : அந்திமழை - மே-2017
↧
காணீர்!
39 வருடங்களாக
ஒழுக்கம், நன்னெறி
தார்மீகம், கண்ணியம்
வெங்காயம், மிளகாய்
கத்தரி, தக்காளி
எல்லாவற்றையும்
ஏத்திக் கட்டிக்கொண்டு
தார்மீகம், கண்ணியம்
வெங்காயம், மிளகாய்
கத்தரி, தக்காளி
எல்லாவற்றையும்
ஏத்திக் கட்டிக்கொண்டு
நன்றாகத்தான்
உருண்டு வந்தந்த வண்டி.
இந்தக் காலையில்
ஒரு சின்னஞ்சிறு மல்லிகை
தடுக்கி
அது நடுரோட்டில்
தலைகுப்புற
விழுந்ததைப் பாரீர்!
ஒரு சின்னஞ்சிறு மல்லிகை
தடுக்கி
அது நடுரோட்டில்
தலைகுப்புற
விழுந்ததைப் பாரீர்!
வெங்காயமும் நன்னெறியும்
சாக்கடைக்குள்
சாக்கடைக்குள்
↧
↧
பாசஞ்சர் இரயிலில் ஓர் எலி
ஒரு நல்ல கவிதையின் இடையே
குறுக்கிட்டு நச்சரித்தாள்
அந்தப் பிச்சைக்காரச் சிறுமி.
இப்போதெல்லாம்
கருணையும், கண்டிப்புமான
ஒரு முகத்திற்கு பழகியிருக்கிறேன்.
அதை அவளிடம்
காட்டித் திரும்புவதற்குள்
கவிதைக்குள் விளையாடிவிட்டது
ஒரு சுண்டெலி.
இரண்டு வரிகளை
இடம் மாற்றி வைத்துவிட்டதது.
அந்தக் கவிதை புரியாமல்தான்
அதைத் தலைமேல்
தூக்கி வைத்துக் கொண்டு
ஒரு சமோசா வியாபாரியைப் போல்
பெட்டி பெட்டியாக அலைகிறேன்.
↧
காந்தியம்
↧
லீலை
வெயில் வறுத்தெடுத்ததால்
பியர் பருகும் ஆசை துளிர்த்துவிட்டது
துளிர்த்த மறுகணமே
பெருமரமாகி பேயாட்டம் போட்டது
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த
சித்தப்பாவின் இதயத்துடிப்பை பிடித்து நிறுத்தி
அரைநாள் விடுப்பு பெற்றேன்.
வெயில் நன்று, அது வாழி!
சூரியன் எரிய எரிய
என் பியர் குளிர்ந்து வருகிறது
வெம்மையைப் போற்றுவோம்; அது குளிரை இனிப்பாக்குகிறது
வெயிலைப் பாடியபடி
பியரைப் பாடியபடி
மதுவிடுதிக்கு பயணமானேன்.
திடீரென முழு வானமும் இருட்டிவிட்டது.
என் உலகம் மொத்தமாய்த் தொங்கிவிட்டது.
மதுவிடுதியின் வாசலில் வண்டியை நிறுத்துகையில்
மூக்குநுனியில் ஒரு மழைச் சொட்டை உணர்ந்தேன்
சிப்பந்தி அருகில் வந்து
"என்ன வேண்டும் .."என்றார்.
"கொதிக்கக் கொதிக்க வெய்யில்"என்றேன்
↧
சின்ன குலுங்கல்
உலகம்
ஒரு சின்ன குலுங்கு குலுங்கிவிட்டு
இயல்புக்கு திருப்பி விட்டது.
சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது
எதில் அருந்தினால்
உன் தாகம் தணியுமோ
அந்தக் கண்ணாடி டம்ளர்.
ஒரு சின்ன குலுங்கு குலுங்கிவிட்டு
இயல்புக்கு திருப்பி விட்டது.
சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது
எதில் அருந்தினால்
உன் தாகம் தணியுமோ
அந்தக் கண்ணாடி டம்ளர்.
↧
↧
ஆயிரம் ஸ்தோத்ரம்
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில் மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன் ஐந்தாவது சந்தில்
19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள் அன்னை
அலுவலகச் சீருடையில்
விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.
முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து விசிலை இறக்காமல்
ஓடியாடி பணியாற்றுகிறார்.
ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த சந்திற்கான வாகனங்களை
மிகச் சரியாக
அதனதன் வழியில் விடுகிறார்.
மகள் “ குரூப் ஸ்டடியை “ கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்
கல்வி முக்கியமல்லவா?
அன்னைக்கு பிரச்சனையில்லை
”ஓவர் டைம்”இருக்கிறது.
செல்வமும் முக்கியம்.
“privacy “ என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும்
ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர் அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.
நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு போன்களிலும்
“ DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.
அன்னையர் தினத்திற்கு
மகள் ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட
தொப்பையைக் குறைக்கும் பெல்ட் ஒன்றை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன் கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, தொப்பை பெல்ட்டிற்கோ
ஒரு குறையும் நேர்வதில்லை.
உமைக்கினிய மைந்தன், கணநாதன்
நம் குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச் சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம். நன்றி : உயிர்மை : ஜூலை -2017
↧
முக்கால் நிமிஷம்
நள்ளிரவு 2:00 மணிவாக்கில்
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்
பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.
ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.
அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?
ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர் கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?
நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?
நன்றி: உயிர்மை- ஜூலை-2017
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்
பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.
ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.
அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?
ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர் கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?
நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?
நன்றி: உயிர்மை- ஜூலை-2017
↧
இந்தவாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப் போல் சிக்கலானது
இந்த ரம்யமான அதிகாலையில்
மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது
இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு
கீழே வைத்தேன்
தினத்தந்தியில்
இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு
கீழே வைத்தேன்
தினத்தந்தியில்
விருச்சிக ராசிக்கு என்ன பலனென்று
தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால்
இப்போது
தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால்
இப்போது
டேபிளில் இரண்டு டம்ளர்கள்
பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை
சம அளவுள்ள தேநீருடன்
என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில்
எந்த டம்ளர் எனது டம்ளர் ?
விகடன் - தீபாவளி மலர்
பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை
சம அளவுள்ள தேநீருடன்
என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில்
எந்த டம்ளர் எனது டம்ளர் ?
விகடன் - தீபாவளி மலர்
↧
டி.வி-யைப் போடு !
நிசப்தம் ஒரு நச்சரவம்
அதன் நீலம் உந்தன் மூளையைத் தீண்டும் முன்
டி.வி-யைப் போடு!
கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்
வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்
டி.வி-யைப் போடு!
எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.
விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்
இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்
டி.வியைப் போடு!
உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்
கடவுளின் கருணையால் நீ அதிலில்லை
டி.வி-யைப் போடு!
