என் அவமானங்களைக் கழுவ
நூறு சமுத்திரங்கள் வேண்டும்
என் புண்களை ஆற்ற
நூறு மருத்துவர்கள் வேண்டும்
என்னைக் கொஞ்சம் நறுமணமூட்ட
நூறு தைலப்புட்டிகள் வேண்டும்
என் கண்ணீரை நிறுத்த
நூறு அற்புதங்கள் வேண்டும்.
என் துயரங்களைக் கடைய
நூறு மலையும், நூறு பாம்பும் வேண்டும்.
என் மண்டைப் பேய்களின் கொட்டத்தை அடக்க
நூறு மாந்தீரிகர்கள் வேண்டும்.
என் இமைகளைத் தூக்கி
கண்களில் வைக்க
நூறு நூறு தெய்வங்கள் வேண்டும்
இவை எதுவும் இல்லையெனில்
ஒரு பொட்டு நீ வேண்டும்.