என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் ,பிரித்து இடை களையார்
குப்பைக்கோழித் தனிப்போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
(குறுந்தொகை - குப்பைக்கோழியார்)
தலைவி, தோழியிடம் தாளாத தன் நோய் உரைத்தது.
மூண்டு எரியும் காமநெருப்பானது கண்கள் தந்தது. இந்நெருப்பு என் எலும்பைக் கூட விடாது பொசுக்கி அழித்திடும் போதிலும் தலைவனைச் சேர்ந்து முயங்க அவன் காணக் கிடைப்பதில்லை. அவனாகவே வந்து என் துயர் தீர்ப்பான் என்றால் அதுவும் ஆவதில்லை. ஏவிவிடுவாரும், இடையே பிரித்து விடுவாரும் இல்லாமல் குப்பைமேட்டில் தனியே நிகழும் கோழிச்சண்டை போல, தானாக எப்போது தணியுமோ அப்போதே தணியும் இந்நோய்.
கோழிச்சண்டை போட்டி பலர் அறிய பொதுவில் நடக்கும். அங்கு ஏவிவிடவும், பிரித்து விடவும் ஆட்கள் இருப்பார்கள். குப்பைமேட்டில் தானாக நிகழும் சண்டையைக் காண்பவர் இல்லை, கண்டாலும் நின்று விலக்குபவரும் இல்லை.
பழந்தமிழ்க் கவிதைகளில் பெண்ணின் கண்கள் குறித்த வர்ணனைகள் நிறைய உண்டு. அந்தக்கண் கொண்டு வந்து சேர்த்த காமவேதனை குறித்த கண்ணீரும் உண்டு. இங்கு கண் தந்த நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. சதையைக் கருக்கி முடித்து எலும்பையும் சாம்பலாக்கி எழுந்தாடுகிறது.
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்காமத்துப்பால் முழுக்க கண்களை பாடித் தீர்த்திருக்கிறார் அய்யன். "கண் விதுப்பு அழிதல்"என்று ஒரு அதிகாரமே உள்ளது. அதாவது தலைவனைக் காண விரும்பும் கண்கள் அவனைக் காணாது வருந்தி அழும் பாடல்களைக் கொண்ட அதிகாரம். முதல் அதிகாரமான "தகை அணங்கு உறுத்த"லில் கண்களே தலைவியை அணங்காக்குகின்றன.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குநானவளை நோக்க, அவள் திரும்ப நோக்கிய நோக்கோ அணங்கு படை திரட்டி வந்து வருத்துவது போல் உள்ளது. தனி அணங்கையே தாள முடியாது. அணங்குப் படையை எப்படித் தாங்குவான் தலைவன்?
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்"அமர்த்தல்"என்றால் பொருத்தமின்மை. இவளோ பார்க்க பேதைப்பெண் போல் இருக்கிறாள். ஆனால் இவள் விழியோ கண்டாரையெல்லாம் உண்டுவிடும் கதியில் இருக்கிறது. எனவே இந்தக் கண்கள் இவளுக்குப் பொருத்தமில்லை என்கிறான் தலைவன்.
"உண்கண்"என்கிற சொற்கட்டை சங்க இலக்கியங்களில் பரவலாகக் காண முடிகிறது. அது ஒரு அலங்காரம். 'மை உண்ட கண்கள்'என்பது பொருள். ஆனால் 'உயிர் உண்ணும் கண் 'என்பது எவ்வளவு பெரிய பயங்கரம்!
காதல் இன்பமயமானதுதான். ஆனால் அதனுள் நிரம்பித் ததும்பும் தீராத ஏக்கம் அதை நோயாகவும் ஆக்குகிறது. காதலைத் தருவதென்பது நோயைத் தருவதும்தான்.
ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்மகிழ்ச்சி! மகிழ்ச்சி! முன்பு எமக்கு காதல் நோயைத் தந்து வருத்திய கண்கள், இன்று தலைவனக் காணாது தானும் வருந்தி அழுகின்றனவே.. மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
"ஓஓ" என்பது என்னவொரு ஆனந்தக் கூச்சல் ! பழிக்குப்பழி, இரத்ததிற்கு இரத்தம் என்கிற புகழ் பெற்ற வசனங்கள் அந்தக் கூச்சலுக்குள் ஒளிந்துள்ளன.
