Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 791

நெஞ்சொடு கிளத்தல் - காமத்துப்பால்

$
0
0


பிரிவாற்றாமையால் தலைவி தனக்குத் தானே நெஞ்சோடு பேசிக்கொண்ட பேச்சுக்கள் இவ்வதிகாரம். உண்மையில் நாம் நெஞ்சை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடுவதில்லை. அல்லது நெஞ்சம் நம்மை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடுவதில்லை. இப்படி இருவரையும் பிரிக்க இயல்வதில்லை. அதுவும் மானிடர்களுக்கு காதல் , கீதல் பிறந்துவிட்டால்  நெஞ்சம் 
பகலிரவு பாராமல் பணியாற்ற வேண்டியுள்ளது. 

நெஞ்சம் நமக்கு ஆதரவாகப் பேசுகிறது. எதிராகப் பேசுகிறது. எப்படியும் நம்மைச் சார்ந்துதான் பேசுகிறது. அதற்கு மட்டும் தானாகப் பேசுகிற சக்தியிருந்தால் "இது போன்ற விசயத்திற்கெல்லாம் என் தாலிய அறுக்காம தாங்களாகவே ஒரு முடிவெடுத்துக் கொள்ளுங்கள்"என்று கையெடுத்துக் கும்பிட்டுவிடும். "சும்மா இருக்கும் சுகம்"என்பது நெஞ்சற்று இருப்பதுதான். "நெஞ்சொடு கிளத்தல்"என்று பெயரிருந்தாலும் இவ்வதிகாரத்தை "நெஞ்சொடு புலம்பல்"  என்று விளிப்பது  மேலும் பொருத்தமாயிருக்கும். 

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் 
எவ்வநோய் தீர்க்கும் மருந்து
(1241)

நெஞ்சே! தீராதநோயை தீர்க்க வல்ல மருந்தொன்றை, அது எதுவாயினும்,  எனக்கு உரைப்பாயாக!

இந்நோயைச் சகிக்க இயலவில்லை. எத்தை தின்னவும், எத்தை குடிக்கவும் அவள் தயார். என்ன சொன்னாலும் செய்கிறேன் சொல் என்கிறாள் . நெஞ்சம் சில சமயம் பூச்சிக் கொல்லி மருந்தைச் சொல்லிவிடுகிறது.
"எவ்வம்"எனில் துயரம், நோய். எவ்வநோய் என்பதை 'ஒன்றானும் தீராத நோய்'என்கிறார் அழகர்.

காதல் அவரிலர் ஆகநீ  நோவது 
பேதைமை  வாழியென்  நெஞ்சு
(1242)

அவருக்கு நம் மேல் கொஞ்சமும் அன்பில்லை எனும் போதும் , நீ மட்டும் அவரையே எண்ணிக் கொண்டு வருந்துவது எவ்வளவு பேதைமை? 

"வாழி என் நெஞ்சு"என்பது இகழ்ச்சிக் குறிப்பு.

"நில்னென்று சொன்னால் மனம் நின்றா போகும்?"

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் 
பைதல்நோய் செய்தார்கண் இல்
(1243)

அவரோடு செல்லவும் முடியாமல், அவரின்றி ஆற்றவும் முடியாமல் அவரையே எண்ணிக் கொண்டு நீ வருந்தி அழிகிறாய் நெஞ்சே.  ஆனால் இந்த வருத்தத்தை அளித்த அவருக்கோ நம் மீது எந்த இரக்கமும் இல்லை.

உள்ளுதல்- நினைந்தல்
பைதல்- துயரம்

"என்பரிதல்"என்பதை பரிதல் என்? என்று கூட்டி வாசிக்க வேண்டும்.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று
(1244)

இந்தக் கண்கள் அவரைக் காட்டச் சொல்லி ஓயாது என்னை அரித்துத் தின்கின்றன. நெஞ்சே! நீ தலைவனிடத்துச் செல்லும் போது இவற்றையும்  அழைத்துப் போய்விடு. 

"நெஞ்சே!  நீயொரு மோசமான பேய். என்ன சொன்னாலும் அடங்க மாட்டாது தலைவனிடமே செல்கிறாய். போவதுதான்  போகிறாய்  போகையில் இந்த இரண்டு குட்டிச்சாத்தன்களையும் ஓட்டிக் கொண்டு போய்விடு"என்று நோகிறாள் போலும் தலைவி?
      
கொளச்சேறி - கொண்டு செல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் 
உற்றால் உறாஅ தவர்
(1245)

எம்  நெஞ்சே!  நாம் இவ்வளவு விரும்புபவர் நம்மைத் துளியும் விரும்பாத போது,  அவர் நம்மை வெறுத்து விட்டார் எனவே நாமும் அவரை  வெறுத்து ஒதுக்குவோம் என்று எண்ணுகிற துணிவு உனக்கு உண்டா? 