முதலையின் வாயிலொரு வரிக்குதிரை...
உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது
முதலையையும் தெரியாது
டி.வி- யைப் போடு !
காமுகியொருத்தி
தன் பரந்த முதுகை உவந்து தருவாள்
கையது ஒடுக்கி காலது குறுக்கி
நீ அதில் கிடக்க
டி.வி-யைப் போடு!
பக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்
பெருக்கெடுத்து வந்துனை
அடித்துப் போகும் முன்
டி.வி-யைப் போடு!
நன்றி : உயிர்மை - நவம்பர் -2017
↧
↧
இரண்டு வழிகள்
↧
கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை
சங்கத்திலிருந்து சமகாலம்வரைகவிதைக்குள்“ விளையாட்டு” எப்படிஇயங்கி வந்திருக்கிறது என்றறிந்து கொள்ளும் விருப்பத்தில் விளைந்ததே இந்நூல். மொழிக்குள் ” விளையாட்டு”என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது? எந்த அளவில் விளையாட வேண்டும்? என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் ”பரிட்சார்த்தமுயற்சி ” என்கிற ஒன்றையும் சேர்த்து, நான் “விளையாட்டு” என்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சிஆகியவற்றுடன் கொஞ்சம் “துடுக்குத்தனமும்”சேர்ந்திருக்க வேண்டியது அவசியம். “ இரசம் ”” மனத்துக்குத் தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர ஆய்வு செய்ய வேண்டுமெனில் தமிழில் இது வரை எழுதப்பட்ட எல்லா கவிதைப் பிரதிகளையும் வாசித்திருக்க வேண்டும். அதற்கு இப்பிறவி போதாது.நீங்கள் ஒரு “ சாம்பிள் சர்வேயை” எவ்வளவு பொருட்படுத்துவீர்களோ அவ்வளவு பொருட்படுத்தினால் போதும் இப்புத்தகத்தை. எனவே இந்நூல் விடுபடல்கள் உடையதே என்பதைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சங்கத்தை பொறுத்தமட்டிலும் அகநானுறும், நற்றிணையும் முக்கியமான விடுபடல்கள். இப்படி ஒவ்வொரு வகைமையிலும் ஏதோ ஒன்று விடுபட்டிக்கிறது. விடுபற்றவற்றில் விளையாட்டுகள் இருக்கலாம். அவை இன்னொரு ஆய்வாளனுக்கானது. இப்படி இன்னும் சிலர் இதில் இறங்கி விடுபடல்களை நிரப்பி முடித்தால் தமிழ்க்கவிதைக்குள் விளையாட்டின் இயங்குவிதம் குறித்த ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும். அந்த ஆய்வுகளுக்கான வாயிலாக இந்நூல் இருக்கட்டும்.
பழந்தமிழ்க்கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் அதில் என்ன உள்ளது என்பதை சுருக்கமாக சொல்லி விட்டு, பிறகு அதில் விளையாட்டு எப்படி தொழில்படுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். பழந்தமிழ்கவிதைகளை கற்க ஆசை கொள்ளும் ஒரு புதுவாசகனை கருத்தில் கொண்டு இப்படி அமைத்திருக்கிறேன். வெறுமனே குறுந்தொகையின் 18 வது பாடல் என்று தகவல் தந்துவிட்டுப் போவதில் ஒரு இன்பமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. இம்முறையில் முதலில் அவன் குறுந்தொகையை குறித்து கொஞ்சமாகவேனும் அறிந்த கொள்கிறான். அதன் பிரமாதமான வரிகள் சிலவற்றை வாசித்து விடுகிறான். இப்போது குறுந்தொகை அவனுடையதும் ஆகி விடுகிறது. அவனுடைய குறுந்தொகையில் 18 வது பாடல் என்று சுட்டுவதில் ஒரு இணக்கம் வந்துவிடுகிறது. எனவே பாரதி வரை இம்முறையை கையாண்டிருக்கிறேன்.
கவிதைதான் என் காதலி. வசனம் இடையில் வந்தவள். ஆனால் இடையில் வந்தவள் போலவே அவள் நடந்து கொள்வதில்லை. அவளும் சரிபாதி பங்கு கேட்கிறாள். எனினும் இந்நூல் கவிதை குறித்தான கட்டுரை என்பதால் இருவருக்குமிடையே தற்காலிக சமாதானம் நிலவுகிறது
.
நண்பர் சீனிவாசன் ஒரு முறைகணையாழி வாசகர் சந்திப்பில் உரையாற்றுமாறு அழைத்த போது, சென்னை வரை சென்று “ கச்சேரி”செய்வதில் உள்ள அலுப்பால் முதலில் மறுத்தேன். மறுத்த என்னை வருந்தி அழைத்துப் பேச வைத்தார். அப்போது ஒரு கட்டுரையாக எழுதியதை மேலும் மேலும் விரித்து எழுதி உருவானதே இந்நூல். எனவே நண்பர் சீனிவாசனுக்கு என் முதல் நன்றி.
இந்நூல் சிறுகட்டுரையாக எழுதப்பட்ட காலத்தில் முதல் வாசகர்களாக அமைந்து தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், பெருமாள்முருகன், சாம்ராஜ், ஷாலினி ஆகியோர். இவர்களுக்கு என் அன்பு.
நூலின் செம்மையாக்கத்தில் என்னை விடவும் ஆர்வத்தோடு பங்கெடுத்த நண்பர் ஏ.வி.மணிகண்டனுக்கு எனது வந்தனங்கள்.
கடும் வேலை நெருக்கடிகளுக்கிடையேயேயும் முன்னுரை அளித்திருக்கிற நாஞ்சில் நாடனுக்கு மிக்க நன்றி
அட்டை வடிவமைப்பிற்கான முன்னேற்பாடுகளால் என்னை பீதியடையச் செய்த ரோஹிணி மணிக்கும், நூல் வடிவமைப்பில் பொறுமை காத்தமைக்காக சுபாவிற்கும் எனது நன்றிகள்.
குறிப்பிட்ட ஒன்றைத் தீவிரமாகத் தேடுகையில் உண்மையில் அது துலங்கி வருகிறதா ? அல்லது மறைந்து கொள்கிறதா? எனக்கு ஒரு கட்டத்தில் எல்லாமே விளையாட்டு போலவும், எதுவுமே விளையாட்டில்லை என்பதாகவும் மயங்கிக் குழம்பி விட்டது. இந்தப் புத்தகத்தை முடித்து வைக்கும் இந்நாளில் அறிவின் நரகத்திலிருந்து எட்டிக்குதித்து தப்பி ஓடுகிறேன்.
”நகை”என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் என் உடலில் பாதி கோணித்துக் கொண்டிருக்கும். ஒருவிதத்தில் அதற்கான நன்றிக்கடனாகவும் இத்தொகுப்பைக் கருதலாம்.
