பிள்ளைப் பிராயத்தில்
எப்போதாவது குளிப்பேன்
அடித்தால் பல் துலக்குவேன்
அறிவு வளர்ந்த பிறகு
தவறாது குளித்தேன்
தினசரி பல்துலக்கினேன்.
”ஆலும் வேலும் பல்லுக்குறுதி”என்றான் ஒருவன்.
நான் அதை நம்பினேன்.
இன்னொருவன் வந்தான்...
பல்லிடுக்கு, நுண்கிருமி என்றெல்லாம்
பயங்கரக் கதைகள் சொன்னான்.
உடனடியாக நெளிந்து வளைந்த புருசுக்கு மாறினேன்.
பிறகொருவன் சொன்னான்..
“ ஒரு துலக்கால் பண்ணிரண்டு மணி நேரத்தைத் தான் பாதுகாக்க இயலும்..”
பல் போனால் சொல் போச்சு...
நான் அன்றிரவே
இதுவரை தவற விட்ட எல்லா இரவுக்குமாய் சேர்த்துத் துலக்கினேன்.
என்னிடம் உள்ள ஒரே நல்லொழுக்கம் புகையாமை மட்டுந்தான்
நேற்றொருவன் எச்சரிக்கிறான்...
“ நீ ஒரு முறை பல் துலக்குவது ஆறு சிகரெட் புகைப்பதற்குச் சமம்..”
பல்முளைத்த காலந்தொட்டு
நான் துலக்கோதுலக்கென்று துலக்கி வரும் பற்பசையில்
நிக்கோடின் கலந்துள்ளதாம்.
நாளையிலிருந்து
நாள் ஒரு தகவலாக அழித்துக் கொள்ள இருக்கிறேன்.