Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 792

சேலம் மற்றுமொரு ஊரே

$
0
0
               
                               
                                                                                   

  நண்பனும் கவிஞனுமான  வே.பாபு  11/11/2018 அன்று மாலை சுமார் 6  மணியளவில்  உடல் நிலை கோளாறு காரணமாகக்   காலமானான்.  1974 ல்  பிறந்த பாபு  தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை  என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன்.

  பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும்  பலத்தால்  மட்டுமே பிரகாசித்து விட  முடியாது.  பலகீனம்  பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன
.
   தாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள்  என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய  லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவனுடைய  நிறையக் கவிதைகளில் ஒரு முன்னறிவிப்பு போல மரணம் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.கூடவே ஒரு சிறுமியும் வருகிறாள். இனி அந்தச் சிறுமியின் மடிதனில் அவன் இளைப்பாறட்டும்.

   தக்கை அமைப்பு சார்ப்பாக பாபு ஒருங்கிணைத்த இலக்கிய கூட்டங்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு. வேறு வேறு நிலைப்பாடுகள் உடைய எழுத்தாளர்களையும் அவனால் எளிதாக ஒன்றிணைக்க முடிந்தது.அக் கூட்டங்கள் சுதந்திரமானவை. சுதந்திரத்திற்கே உரிய மகிழ்ச்சிகளையும், சிக்கல்களையும் கொண்டவை. அநேக கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னளவில் கவிதை குறித்து நடந்த இரண்டு நாள் அமர்வொன்று மிக முக்கியமானது.

    இந்தக் கூட்டங்கள் சேலம் சிவா லாட்ஜில் நடக்கும். அல்லது அதை மையப்படுத்தி அருகில் எங்காவது நடைபெறும். அந்த விடுதியின் வாராண்டாவிலும், மொட்டை மாடியிலும்  மலைகளைப் பார்த்த படி அமர்ந்து,  விடிய விடிய பேசிக் களித்த  பொழுதுகளை மறப்பது கடினம். அங்கு புதிதாக வந்து செல்லும் இளம் எழுத்தாளன் கூட  அடுத்த சில நாட்களில் அன்றாட வாழ்க்கையில் ஒன்ற  முடியாது வினோத துயரங்களுக்கு ஆளாவதை நான் கண்டிருக்கிறேன்.  அப்படி அந்த விடுதி முழுக்க மகிழ்ச்சி வியாபித்திருக்கும்.” நீ ஒரு எழுத்தாளன் ; எழுத்தாளன் தவிர வேறு ஒன்றுமில்லை..”  என்று  அது உறுதிபடச் சொல்லி விடும்.

   நினைவேந்தல் உரையில்  செல்மா ப்ரியதர்சன் சொன்னது போல ‘செயல்முனைப்பும், தன்முனைப்பும் அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாதவை’.  ஆனால் பாபுவால் இயல்பாகவே தன்முனைப்பில் இருந்து விலகி நிற்க முடிந்திருக்கிறது. அவன் அரும்பாடுபட்டு ஒருங்கிணைக்கும்  கூட்டங்களில் “ ஒருங்கிணைப்பு” என்று வேறு யாராவது ஒருவரின் பெயரே இருப்பது வழக்கம். மேடையும் அவர் வசமே இருக்கும். பாபு கடைசி வரிசையிலோ அல்லது மதிய உணவிற்கான ஏற்பாடுகளிலோ இருப்பான்.

  யாரோ ஒரு  சம்பந்தமற்ற மனிதரின் வாயிலிருந்தும் “சேலம்”  என்கிற  சொல்லைக் கேட்கையில் மனத்துள் துள்ளி விழுமே ஒரு மீன், அந்த மீன் இப்போது சடலமாக மிதக்கிறது. இனி சேலம் மற்றுமொரு ஊரே. திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி என்பது போல அதுவும் வெறுமனே ஒரு ஊர் பெயராகிவிட்டது.

   வாதைகள் பாபுவை நொறுக்கிக் கொண்டிருக்கும் போதும், “ நான் உன்னோடே இருப்பேன் ; வாதை உன்  கூடாரத்தை அணுகாது “ என்றவாறு மனிதர்களைத் தேற்றி மீட்க அவனால் முடிந்திருக்கிறது. வீடு சவுக்கால் விளாசத் துவங்கும் போதெல்லாம்  நினைவில் வரும் முதல் முகம் அவன் முகமே. வீட்டில் இல்லாத எதோ ஒன்று அவனிடம் நிறைய இருந்திருக்கிறது. “ சேலம் போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்...”  என்று உறுதியாக நம்பும் நண்பர்கள் சிலர் உண்டு.
   
“  இனி  நமக்கு நாம்தான் நண்பர்களே “


                   நன்றி : இந்து தமிழ்திசை

( 18/11/18-ல் வெளியான குறிப்பின் முழுவடிவம்)

   
                                               

                                                             




 




                                                                                                                                       

                                                                     




 


















Viewing all articles
Browse latest Browse all 792

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!