காமத்தில் கண்களின் பங்கைப் பாடுகிறார் இன்னொரு குரலில்.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்காதலர் கள்ளத்தனமாக நோக்கிக் கொள்ளும் அந்தச் சின்னஞ்சிறு நோக்கமே போதும் அதுவே காம இன்பத்தில் சரிபாதியைத் தந்துவிடுகிறது. இல்லையில்லை அதற்கு மேலும் அளித்துவிடுகிறது.
காமத்தில் செம்பாகம் என்று சொல்வதே அவ்வளவு கவித்துவமானது. “அன்று அதனினும் பெரிது” எனும் போது நாம் ஸ்தம்பித்துவிடுகிறோம். கொஞ்சம் முயற்சி செய்தால் கண்களிலேயே கரு உருவாகிவிடும் என்கிறார் அய்யன். "நிஜமாலே நீர் தெய்வப்புலவரா"? என்று திருப்பிக் கேட்கிறோம் நாம்.
"என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கிஎன்கிறது கபிலரின் புகழ் பெற்ற பாடலொன்று.
அப்படிக் கடைக்கண்ணில் என்ன தான் இருக்கிறது? ஆசை ததும்பி வழிகிறது . கள்ளம் ததும்பி வழிகிறது. விளையாட்டின் உச்ச கணம் நிகழ்கிறது. அது திருட்டு மாங்காய்களின் நிலம். எனவே தித்திப்பு கூட.
கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல்..
கடலில் விடமென அமுதென மதனவேள்கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலின் உயிரையும் , உணர்வையும் நடுவுபோய்
இங்கு கண் விடமாக , அமுதாக,மதனவேள் படையாக உள்ளது. அந்த விழிச் செருக்கு உணர்வையும் உயிரையும் உருவி எடுத்துவிடுகிறது. "அந்தக் கண்ணுக்குத்தான் மச்சி விழுந்துட்டேன்"என்பது நவயுகத்து காதலனின் புலம்பல். மச்சிகள் அவ்வளவு ரசனைக்காரர்கள்! கண்கள் சமயங்களில் முலைக்கு, இதழுக்கு, இடைக்கு இடக்கரடக்கல் ஆகி நிற்கின்றன.
எது அஞ்சப்படுகிறதோ அது தூற்றவும் படும்.
நமது நிலையாமைப் பாடல்களில் கண்கள் இழித்துப் பேசப்பட்டுள்ளன
“வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்வேல் கண்ணள் என்று உன்னால் ஆராதிக்கப்பட்டவள் குடுகுடு கிழவியாகி கோலையே கண்ணாக ஊன்றி நடக்கும் முதுமையை அடைவது நிச்சயம் என்று இளமை நிலையாமை பேசுகிறது நாலடியார்.
“தண்ணீர் , பீளை தவிராதொழுகும்என்கிறார் பட்டினத்தார்.
இவ்வளவு இடித்துரைப்புகளுக்குப் பிறகும் கடைக்கண் ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது நின்றபாடில்லை. நிற்கப்போவதுமில்லை. அடங்கும் என்பது ஆட்டத்திற்குத் தெரியாதா என்ன ? ஆனால் ஆடி ஆடிதான் அடங்கும்.
"மறக்க முடியவில்லை , மறக்க முடியவில்லை"என்று காதல் சமூகம் இரத்தம் கொதிக்க குமுறிக் கொண்டிருக்கையில் பாரதியின் தலைவி ஒருத்தி சாதாரணமாக 'மறந்து விட்டேன்'என்கிறாள். இந்தப் பண்பால் தமிழ்க்காதல் கவிதைகளின் மொத்தத்திரட்டிலும் இந்தப் பாடல் தனித்து நிற்கிறது. அவளுக்கு மொத்தமாக மறக்கவில்லை. மங்கலாகத் தெரிகிறது.. மங்கலாகத் தெரியும் ஒன்று அதிக கவனத்தை கோருவது . அதிக கவனம் அதிக நினைவை இழுத்து வருவது. தலைவி மறந்து விட்ட பாவமும் கண்கள் மீதுதான் விழுகிறது.
