Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 792

பிரமாதமான விபத்து- சக்திவேல்

$
0
0

 


அன்புள்ள இசைக்கு

என் பெயர் சக்திவேல். முன்பு உங்களுடைய வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் கவிதை தொகுப்பை வாசித்து கடிதம் எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் என அறிமுகப்படுத்தி கொண்டேன் - கடிதத்தில் தான். சென்ற டிசம்பரில் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் உங்களை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நண்பகல் நேர இடைவெளி பொழுதில் ஆங்கில பதிப்பு முகவர் கனிஷ்கா குப்தா அவர்களிடம் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், அஜிதன், விஷால் ராஜா என அரங்கின் நடுவில் வட்டமாக அமர்ந்து உரையாடி கொண்டிருந்தார்கள். நான் சக்கர நாற்காலியில் வந்து சேர்ந்து கொண்டேன். நீங்கள் எனக்கு எதிர்புறமாக இரண்டு நண்பர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தீர்கள். எனக்கு உங்களுடைய வாசகன் என்று அறிமுகப்படுத்தி கொள்ள ஆவலாய் இருந்தது. ஆனால் அந்நேரம் பார்த்து உங்கள் கவிதைகளோ, அவை பற்றிய எண்ணங்களோ எதுவுமே மனதில் இல்லை. இதற்காக உங்கள் கவிதைகளை படிக்காதவன் என முடிவு செய்யாதீர்கள். உங்கள் கவிதைகள் கொடுத்த உணர்ச்சிகரத்தை மட்டுமே அப்போது என்னிடம் தெளிவாக இருந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே தயங்கி தயங்கி விட்டுவிட்டேன்.

அண்மையில் ஜெ தளத்தில் தங்களுடைய அழகில் கொதிக்கும் அழல் கவிதை ரசனை தொகுப்பை அறிமுகப்படுத்தியிருந்தார். அதை வாங்கி வாசித்தேன். நாட்படுதேறல் என்ற தலைப்பில் அகழ் இதழில் நீங்கள் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பின் இறுதி உள்ளவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனால் தொடரின் முதல் கட்டுரைகளை தொகுப்பில் தான் வாசிக்க முடிந்தது. அத்தனை கட்டுரைகளும் பெரும் பரவசத்தை அளித்தன. அவற்றில் உங்களுக்கு நிகழ்ந்த பிரமாதமான விபத்தை எனக்கும் கொடுத்து விட்டீர்கள்.

இழத்தொறுஊம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுஊம் காதற்று உயிர்

என்ற குறளை உங்களின் சொல் வழி விரித்து கொண்டதிலிருந்து உழத்தொறுஊம் காதற்று உயிர் என்ற இரண்டு நாட்களாக படிக்கும் அத்தனை சொற்களில் ஊடுருவி தன்னை இணைத்து கொள்கிறது.

நாங்கள் நண்பர்கள் கம்பராமாயணம் வாசிப்போம். வெள்ளியன்று கிட்கிந்தை காண்டத்தில் அனுமன் இராம, இலக்குவரை சுக்கிரீவனுக்கு அறிமுகப்படுத்தும் நட்புகோட் படலத்தை வாசித்தோம். அதில் அனுமனின் நிலையை கம்பன் இப்படி சொல்கிறான்.

மேலவன் திருமகற்கு உரை
செய்தான் விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா
வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன் இடர்க்
கடல் கடந்தனாம் எனா
ஆலம் உண்டவனின் நின்று
அரு நடம் புரிகுவான்

சூரியனின் குமரனாகிய சுக்கிரீவனிடம் மலர் மாலை அணிந்த அளவு இல்லா வலிமையுடைய வாலிக்கு எமனாக நிற்கும் தகுதி கொண்ட இராம இலக்குவர்கள் வந்துவிட்டனர். நம்முடைய கடல் போன்ற இடர் இனி தீர்ந்தது என்று சொல்லிய அனுமன் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானை போல மகிழ்ந்து நடனமாடினான். இவ்வாறாக உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். அனுமன் ஏன் சிவபெருமான் என்றால் பால கண்டத்தில் வரும் முன்கதையை எடுத்து காட்டி விளக்கியுள்ளார்கள்.

