அம்மாவை சந்தைக்குள் அனுப்பி விட்டு
காதுகளில் ஓயரைத் திணித்தபடி
சங்கீதத்தில் குதித்து விட்டான் மகன்.
பெரிய பையை முழுக்க நிரப்பிக் கொண்டு திரும்புகிறாள்.
ரொம்பவும் கனக்கிறது போலும்?
கைமாற்றி கைமாற்றி
இழுத்து இழுத்து நடந்து வருகிறாள்.
மூன்றடி தூரத்தில் நின்று அழைக்கிறாள் மகனை
ம்கூம்...
அவன் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறான்.
டே..
டேய்..
விஷால்..
விஷால்..
டே..விஷால்..
ஒவ்வொரு விளிக்கும்
கொதிப்பில்
ஏறிக் கொண்டே போனவள்
சட்டென செல்லம் தட்ட
சர்ர்ர்ர்ரென இறங்கிவிட்டாள்.
கையிரண்டும் இடுப்பில் கூட்டி
இதழ்க்கடையில் முத்தரும்ப
"அடேய்... என் வெல்லக்கட்டி.."
என்பது போல முறைக்கிறாள்.