எழுத்தைத் தவிர வேறு மகிழ்ச்சியில்லை என்பது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அதை அதிர்ஷ்டம் போலவே பாவித்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.
இசை
இருகூர் 10/09/2017
↧
மூன்று கவிதைகள்
1. காவியம்
இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்லாரி ஏறிவிட்டது.அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,கல்லூரி மாணவி ஒருத்திஎஞ்சிய காலிரண்டைப் பற்றிஅலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள்."குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர்
“ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று
நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.
2. பிறகு
2. பிறகு
கடவுளே! நீர் முதலில்
மனைவிகளின் கன்னங்களிலிருந்து
வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர்
பிறகு
கணவர்களை கூண்டிலேற்றி
முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர்
கடவுளே! நீர் முதலில்
கணவர்களின் சொற்களிலிருந்து
நறுமணத்தை விரட்டியடிக்கிறீர்
பிறகு
சத்தியம் செய்யச் சொல்லி
மனைவியரைத் துன்புறுத்துகிறீர்
3. ஸ்டுபிட்ஸ்
அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்
சுதாரித்துக் கடந்த பிறகு
காலூன்றி நின்று
சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்..
அரசைப் பார்த்தார்..
அமைச்சரைப் பார்த்தார்..
முதலமைச்சரை, பிரதமரைப் பார்த்தார்.
ரோடு காண்ட்ராக்டரை பார்த்தார்
அந்தப் பள்ளத்துள்
யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும் பார்த்தார்.
நன்றி : காலச்சுவடு - ஜனவரி -18
↧
தோழர் !
கடவுள் எனக்குச் செய்யும்
ஒரே ஒரு உருப்படியான காரியம்
அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான்
இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள்
ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள்
ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள்
என்னைத் தூரத்தில் கண்டதுமே
சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை
தயாரிக்கத் துவங்கி விடுகிறார்
கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர்
நான் வரும் முன்பே
என் வழக்கமான டேபிளில்
டீ வந்து அமர்ந்திருக்கும்.
அதை ஒரு பூச்செண்டு
என்று உணர்ந்த கொண்ட நாளில்
அவருக்கே கேட்காதபடி
கண்ணீரை மறைத்துக் கொண்டு
அவரைத் "தோழர்! "என்றழைத்தேன்.
அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான்
இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள்
ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள்
ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள்
என்னைத் தூரத்தில் கண்டதுமே
சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை
தயாரிக்கத் துவங்கி விடுகிறார்
கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர்
நான் வரும் முன்பே
என் வழக்கமான டேபிளில்
டீ வந்து அமர்ந்திருக்கும்.
அதை ஒரு பூச்செண்டு
என்று உணர்ந்த கொண்ட நாளில்
அவருக்கே கேட்காதபடி
கண்ணீரை மறைத்துக் கொண்டு
அவரைத் "தோழர்! "என்றழைத்தேன்.
↧
↧
கொடுங்குழை
↧
மாயா விநோதம்
↧
தேனொடு மீன் – குகன்சரிதம்
இராமனாகிய தேனும், குகனாகிய மீனும் ஒருவரையொருவர் கண்டு , களிப்பெய்தி, கண்ணீர் பெருக்கி, ஒருவருள் ஒருவர் புக்கு, பிரிந்தும் பிரியா நின்றதைப் பேச விழைகிறது இக்கட்டுரை. இராமயணத்தை வாசிக்க இராம பக்தி அவசியமில்லை.பொதுவுடமைச் சித்தாதங்களில் இறுதி வரை உறுதிப் பிடிப்போடு இருந்த தோழர் ஜீவா கம்பனை விடவில்லை. இராமயணத்தின் வற்றாத இலக்கிய வளங்களை அவர் புறக்கணிக்கவில்லை.உடல் முழுக்க திருநீறு பூசி, கைகளில் சப்ளாக் கட்டைகளைக் கொடுத்து, அவர் இராமபஜனை செய்வதாக தி.மு.கழகத்தார் கேலிச்சித்திரம் தீட்டிய போதும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் பின்வாங்க வேண்டியடிதில்லை.“அறிஞர் காதற்கு அமை விருந்துதான்“ அவன். இராமன் பெயரால் நிகழும் குருதிப் பெருக்கிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை.அவன் கைகளில் இருப்பது அநீதிகளுக்கெதிரான கோதண்டமே என்றும், அது பர சமயத்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இறங்கும் பிச்சுவா அல்ல என்றும் நம்புவது, தேவையற்ற மனத்தடைகளிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். தவிரவும் இராமகாதை வெறுமனே இராமகாதை மட்டுமல்ல.இந்தக் கட்டுரையின் நாயகனும் குகன்தான். இராமன் குகனை பெருமை செய்யும் ஒரு துணை மட்டுமே.
கம்பனில் குகப்படலம், கங்கைகாண் படலம் ஆகிய இரு படலங்களிலும் குகன் பிரதான பங்கு வகிக்கிறான். குகப்படலம் இராமனும், குகனும் கண்டு காதல் செய்வது. கங்கைகாண் படலம் பரதனை குகன் இராமனிடம் கொண்டு சேர்ப்பது. கங்கைகாண் படலத்தை அடுத்து வருவது “திருவடி சூட்டு படலம்” அதாவது பரதன் இராமனை நாடாள அழைத்து, அவன் மறுத்து விடவே, இராமனது திருவடிகளே நாடாளும் என்று சொல்லி அவனது பாதுகைகளைப் பெற்றுத் திரும்பும் படலம். இப்படலம் முழுக்கவும் குகன் உடன் இருக்கிறான். ஆனால் அவன் ஒரு சொல்லும் சொல்வதில்லை .பரதனும், இராமனும் சந்தித்துக் கொள்ளும் உணர்வுப் பெருக்கின் நாடகங்களிலிருந்து விலகியே நிற்கிறான். படலம் நிறைகையில் “கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான்” என்கிற வரி வருகையில்தான் குகனும் பரதனோடு அங்கு இருந்தான் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். பிறகு இராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புகையில், ஏற்கனவே குகனுக்குக் கொடுத்த வாக்கின் படி இராமன் குகனைத் திரும்பவும் சந்திக்கிறான்.இங்கு சில பாடல்களில் குகன் பேசப்படுகிறான். இது ”மீட்சிப் படலத்தில்” வருகிறது. கடைசியாக முடிசூட்டு விழா முடிந்து வீடணன் இலங்காபுரி செல்லும் போது, வழியில் குகனை தன் புஷ்பக விமானத்தில் ”ட்ராப்’ செய்து விட்டுப் போகிறான். “திருமுடி சூட்டுப் படலத்தில் “ குகன் ஏதும் பேசுவதில்லை. வெறுமனே இருக்கிறான். “விடை கொடுத்த படல”த்திலும் குகன் ஏதும் பேசுவதில்லை. இராமனே விடை கொடுத்து வழியனுப்புகிறான். இதுவன்றி குகன் ஒரு நினைவாகக் குறிக்கப்படும் பாடல்கள் சிலவுண்டு.“குகனொடு ஐவர் ஆனோம்” என்று இராமன் வீடணனிடம் சொல்வது போல. ஆக, ஒட்டு மொத்த இராமயணத்திலும் குகனின் பிரதான இடம் என்பது இரண்டு படலங்கள் மட்டுமே. ஆயினும் குகன் குகப்பெருமானாகி இன்று ஆலயங்களில் வீற்றிருக்கிறார்.