துணிவெல்லாம் உண்டு அய்யனே? என்ன , காலம்தான் கொஞ்சம் குறைவு. இரண்டே முக்கால் நிமிசத்துக்குக்  குறையாது நீடிக்கும் வீறாப்பு. பிறகு , ஓடிப்போய் என்பொடியக் கட்டிக் கொள்ளும் காதல். 

காதலர்க்கும் காதலுக்குமான கயிறிழுக்கும் போட்டியில் எப்போதும் காதலே வெற்றி வாகை சூடும். காதலர் தம்கட்டுவதெல்லாம்  வெறுமனே ஒரு பாவனைதான்.

செறுதல்- வெறுத்தல், சினத்தல்



கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் 
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு
(1246)

ஊடற் காலத்தில் காதலரைக் காண நேர்ந்துவிட்டால்  கொஞ்ச நேரமேனும்  அந்த ஊடலை நீட்டிக்காமல்  உடனே அவனைக் கூடிவிடுவாய். அப்படியான நீ இப்போது அவனைக் காய்வதெல்லாம் வெறும் பொய்தானே நெஞ்சே?

"சனியனே! சனியனே!"என்று பரஸ்பரம் ஏசிக்கொள்ளும் ஜோடி அடுத்த நொடியில் இதழுண்கையில் சனிக்கிரகம் கொஞ்சம் குழம்பித்தான் போகும்.

கலந்துணர்த்தும் காதலர்- ஊடலைக் கூடித் தணிப்பதில் வல்லவர்.

காமம்விடு ஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 
யானோ பொறேன் இவ்விரண்டு
(1247)

நெஞ்சே!  நீ அவன் மீதான காமத்தை விட்டுவிடு அல்லது என்னிடமிருக்கும் நாணத்தை அகற்றிவிடு.  இரண்டையும்  
ஒருசேரத் தாங்க இயலாது தவிக்கிறேன் நான்.

நாணத்தை விட்டுவிட்டால் என்ன செய்தாகிலும் காதலனைச் சேர்ந்துவிடலாம் . காதலையே விட்டுவிட்டால் துன்பமே இல்லை. ஆனால் இந்த நெஞ்சம் இரண்டையும் விட்டுவிடாது துயரத்தால் வதைக்கிறது.

"யானோ பொறேன்"என்கிற சொற்றொடர்,  சவுக்கின்  கீழ் வீழ்ந்திருக்கும் மனிதனைப் போல் கை கூப்பி இறைஞ்சுவதாகத் தோன்றுகிறது எனக்கு.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
(1248)

நம் துயரத்தின் வெம்மை தெரியாததால் அவர் இரங்கி வந்து நம்மை அன்பு செய்யாதிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்ல விரும்புகிறாயே நெஞ்சே , நீதான் எவ்வளவு பேதை?

தலைவன் ஒன்றும் பிரிவுத்துயர் அறியாதவனல்ல. ஆனாலும் வர இயலவில்லை அவனால். நெஞ்சம் இதை அறியாமல் அவனைக் காணக் கிளம்புவதால் "பேதை"ஆனது. 

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு
(1249)

நெஞ்சே!  காதலர் நமது உள்ளத்துள் குடியிருக்க அவரைத் தேடி  நீ யாரிடம் அலைகிறாய்.

இருக்கு இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவதேன் பேதை நெஞ்சே!

உழை- இடம், பக்கம்

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா 
இன்னும் இழத்தும் கவின்
(1250)

நம்மைக் கூடாது பிரிந்து சென்ற தலைவனை நெஞ்சத்தில் வைத்திருப்பதால் என் அழகு மேலும் மேலும் அழிந்து வருகிறது.

அவன் என் நெஞ்சை விட்டு அகலப் போவதும் இல்லை. என் பழைய அழகு இப்போதைக்கு திரும்பப் போவதுமில்லை.  அது அவன் வருகையில்தான் திரும்ப வரும்.
  
துன்னுதல்- பொருந்துதல்,  செறிதல்.  இங்கு கூடுதல்

"மனம் ஒரு உறுப்பாக மட்டும்  இருந்திருந்தால்
இன்னேரம் அதை வெட்டி 
தூர எறிந்திருப்பான் தலைவன்"

என்கிறது தலைவனின் துயர்பாடும் ஒரு நவீனப் பாடல்.


படங்கள் உதவி: செந்தில்குமார் நடராஜன்

Viewing all articles
Browse latest Browse all 791

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!