பிரிவுத்துயர் பொறுக்காது தலைவியின் உறுப்புகள் அழகிழந்து வருந்துவதைச் சொல்லும் அதிகாரம். பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்த “உறுப்பு நலன் அழிதல்” பரவலாகப் பாடப்பட்டுள்ளது.
1231.
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
நறுமலர் நாணின கண்.
நமக்கு பிரிவுத்துயரை அளித்துவிட்டு தூரதேசம் சென்றாரை எண்ணியெண்ணி கண்ணீர் வடித்து பொலிவிழந்த கண்கள் அழகிய மலர்களின் முன்னே நாணி நிற்கின்றன.
முன்பு அந்த மலர்கள் தலைவியின் கண்களைக் கண்டு நாணித் தோற்று நின்றன. அவ்வளவு அழகு பூத்திருந்தாள் அவள் . இன்றோ, இந்தப் பிரிவோ மொத்த அழகையும் கெட்டழித்து விட்டது.
சிறுமை- இங்கு துயரம். சேண்- தூரம்
1232.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
பசந்து பனிவாரும் கண்.
அழகிழந்து அழுகின்ற கண்கள் நம் காதலரின் கருணையின்மையை உலகுக்குச் சொல்லிவிடுகின்றன் போலும்?
"பசந்து பனிவாரும் கண்"என்கிற சொற்கட்டு அழுகையைக் காட்டிலும் அதிகமாகச் சொல்லிவிடுகிறதல்லவா?
பனி- இங்கு கண்ணீர்
1233.
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
மணந்தநாள் வீங்கிய தோள்.
தலைவனைக் கூடியிருந்த காலத்தில் பூரித்து வீங்கிய தோள்கள், மெலிந்துபோய் அவன் பிரிவை ஊருக்குச் சொல்லிவிடுகின்றன.
"சால அறிவிப்ப "அதாவது மறைக்கவே முடியாதபடி அறிவித்து விடுகின்றன.
தணத்தல்- நீங்குதல் இங்கு மெலிதல்
1234.
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
தொல்கவின் வாடிய தோள்.
தலைவனின் பிரிவால் என் பழைய அழகெல்லாம் கெட்டழிய, பருத்த தோள்கள் மெலிந்துவிட்டதால் கைவளைகள் தானாகக் கழன்று விழுகின்றன.
"கைவளை நெகிழ்தல்"அதிகம் பாடப்பெற்ற ஒன்று. பழந்தமிழ் கவிதைகளுக்குள் நடக்கையில் கொஞ்சம் பார்த்து நடக்கவேண்டும். அஜாக்கிரதையாக இருந்து விட்டால் பிறகு ஏதோ ஒரு தலைவியின் கைவளை இடறி, நாம் குப்புறகவிழ்ந்து விட நேரலாம்.
ஆனாலும் இப்பாடலின் சத்தம் அதை பழையதாக்கி விடாமல், உயிர்த்துடிப்பு குன்றாமல் பார்த்துக்கொள்கிறது
பணைத்தல்- பருத்தல்
1235.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
தொல்கவின் வாடிய தோள்.
அழகெல்லாம் அழிய, மெலிந்து வாடிய என் தோள்களும், அதிலிருந்து கழன்று விழும் வளைகளும் பிரிந்து சென்ற தலைவனின் கொடுமையைச் ஊருக்குச் சொல்லிவிடுகின்றன
"நல்லன் என்றும் யாமே, அல்லன் என்னும் என் தடமென் தோளே "என்கிறது ஒரு சங்கப்பாடல்.
"ஊர்பழிக்கு அஞ்சி அவனை நான் நல்லவன் என்றே சொல்கிறேன். என் மெலிந்த தோள்கள் அதனை மறுத்து அல்லன் ! அல்லன் ! என்கின்றன.
1236.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
கொடியர் எனக்கூறல் நொந்து.
வளைகள் கழன்ற, தோள்கள் மெலிந்த என்னைக் கண்டோர் நம் தலைவனைக் கொடியன் என்று தூற்ற, அது கேட்டு நான் வருந்தி அழிகிறேன்.
ஊருக்குக் காட்டிக் கொடுப்பதும் அவள் தோள்கள்தான். பிறகு பழி கேட்டு நோவதும் அவளேதான்.