கம்பனை ‘ மிகையில் நின்றுயர் நாயகன் ‘ என்று சொல்லலாம். ஆம் மிகை அவரது பிரதான அழகியல்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அலுப்பூட்டாத, சுவாரஸ்யமான, பரவசம் கொள்ளச் செய்யும், தித்திக்கும் மிகை. இது கடவுளர்கள் திரியும் ஒரு புராணக்கதை என்கிற எண்ணம் நம் மனதில் இருந்தால், மிகை போன்ற நவீன விமர்சனக் கூறுகளால் நம் வாசிப்பு தொந்தரவுக்குள்ளாவதில்லை. எனவே நாம் கம்பனை விட்டு விலகுவதில்லை.மாறாக அவனது விதவிதமான மிகைகளில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். சீதையை ஒரு பேதைப் பெண்ணாகக் காட்டி வேண்டிய தருணத்தில் கூட, அவரால் பேதமையின் உச்சத்தில் மிகையோடே பேச முடிகிறது.
தங்களை காட்டில் விட்டுவிட்டு அயோத்தி திரும்பும் சுமந்திரன் எனும் அமைச்சரிடம் சீதை கூறுகிறாள்...
அன்னவள் கூறுவாள் ; அரசர்க்கு , அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி , யான் உடைப்
பொன்நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று
என்னுடை எங்கையர்க்கு உணர்த்துவாய் என்றாள்.
அரசர்க்கும் அத்தையர்க்கும் என்னுடைய வணக்கங்களை முதலில் தெரிவியுங்கள். பிறகு நான் ஆசையாக வளர்த்து வந்த கிளியையும், மைனாவையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி என் தங்கையரிடம் சொல்லுங்கள்
இந்தக்கவிதைக்கு அரசர் அத்தையெல்லாம் முக்கியமில்லை. மைனாவும், கிளியும் தான் முக்கியம். இந்தச்சீதை தெய்வமில்லை..நெருப்பில் குளித்தெழுபவளில்லை .. சாதாரண மனுஷி .. பேதைப் பெண். தன் வாழ்வே புயலுடை மரமாய் அடிபெயர்ந்து கிடக்கையில் எவளாவது மைனாவையும், கிளியையும் கேட்பாளா? கேட்பாள்... கம்பனின் ஜானகி கேட்பாள்.
குகனது பாத்திரம் முழுக்க இந்த மிகை மிளிர்ந்த வண்ணமே இருக்கிறது
“ அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்ரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாலை யாலே நரர்கும் இன்று அமுதம் ஈந்தான் “
என்கிறது கம்பனைக் குறித்த பழம்பாடல் ஒன்று.
பாற்கடலில் மேருமலையை நாட்டி தேவர்களுக்கு அன்று அமுதத்தை கடைந்தெடுத்தளித்த தம்பிரான் போல, தமிழிலே தன் தாலை நாட்டி மனித்தப் பிறவிகளுக்கும் அமுதத்தை அளித்தான் கம்பன் என்கிறது பாடல்.ஆம்.. தமிழ்ச்சுவை தெரியுமெனில், அமுதுதான் அது.
குகன் அறிமுகமாகும் போதே ” குளகச்செய்யுளோடு “ அறிமுகம் ஆகிறான். குளகம் என்பது பாடலின் பொருள் ஒரு பாடலில் முடிந்து விடாமல், அடுத்தடுத்த பாடல்களிலும் தொடர்ந்து சென்று, ஏதேனும் ஒரு பாடலில் முடிவது. குகனை அறிமுகம் செய்யும் போதே ஒன்பது பாடல்களால் ஆன குளகத்தால் அறிமுகம் செய்கிறான் கம்பன். “ ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க்குகன் எனும் நாமத்தான் “ என்று முதல் பாடலில் தொடங்கும் விவரிப்பு, அவனது உருவம், உடை, பேச்சு, பார்வை என்று பலவற்றையும் பேசிவிட்டு 9 வது பாடலில்,“ ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான் “ என்று முடிகிறது.விரிவாக வர்ணிப்பதற்கு இந்தக் குளகம் உதவுகிறது. கம்பராமாயணத்தில் பாடப் பட்ட நெடிய குளகம் அதன் நாயகன் இராமனைப் பற்றியதல்ல. இராவணனைப் பற்றியதே.
குகன் இராமனைக் காணச் செல்கிறான். வெளியே காவல் செய்யும் இலக்குவன் குகனிடம் யாரென்று வினவி, அவனை அங்கேயே நிற்கச் செய்துவிட்டு, உள்ளே சென்று இராமனிடம் சொல்கிறான்..
நிற்றி ஈண்டு என்று, புக்கு
நெடியவன் – தொழுது, தம்பி,
” கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும்
உள்ளம் தூயவன் ;தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை ;
குகன் ஒருவன்” என்றான்
( 1964 )
குகனைப் பற்றி இராமனுக்கோ, இலக்குவனுக்கோ எதுவும் தெரியாது. ஆயினும் குகனை இராமனிடம் அறிமுகம் செய்யும் போதே “ தாயின் நல்லான் “ என்கிறான் இலக்குவன். இது குறித்து அ.ச. தன் “தம்பியர் இருவர்”நூலில் நிறைய எழுதியிருக்கிறார். குறை சொல்ல முடியாத தர்க்கங்கள். அப்பகுதியை இப்படி முடிக்கிறார்...
