50 ல் நிற்கும் ஒரு மனிதனுக்கு அதிகாலையில் அவசரமாக ஒரு எலுமிச்சை தேவைப்பட்டுவிட்டது பக்கத்துக் கடையில் இருப்பு இல்லாததால் அவர் கொஞ்ச தூரம் நடக்க வேண்டி இருந்தது. மனிதன் ஒரு போதும் தனியே நடப்பதில்லை. வாங்கிய எலுமிச்சையை ஏனோ திடீரென சுற்றத் துவங்கிவிட்டார் எங்கிருந்தோ எழுந்து வந்தான் ஒரு சுழற்பந்து வீச்சாளன் அடுத்த கணம் அவர் அந்தரத்தில் சுழற்றி விட்ட பந்து பெரிய மைதானத்தில் நடு ஸ்டம்பை கழற்றிக் கொண்டோடியது. கரகோஷங்களுக்கும் வெறிக் கூச்சல்களுக்குமிடையே களிமுற்றி ஆடுகிறார். ஆட்டம் முடிவதற்குள் வாசல் வந்துவிட்டது. பந்து ஒன்றுமே தெரியாதது போல் எலுமிச்சைக்குத் திரும்பி விட்டது. சின்ன எலுமிச்சைக்குள் இவ்வளவா சுற்றிக் கொண்டிருக்கும்? அறிந்திருந்தால் அவர் காலை உணவைத் தவிர்த்திருப்பார். |