உடற்பயிற்சி மைதானத்துக்கு அருகில் வேங்கை மரத்திற்கு அடியில் இன்னொரு வேங்கை மரமென திகழ்கிறாள். அவள் கொழு நிழலின் கீழ் குழுமியிருக்கின்றனர் சிலர். இளமையைக் கடந்து விட்டவள் வசீகரம் குறைந்தவள். காமத்தால் எரிக்க முடியாதவள் கொஞ்சம் கலகலப்பானவள் ஒருவன் நெல்லிக்கனி சாறு பருகிக் கொண்டிருக்கிறான் ஒருவனுக்கு கொள்ளு ரசம் ஒருவன் அவித்த சுண்டலை வாங்குகிறான். அவளது வதங்கிய கீரையை யாரும் நம்புவது போலத் தெரியவில்லை. ஆயினும் அவள் அண்மையில் இருக்கையில் இரத்தம் சுத்தகரிக்கப்படுவதை நன்றாகவே உணர முடிகிறது வயிற்றுப் புண் உடனடியாக சரியாகி விடுகிறது. அவள் "இதயத்திற்கு நல்லது" என்று எழுதிப் போட்டிருப்பதை படித்துப் பார்த்து இதயம் "ஆம்"என்கிறது. பலஹீனத்தால் துவண்டிருக்கும் இந்த அதிகாலையில் முளைகட்டிய பயிர் அருகில் கொஞ்ச நேரம் நின்று விட்டு வந்தேன். |