“ இதனை விடச் சிறப்பான செயல் என்னவெனில், இலக்குவன் இவ்வுண்மையை கண்டுபிடித்ததாகும்.எத்துணை அறிவாற் சிறந்தவர்களையும் பிறருடைய புறத்தோற்றம் ஓரளவு ஏமாற்றி விடுகிறது. மிகச் சிறந்த கூர்த்த மதியினரே இப்புறக்காட்சியால் மயங்கிவிடாமல் , உள்ளே ஊடுருவி நோக்கி, உண்மை காண்கின்றனர்.அத்தகைய கூர்த்த மதியினருள்ளும் தலைசிறந்தவனாய் இருக்க வேண்டும் இலக்குவன் என்று உறுதியாகக் கூறலாம்...... குகனது புறத்தோற்றம் கவனிக்கப்பட வேண்டாதது என்பதைச் சுட்டிக் காட்டுவான் போல இளையவன் இராமனிடம் ‘தாயினும் நல்லான் ‘ என்று கூறுகிறான் “
எனக்கு இப்படித் தோன்றியது... இராமகதை ஏற்கனவே சமூகத்தில் புழங்கி வரும் ஒன்றுதான். குகன் “ நல்லான் “ என்பது எல்லோர்கும் தெரியும்.கம்பனது வேலை அவன் எவ்வளவு நல்லவன் என்று சொல்வது மட்டும்தான்.எனவே “தாயின் நல்லான் “ என்று ஒற்றைச் சொல்லில் சரியாகச் சொல்லிவிட்டுக் கடந்தான். இப்படிச் சொல்வது கம்பனைக் குறைப்பதாகுமா? அவனது அடியார்கள் கோபித்துக் கொள்வார்களா ? எனக்குத் தெரியவில்லை.
குகனது பாத்திரம் இன்றும் நின்று நிலைப்பதற்குக் காரணம், அவன் சுத்த சைவனை அசைவத்தின் வழியே அன்பு செய்தான் என்பதால்தான். அறிவார்த்தம் கூடிய அன்பைக் காட்டிலும் பேதமை நிரம்பிய அன்பு , எளிய மனிதர்களை மட்டுமல்ல கற்றோரையும் உருக்கி விடவல்லது. நான் தினமும் பணிக்குச் செல்லும் வழியில் “குகன் பஞ்சர் ஒட்டும் கடை“ உள்ளது.“ நல்லதுதான்.. குகன் ஒட்டினால் விலகவே விலகாதல்லவா? கட்டாயமாக போட்ட இடத்திலேயே போகதல்லவா?” என்று நினைத்துக் கொள்வேன்.ஆனால் வீடணன் பஞ்சர் ஒட்டுவதாகவோ, போண்டா விற்பதாகவோ நான் எங்கும் கண்டதில்லை.
பல பட்டிமன்றங்களில் சொல்வது போல் உண்மையில் இராமன் மீனை உண்ணவில்லை. உண்டது போல ஒரு கணக்கு அவ்வளவுதான்.
‘இருத்தி ஈண்டு’ என்னலோடும்
இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், தேனும் மீனும்
அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
திருஉளம்?’ என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
விளம்பலுற்றான் ( 1966)
அமரச் சொன்னதற்கு அமராமல் எல்லையற்ற அன்பாளனாகிய குகன் “ தேனையும் மீனையும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்திக் கொணர்ந்துள்ளேன். உன் திருவுளக் கருத்தென்ன? என்று கேட்டு நிற்க, இராமன் சுற்றி இருந்த மாதவ முனிவர்களை நோக்கி முறுவலித்து விட்டு பின் பேசத் துவங்கினான்
இராமனின் பதில் அடுத்து வருகிறது... கண்ணீர் துளிர்க்கச் செய்யும் பாடல்...
‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின்
பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான். ( 1967)
”அரியவை ... மகிழ்ச்சி ... உள்ளத்து அன்பினால் அமைந்த காதலால் கொண்டு வரப்பட்டவை என்பதால் இவை அமிழ்தினும் இனிய அன்றோ? அன்பினால் கொணர்ந்த என்றால் எதுவும் தூய்மையே ; எம்மனோர்க்கும் உரியதே.எனவே இதை நாமும் மகிழ்ந்து உண்டது போலவே ஆயிற்று” என்றான்.
கம்பனின் முதநூலான வால்மீகத்தில் குகன் மீனைக் கொண்டு வருவதில்லை. அவன் அப்பம், அன்னம், பாயசத்தோடே வருகிறான். துளிசிதாசர் ராமாயணத்திலோ தூய பழங்கள், கிழங்குகளோடு வருகிறான். கம்பனில்தான் மீன் வருகிறது. கம்பன் இங்கு ஒரு நாடகத்தைத் துணிந்து உருவாக்கி அதைத் திறம்பட, அழகுறக் கையாண்டிருக்கிறான் .ஆம்.. ’ தமிழிலே தாலை நாட்டி நரர்க்கும் அமுது ஈந்தான்’
இராமன் குகனுக்கு விடையளித்து நாளை காலையில் கங்கையைக் கடக்க நாவாய் கொண்டு வரச்சொல்கிறான்.ஆனால் குகன் அங்கிருந்து அகன்று விடாமல் விடிவளவும் இலக்குவனோடு சேர்ந்து இராம சீதைக்கு காவல் புரிகிறான்
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். ( 1975 )
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். ( 1975 )
அம்பிகளின் தலைவனான குகன், வில்லைத் தயார் நிலையில் தொடுத்து வைத்தபடி, வெம்பி அழும் நெஞ்சினோடு, இரா முழுதும் துஞ்சாத கண்ணனாகி காவல் செய்தான். அரச போகங்களை விட்டுவிட்டு இப்படி நைந்து வருந்தும் இராமனையும், அவன் நித்திரை கொள்ள ஏதுவாய் தன் நித்திரையைத் துறந்து நிற்கும் இலக்குவனையும் மாறி மாறிக் கண்டு கண்ணீர் அருவி கொட்டும் மலை போல் நின்றான்.
( தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன் – யானைக் கூட்டத்தை ஒத்த சுற்றத்தை உடையவன், குகன் )
குகன் மூவரையும் நாவாயில் செலுத்துகையில் இராமனும் சீதையும் நீர் இறைத்து விளையாடி வருகிறார்கள்..
“பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல்நீர் சிந்தினர், விளையாட“ ( 1987 )
சேலுடை நெடு நல்நீர் சிந்தினர், விளையாட“ ( 1987 )
அதாவது இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீர் இறைத்து காதல் விளையாட்டு விளையாடி இருக்கிறார்கள்.கூடவே இலக்குவன் என்கிற ஜீவன் ஒத்தையாளாய் இருப்பதை மறந்து விட்டு.நானாக இருந்திருந்தால் நாவாயை லைட்டாக நீருக்குள் அழுத்தி இருவரின் ஆட்டத்தையும்அடக்கி இருப்பேன். ஆனால் இருந்தது இலக்குவன். அவன் மகிழவே செய்திருப்பான்.ஒரு முறை இராமன் இலக்குவனை நோக்கிச் சொல்கிறான் ... “ இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் “ என்று. இது பேரிடர் அல்லவோ அய்யனே?