"கண்கள் புரிந்து விட்ட பாவம்உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்கண்ணனழகு முழுதில்லைண்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்
ஆசை முகம் மறந்து போச்சே- இதை
சுகுமாரனின் கவிதை ஒன்று உண்டு. கண் மருத்துவமனையின் முகப்பில் எழுதி வைத்தால் அதன் லாபத்தை கணிசமாக உயர்த்தவல்லது. வெகு எளியது ஆயினும் ஆழத்தில் அவ்வளவு கவித்துவம் மிக்கது.
"கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்க. மோகனரங்கனின் கவிதை ஒன்று...
உயிர் ஈரும் வாள்
மிகினும்குறையினும்
நோய் செய்யும்
பேதைப் பெருமழைக்கண்
இழைத்த
பீழைக்கு
மாற்றும் மருந்தும்
மற்றொன்று
அவளது நோக்கு நோயைக் கொண்டு வருகிறது. அந்த நோய்க்கு மருந்தும் அதே நோக்குதான் என்கிறார் வள்ளுவர். நோயும் மருந்தும் ஒன்றேயான வினோதம் காதல்.
சில தருணங்களில் கண்கள் இரண்டும் இரண்டு அலுமினியத் தட்டுகள். நாம் இரந்தது நமக்குத் தெரியும். கண்களின் பிச்சை காணச் கசியாதது. அவ்வளவு பாவமாக இரக்கப் பழகியவை அவை. நேர் நின்று கண்டால் மொத்தத்தையும் இழக்க வேண்டி வரும் என்றுதான் தருகிற இடத்தில் இருப்போர் கண் காணாத இடங்களுக்கு தப்பி ஓடிவிடுகிறார்கள்.
எத்தனை முறைவந்து கேட்டாலும்
“இல்லை இல்லை’
என்பதே உன் பதில்
எப்போதும் இல்லாததைக் கேட்பவர்களுக்கு
தருவதற்கு எதுவுமிருப்பதில்லை
ஆயினும்
ஒவ்வொரு முறையும்
“இல்லை இல்லை”
எனக் கேட்க நேர்பவனின்
கண்களில் தோன்றி மறைகிறதே
ஒரு சாம்பல் திரை
நீ
அதைக் கொஞ்சம்
மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதை வாழ்வின் பல தருணங்களைச் சென்று தொடுவது. மிகச்சிறந்த காதல் கவிதையாகவும் ஒளிர்ந்து கொண்டிருப்பது.
கண் தந்த கொள்ளி சட சடத்து எரிகிறது. சமயங்களில் அது இதயத்திற்கு இதமாக இருக்கிறது. சமயங்களில் ஆளையே எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறது.
கண்கள் காதலைக் கொண்டு வந்து சேர்கின்றன என்கிறது இலக்கியம். பார்வையற்றோர்கும் காதல் வருகிறது. காதல் முறிவும் வருகிறது. காமம் உடலில் உயிர் போல் புதைந்திருப்பது அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அழகு என்பது அவர்களுக்கு எப்படிப் பொருள் படும் ?அது ஸ்பரிசமாக இருக்குமா? அல்லது நறுமணமா? தூய அன்பா? கருணையா? எனக்கு நவீனக்கவிதைகள் வரை வாசிக்கும் பார்வையற்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்கலாம் "அழகு என்றால் என்ன? "என்று. ஆயினும் அது அவரது துரதிர்ஷடத்தை ஆழமாகக் கிளறி விட்டுவிடுமோ என்று அஞ்சினேன். ஆகவே ஆராய்ச்சியைத் தொடரவில்லை. மோசமான ஆராய்ச்சிகளின் முடிவில் ராட்சத மிருகஙகள் எழுந்து வந்து மனித குலத்தை நாசம் செய்யும் கதைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
(நன்றி: உயிர்மை மார்ச் இதழ்)