1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
வாடுதோட் பூசல் உரைத்து.
நெஞ்சே, நீ பாடல் பெற விரும்பவில்லையா? கொடிய தலைவனுக்கு என் மெலிந்த தோள்களின் பிணக்கை உரைத்து.
அப்படி நீ போய் அவனிடம் என் வருத்தத்தை சொல்லிவிடுவாயானால், அது கேட்டு அவன் வீடு திரும்பி விடுவான். காலமெல்லாம் உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். உன்னைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவேன். அந்தப் பெருமையெல்லாம் உனக்கு வேண்டாமா? என்று கேட்கிறாள் தலைவி.
தலைவிக்கும் அவள் தோளுக்கும் என்ன பூசல்? தோள்கள் மெலிவதை, கைவளை நெகிழ்வதையெல்லாம் தலைவி விரும்புவதில்லை. அவை தாமே நிகழ்ந்து தலைவனின் பிரிவை ஊருக்குக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. இப்படியாக ஊர் தூற்ற அது ஏதுவாக இருப்பதால்தான் தலைவிக்கும், அவள் தோளுக்கும் பூசல்.
1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
பைந்தொடிப் பேதை நுதல்.
இதற்கு முந்தைய பாடல்களெல்லாம் தலைவி உரைத்தவை. இனிவரும் மூன்று பாடல்களும் தலைவன் கூற்று. வினைமுடித்து திரும்பும் வழியில், தலைவியது காதலின் கடுமை எண்ணி அவளை விரைந்து காணும் ஆவலில் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது.
முன்பு அவளை முயங்கிக்கிடந்த பொழுது , அவளுக்கு நோகுமோ என்று என் கைகளைச் சற்றே தளர்த்திவிட்டேன். அதற்கே அவள் நெற்றியில் பசலை பாயந்து விட்டது.
அச்சிறு பிரிவையும் பொறுக்க இயலாத தலைவி இவ்வளவு நெடிய பிரிவால் எவ்வளவு துயரமுற்றாளோ? அவளை விரைந்து காண வேண்டும் .
ஊக்குதல்- நெகிழ்த்தல்
1239.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
பேதை பெருமழைக் கண்.
ஒரு முறை முயக்கதிற்கிடையே கொஞ்சம் காற்று புகுந்துவிட்டது. அதற்கே பிரிந்துவிட்டது போல பசந்துவிட்டன அவள் கண்கள்.
பேதை பெருமழைக் கண்.- பேதைமையுடைய குளிர்ந்த பெரிய கண்கள்
1240.
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
ஒண்ணுதல் செய்தது கண்டு.
கண்களின் பசப்பு நுதலின் பசப்பு கண்டு வருந்தியது
இவ்வளவுதான் பாட்டில் உள்ளது. உரைகளும் இதையேதான் நீட்டி முழக்கிச் சொல்கின்றன. ஆனால் அழகர் இதற்குச் சுவையானதொரு விளக்கம் தருகிறார். அதாவது புலன்கள் போட்டி போட்டுப் பசக்கின்றனவாம். நெற்றி, கைகளை நெகிழ்த்தவுடனே பசந்துவிட்டது. தாம் கைகளை விலக்கி, கொஞ்சம் மெய்யும் விலக்கி, இடையே காற்று புகுந்த பின்புதானே பசந்தோம். அவ்வளவு ஆற்றி இருக்க முடிகிறதென்றால் எவ்வளவு கல் நெஞ்சம் தனக்கென்று கண்கள் வருந்துகிறதாம்
ஒண்ணுதல் – ஒளிவீசும் நுதல் பருவரல் – துயரம்
“ பாய்பரி நெடுந்தேர் கொண்கனோடு
தான் வந்தன்று என் மாமைக் கவினே.”
என்கிறது ஒரு பழம்பாடல். அதாவது தலைவன் போகும் போதே தலைவியின் அழகையும் எடுத்துக் கொண்டு போய்விட்டானாம். இப்போது அவனது தேர் திரும்பிவிட்டது. எனவே தன் அழகும் தனக்குத் திரும்பி விட்டது என்கிறாள் தலைவி.
படங்கள் உதவி : செந்தில்குமார் நடராஜன்