குகன் மூவரையும் தம்முடனே தங்க வலியுறுத்துகிறான். பிறகு தானும் அவர்களோடு வருவதாக மன்றாடுகிறான். இராமன் அவனைத் தேற்றி ‘ நாம் சகோதரர் ஆகி விட்டதால், உன் சுற்றம் என் சுற்றம் ஆகிவிட்டது. எனவே என் சுற்றத்தை விட்டு நீங்காமல் அவர்களை காத்து நில் ‘ என்று இனிதின் ஏவிவிட்டுப் பிரிகிறான். திரும்பி வருகையில் அவசியம் உன்னைச் சந்திப்பேன் என்று உறுதியும் தருகிறான்.
இதற்கிடையில் கேகய நாட்டிலிருந்து திரும்பிய பரதன் நடந்ததையெல்லாம் அறிந்து பதைபதைக்கிறான். ‘ எல்லாவற்றையும் அறிந்த பிறகும் உன் வாயை கிழிக்காமல் இருப்பதால், நானும் இந்த அரசாட்சியை ஆண்டவனாகவே ஆகிறேன் அன்றோ ? ‘ என்று தாயைச் சீறி, தன்னையும் நோகிறான். இராமனை திரும்ப அழைத்து வந்து முடி சூட்டுவேன் என்று சொல்லிவிட்டு, அவனைத் தேடிக் கிளம்புகிறான். இடையில் கங்கை குறுக்கிடுகிறது.அங்கு ஆயிரம் அம்பிக்கு நாயகனான குகனும், பரதனும் சந்தித்துக் கொள்கிறார்கள். பரதன் சேனைகளோடு இராமன் மீது போர் தொடுக்க வந்திருப்பதாக எண்ணி குகன் கொதித்தெழுகிறான். “எலி எலாம் இப்படை : அரவம் யான் “ என்று கொக்கரிக்கிறான்.
இப்படியெல்லாம் சினம் மிகுத்து எழுபவன் பரதனைக் கண்ட மாத்திரத்தில் தன் எண்ணங்கள் பிழை என்பதை உணர்ந்து கொள்கிறான்.மரவுரிக் கோலத்தில், நகை இழந்த முகத்தோடு, கல் கனியக் கனிகின்ற துயரோடு காணப்படுகிறான் பரதன்.
அடுத்த பாடல் இது..
நம்பியும் என் நாயகனைஒக்கின்றான்;
அயல் நின்றான்தம்பியையும் ஒக்கின்றான்;
தவவேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான். ( 2332)
தவவேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான். ( 2332)
பரதன் என் நாயகன் இராமனையே ஒக்கின்றான். அவன் அருகில் நிற்கும் சத்ருக்கனனும் இராமனின் உயிர்த்துணையான இலக்குவனை ஒக்கின்றான். தவ வேடம் தாங்கியிருக்கிறான். முடிவில்லாத் துயரோடு இராமனது திசை நோக்கித் தொழுதபடி நிற்கிறான். எம்மெருமான் பின்பிறந்தோர் எப்படிப் பிழை செய்வார்?
இராமனைக் காட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்ற தசரதனின் அமைச்சரான சுமந்திரன்தான் குகன் யார் என்பதை பரதனிடம் விளக்குகிறார்.கதைப்படி குகன் –இராமன் சந்திப்பு நிகழும் முன்பே சுமந்திரன் அயோத்தி திரும்பி விடுகிறான்.அவன் குகனைக் கண்டதில்லை. பிறகெப்படி “ உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன் “ என்று சொல்ல முடியும்? இந்தச் சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு “கம்பன் அறநிலைப் பதிப்பு” இப்படி பதில் சொல்கிறது...
“ அமைச்சராவார் அனைத்தையும் உணர்தல் வேண்டும். ஆதலின் இராமனது பயணவழியில் கங்கையைக் கடக்கின்ற வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவன் முன்னரே அறிந்திருத்தலில் வியப்பு இல்லை என அறிக”
சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருக்கு லாஜிக் ஓட்டை விடும் சலுகையுண்டு என்பதாக நாம் இதை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
பரதன் குகனின் திருவடிகளில் விழுகிறான்,இருவரும் ஒருவரையொருவர் வணங்கித் தழுவிக் கொள்கிறார்கள். பரதன் தான் வந்த நோக்கத்தைச் சொல்கிறான். அது கேட்டு நெக்குருகும் குகனின் கூற்றுகள் இவை..
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி
போயினைஎன்ற போழ்து , புகழினோய் !தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! ( 2337)
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி
போயினைஎன்ற போழ்து , புகழினோய் !தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! ( 2337)
தாய் தன் வரத்தின் மூலம் தந்தையிடமிருந்து பெற்றுத்தந்த அரும்பெரும் அரசாட்சியை “ தீது” என்று விடுத்து, குழப்பமும் வருத்தமும் கலந்த முகத்தோடு இராமனைக் காண இப்படிக் காடு வந்து நிற்கின்றாய் எனில், ஆயிரம் இராமர்கள் சேர்ந்து வந்தாலும் அவர்கள் உன் ஒருவனுக்குச் சமமாவரோ தெரியவில்லை ?
என் புகழ்கின்றது,ஏழை எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை, மற்றைஒளிகளைத் தவிர்க்குமா போல்
மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்! ( 2338 )
மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்! ( 2338 )
ஏழை வேடன் நான் எப்படிப் புகழ்வேன் ? இரவி தன் பொன்னொளிப் பிரகாசத்தால் மற்ற சின்னஞ்சிறு ஒளிகளை மறைத்து விடுவதைப் போலே, உன் குலத்தில் தோன்றிய எல்லா அரசர்களது அத்தனை பெருமைகளையும், இப்படி நாடு விடுத்து காடு வந்த தன்மையால், உன் புகழுக்குள் ஒடுங்கச் செய்து விட்டாய்.
மூவரும் காட்டில் எங்கு தங்கினர் ? எப்படி உறங்கினர்? என்றெல்லாம் கேட்டு கேட்டு கண்ணீர் சிந்துகிறான் பரதன். அப்போது இலக்குவன் குறித்து குகன் உரைக்கும் பாடல் ஒன்று பிரபலமானது.அறிஞர்கள் அடிக்கடி எடுத்தாள்வது. இலக்குவனைப் பற்றிய பேச்சு, இந்தப் பாட்டின்றி முடியாது. முடிந்தால் அது நல்ல பேச்சாகாது.
‘ அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான். ( 2344 )
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான். ( 2344 )
கருத்த மேனியியனான இராமனும், சீதையும் நிம்மதியாக நித்திரை கொள்ளும் பொருட்டு, வாயிலில் வில்லை ஊன்றிக் கொண்டு, தன் தலைவனின் துயர நிலைக்காக பெருமூச்செறிந்தவனாய், விடாது கண்ணீர் சொரிந்தபடி விடிவளவும் துஞ்சாது காவல் காத்து நின்றான்.
(அல்லை – இருள், கருப்பு : கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் ! – பரதனை விளித்தது )
குகன் பரதனையும், அவன் சேனைகளையும் கங்கையைக் கடக்க உதவுகிறான்.பரதன் தன்னுடன் வந்த அன்னையர் மூவரையும் குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். பரதன் இராமனை அடைகிறான்.” திருவடி சூட்டு படலம்” துவங்குகிறது. இராமன் திரும்பவும் நாட்டிற்கு வர மறுக்கிறான். எனில், அவன் திருவடிகளே அரசாளும் என்று சொல்லி பரதன் இராமனின் பாதுகைகளைப் பெற்று நாடு திரும்புகிறான். இப்படலம் முழுக்க குகன் ஒரு பேச்சும் பேசுவதில்லை. ஆனால் பரதனோடு இருக்கிறான்.
“ வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன்” என்று சொல்லி குகனைப் பிரிந்து சென்ற நாயகன் இராவண வதம் முடித்துத் திரும்புகையில், சொன்ன சொல்லை சுமாராகக் காப்பாற்றுகிறான். அதாவது குகனின் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். குகன் அங்கு போய் இராமனைச் சந்திக்கிறான். அங்கு ஒரு பிரமாதமான பாடல் உண்டு. இராமன் குகனைக் கண்டு நலம் விசாரிக்கிறான். மக்களும், மனையும் நலம் தானே என்று கேட்கிறான். அதற்கு குகனது விடை...
'அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ( 10248 )
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ( 10248 )
நலமா ? என்கிற கேள்விக்கு ‘உனது அருளால் நலம்’ என்று சம்பிரதாயமாகச் சொல்லி விடுகிறான் முதலில். பிறகு உண்மையைச் சொல்கிறான். உன்னை விட மக்களோ, மனையோ அவ்வளவு அரியவை அல்ல. எப்போதும் உன்னை விட்டு நீங்காது , உன்னோடே தங்கி, உனக்குப் பணிவிடைகள் செய்ய வாய்க்காத இவ்வாழ்வு எப்படி இனிக்கும்? என்று கேட்கிறான். அப்படிக் கூடவே இருக்கும் பேறு இலக்குவனைப் போல தனக்கு வாயக்கவில்லையே என்று வருந்துகிறான்.
‘ நீ இப்படிச் சொல்லலாகாது.. போய் இனிது இரு...’ என்று சொல்லிவிட்டு இராமன் அயோத்தி புறப்பட்டுவிடுகிறான். இராம பட்டாபிஷேகத்தின் திருக்கோலக் காட்சியைக் கண்டு இன்புறும் பொருட்டு வீடணன், சுக்ரீவன், அனுமன் போன்றோர் இராமனோடே அயோத்தி செல்கிறார்கள். குகன் அவர்களோடு செல்வது போல் தெரியவில்லை.ஆனால் முடிசூட்டு விழாவில் குகனும் இருக்கவே செய்கிறான். முடிசூட்டு வைபவம் முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உரிய பரிசளித்து விடைதருகிறான். அனுமனுக்கு விடையளிக்கும் தருணம் நிஜமாகவே காவியத் தருணம்தான்.
குகன் முறை வருகிறது...
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகருக்கு இறையை நோக்கி,
'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?'என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. ( 10362)
'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?'என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. ( 10362)
சிருங்கபேரம் எனும் நகருக்கு தலைவனான குகனை நோக்கி, ”மாசற்ற துணைவனே! இனி உனக்கு நான் என்ன உரைப்பது?“ என பேச்சற்றுக் கலங்கி, களிரும்,மாவும்தந்து, ஆடையும், ஆபரணங்களும் உதவி, கூடவே விடையும் தந்து உதவினான்.
“உதவினன் விடையும் மன்னோ..” என்கிற சொற்றொடர் பொருள் பொதிந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆம்..இங்கு நாய்க் குகனுக்கு அவசியம் உதவி தேவை.ஏனெனில் இராமன் பால் அவன் செலுத்திய அன்பு கட்டற்றது. காரண, காரியங்களுக்குள் அடங்காதது. அறிவு,ஆராய்ச்சிகளுக்கு அப்பால் நிற்பது.‘ உன்னை நோக்கின் மனையும், மக்களும் ஒரு பொருட்டல்ல’ என்று சொன்னவன் அல்லவா அவன்? இக்கொடும் பிரிவிலிருந்து அவனை ஆற்றுவிக்க நிச்சயம் ஒரு உதவி தேவை. அதை இராமனே செய்தான் என்று சொல்வது நயமிக்கது. அவனைத் தவிர வேறு யாராலும் செய்யவும் முடியாதல்லவா?
சாதாரண சொற்களின் மீது கூடுதலான அர்த்தங்களை வலிந்து ஏற்றுகிறேனா? எனவே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனால் என்ன? குகப்பெருமானுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இராமன் பால் இலக்குவனும், பரதனும் செலுத்திய அன்பில் இரத்தபந்தமும் சேர்ந்திருக்கிறது. விடணனும், சுக்ரீவனும் காட்டிய அன்பில் நன்றிக்கடனும் கலந்திருக்கிறது. ஆனால் குகனின் அன்பில் அன்பன்றி வேறொன்றுமில்லை. அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது அப்பாத்திரம்.
“ கங்கையைச் சேர்ந்த கழுநீரும் கங்கை ஆகிறது. இராமன் பெயரைச் சொல்லும் சண்டாளன், புலையன், சாதியிலிருந்து வெளியேற்றப் பட்டவன், வெளிநாட்டான், காட்டுமிராண்டி, வேடன் அனைவரும் புனிதம் பெறுகின்றனர். அவ்வாறே குகனும் உயர்ந்தான் “ என்கிறார் துளசீதாசர். கம்ப இராமாயணத்தில் நிலைமை வேறு.கம்பனில் “நாய்க்குகன்”என்றும், “நாயடியேன்”என்றும் குகன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் போதும், அது அவனது “ இழிகுலப் பிறப்பு “ குறித்த கழிவிரக்கமாக வெளிப்படுவதில்லை. கம்பனின் கூற்றாகவும் அப்படி எங்கும் காணக் கிடைப்பதில்லை. மாறாக அதில் ஒரு பக்தன் கடவுளிடம் காட்டும் “ சரணாகதி” தன்மையே வெளிப்படக் காண்கிறோம். மேலும், பரதனை எதிர்த்துக் கிளம்பும் ஒரு தருணத்தில் “மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம்வாயாவோ? ” என்று கூடக் கேட்கிறான் குகன். அதாவது பரதன் மன்னர் குலம்... குகன் வேடர் குலம்.. அதனாலென்ன? மன்னரின் நெஞ்சிலே வேடனின் அம்பு நுழையாமலா போய்விடும்? என்று கலகக்குரல் எழுப்புகிறான்.
வால்மீகத்தில் குகன் தோழன் மட்டுமே. தம்பியில்லை.‘ ஐவரெல்லாம்’ஆவதில்லை. கம்பனிலோ இராமன் தம்பியாக ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, பரதனும் “ என் முன் “ என்று ஏற்றுக் கொள்கிறான். கோசலையும் “ நீவிர் ஐவீரும் ஒருவீர் ஆய் , அகல் இடத்தை நெடுங்காலம் அளித்தீர் “ என்று ஏற்கிறாள். அதாவது ” இந்த அகன்ற பூமியை நீங்கள் ஐவருமாகச் சேர்ந்து ஆளுங்கள்” என்று குகனை ஆசீர்வதிக்கிறாள்.
குகன் சரிதத்திலிருந்து எனக்குப் பிடித்த மேலும் சில பாடல்களோடு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
குகன் பிரிவுத்துயர் தாளாது அரற்ற அது கேட்டு இராமன் கூறியது...
துன்புளது எனின் அன்றோசுகமுளது ?அது அன்றிப்
பின்புளது இடைமன்னும் பிரிவுளது என உன்னேல் ;
முன்பு உளெம், ஒரு நால்வேம், முடிவுளது என உன்னா
அன்புள , இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்
பின்புளது இடைமன்னும் பிரிவுளது என உன்னேல் ;
முன்பு உளெம், ஒரு நால்வேம், முடிவுளது என உன்னா
அன்புள , இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்
துன்பமெனும் ஒன்று இருந்தால் அன்றோ சுகம் எனும் ஒன்றிருக்கும். அந்தச் சுகம் நிச்சயம் நமக்குண்டு. எனவே இடையே நேரும் இப்பிரிவை எண்ணி வருந்தாதே. முன்பு நாங்கள் நால்வர் என்றிருந்தோம். அன்பு அத்தோடு நிற்க விடவில்லை. இன்று உன்னையும் ஒருவனாக்கி ஐவர் என ஆனோம்.
மேற்கொண்டு காடு செல்லாமல் தன் இடத்திலேயே தங்கி விடச் சொல்லி குகன் இராமனை வலியுறுத்தியது... தன் நாட்டுவளம் உரைத்தது..
தேன் உள ; தினை உண்டால் ; தேவரும் நுகர்தற்காம்
ஊன் உள : துணை நாயேம் உயிர் உள ; விளையாடக்
கான் உள ; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிதிரு ; நட எம்பால்.
” தேன் உள. தினை உள. தேவரும் விரும்பத்தக்க உணவுள. துணை நாயேம் உயிர் உள. விளையாடக் கான் உள. புனலாடக் கங்கையும் உளது. நான் உள்ளமட்டும் நீ மகிழ்ந்திரு. நட என்னோடு !
பரதன் இராமனை எதிர்த்துப் போர் புரிய வந்திருக்கிறான் என்றெண்ணிய குகன் தன் சேனைகளுக்கிடையே ஆற்றிய உரை..
ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? ( 2317 )
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? ( 2317 )
ஆழமும், அலைகளும் கொண்ட இந்த கங்கையத் தாண்டி அவர்கள் போய் விடுவார்களா என்ன? பெரும்வேழப்படை கண்டு அஞ்சி விலகினால் நான் வில்லாலனா என்ன? தோழமை என்றவர் சொல்லிய சொல்லை அர்த்தமற்ற வெற்றுச் சொல்லாக்கி விடுவேனோ? அப்படி பரதனை இக்கங்கையை கடக்க விட்டால், இதற்கு இந்த வேடன் இறந்திருக்கலாமே என்றெனை உலகம் ஏசாதோ?
குகனது உருவ வர்ணனையாக ஒரு பாடல் ...
பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். ( 1958 )
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். ( 1958 )
பனைமரத்தின் வலிய சிறாம்பு போன்று அடர்ந்து கறுத்த மயிர்களைக் கொண்ட கையினன். விசாலமான மார்பு என்கிற கல்லைக் கொண்டவன். எண்ணெய்ப் பூச்சின் பளபளப்பான இருள் நிறத்து மேனியன்.
‘கல் போன்ற மார்பு ‘ என்கிற அரதப் பழசை ‘ மார்பு போன்ற கல் ‘ என்று சற்றே மாற்றி வைக்கையில் கொஞ்சம் புதிதாகி விடுவதைக் காண்கிறோம்.
“ அதாவது மார்பு என்ற பெயருடன் மார்பு இருக்க வேண்டிய இடத்தில் கல் இருந்தது என்று கூறுமுகத்தான் கம்பன் நம்முடைய மனத்தில் ஒரு தனிமதிப்பை உண்டாக்கி விட்டான் “ என்று இவ்வரிகளை குறித்து எழுதுகிறார் அ.ச.
குகனும் பரதனும் ஒருவரையொருவர் வணங்கித் தழுவிக் கொள்ளும் பாடல்...
"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் , அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".
அந்தணனும் தலை வணங்கும் அவனும் , அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".
தன்னைத் தொழுது நிற்கும் பரதனை குகனும் தொழுதான். திருமாலின் உந்தித் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மதேவனும் போற்றி வணங்கும் சிறப்பை உடைய பரதன், குகனின் அடிகளில் விழுந்தான். விழுந்த அவனை எடுத்துத் தந்தையினும் களிகூரத் தழுவுகிறான் குகன். அப்படித் தழுவும் குகன் யார்? சான்றோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும்கீர்த்தியோன்.
“ சிந்தையிலும், சென்னியிலும்”என்கிற வரி நயமானது. என்னய்யா பெரிய நயம்? “உள்ளும் புறமும்” ... அவ்வளவுதானே ? என்று கேட்பீர்களெனில், உங்களுக்கு என் வந்தனங்கள் !
கம்பனின் கவித்திறங்களையும், அவன் சொற்களின் தாள லயங்களையும், எப்படியேனும் சென்று தொட்டு விடவேண்டும் என்பதற்காக, என் “உரைகள்” கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டி இருந்தது. கம்பநேசனாக பெருமிதத்தையும், எழுத்தாளனாக சோர்வையும் அளித்த அனுபவம் அது. அப்போது எடுத்த புகைப்படங்களை , ஒரு எழுத்தாளனாக, எப்போதும் நான் காண விரும்ப மாட்டேன்.
குகன் சரிதம் தொடர்கிறது ; இசையனார் வியாக்யானம் முற்றிற்று.
உதவிய நூல்கள் :
1. கம்ப ராமாயணம் – முதன்மைப் பதிப்பாசிரியர் ; அ.ச.ஞானசம்பந்தன் – கம்பன் அறநிலை, கோவை
2. தம்பியர் இருவர் – அ.ச.ஞானசம்பந்தன் – சந்தியா பதிப்பகம்
3. காப்பிய இமயம் – என்.வி.நாயுடு – சாந்தி டிரஸ்ட், கோவை
நன்றி : உயிர்மை - பிப்ரவரி - 2018
↧