நானோ ஒரு கவிதை வாசகனாக கதை போக்கில் வைத்து விரிக்க முயன்றேன். சுக்கிரீவனை சந்திப்பதற்கு அனுமன் இலக்குவனிடம் நீங்கள் யாரென்று என் தலைவர்க்கு உரைப்பேன் என்று வினவ இலக்குவன் இராமனின் பிறப்பு முதல் சீதை பிரிந்து வாடும் இந்நிலை வரை விளக்குகிறான். அதிலும் கம்பன் வெறுமே சொன்னதாக சொல்லவில்லை,

உணர்த்தினன் உணர்த்தக் கேட்டு
நின்ற அக்காலின் மைந்தன் நெடிது
உவந்து அடியில் தாழ்ந்தான்

என்று பாடுகிறான். இலக்குவன் சொல்லவில்லை தங்கள் துயரை உணர்த்தினான் என்கிறான். அந்த உணர்தலில் பெற்ற அகவிரிவில் இராமன் தாள் பணிகிறான் அனுமன். பிறர் துயரை தன்னுடையதாக ஆக்கும் அப்பெறு நிலையை அடுத்த பாடல்களில் பாடுகிறான் கம்பன்.

இராமனின் துயரை உணர்ந்து கொண்ட துயரம் அல்லவா அனுமன் உண்ட ஆலம். அந்த ஆலத்தை உண்டவன் இங்கே சுக்கிரிவனிடத்தில் தங்கள் இடர் தீர்ந்தது என மகிழ்ந்து நடம் புரிகின்றான். இங்கே அய்யனின் உழத்தொறுஊம் காதற்று உயிர் என்ற வரி இணைந்து கொண்டது. அத்துடன் அக்கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட பாரதியாரின்

கண்ணன் ஊதும் வேய்குழல் தானடீ
காதிலே அமுது
உள்ளத்திலே நஞ்சு

என்ற வரிகளும் நினைவில் எழுந்து இணைந்து கொண்டன.

நேற்றிரவு ஜெ வின் தளத்தை கைக்கு கிடைத்தவாறு துழாவி வாசித்து கொண்டிருந்தேன். ஒரு கட்டுரை அவரது நண்பர் லோகி மலையாள இயக்குநரின் படங்களை குறித்தது. அந்த கட்டுரை இப்படி முடிகிறது.

நமக்கு ஏன் உப்புச்சுவை பிடித்திருக்கிறது என்றார் லோகி ஒருமுறை. தொன்மையான காலத்தில் உணவை உப்பில் போட்டு கெடாமல் வைத்திருந்தார்கள். அப்போது உப்பு ஒரு சுவையாக நம் நாவில் குடியேறியது. அதே போன்றதே துக்கமும். இந்த மண்ணில் போராடி வாழ்ந்த நம் மூதாதையர் அறிந்தது துயரத்தை மட்டுமே.  நமக்கு ருசி பழகிவிட்டது. தங்கத்தட்டில் சாப்பிட்டாலும் கண்ணீரை விரும்புகிறோம். ஏன் என்றால் நாம் மனிதனின் துயரத்திலேயே அவனுடைய எல்லா திறமைகளும் மேன்மைகளும் வெளிப்படுவதை காண்கிறோம் என்றார் லோகி. துயரத்தின் உப்பில் ஊறவைத்தவை அவரது கதைகள் ஆவணங்கள் அவை.

மேலுள்ள உள்ள வரிகளை படித்தவுடன் அதே கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த உங்கள் கவிதை ரவா ரோஸ்ட் கவிதை மனதில் வந்தது.

ஒரே மகள்
தீவிர சிகிச்சை பிரிவில் கிடக்கிறாள்
விபத்தில் சிக்கித் தலையில் பலத்த காயம்
மாதம் இரண்டாகிறது
இப்போதுதான் நாளுக்கு ஒரு முறையென
விழித்துப் பார்க்கிறாள்
அப்போதும்
எங்கேயோ பார்த்துவிட்டுக் கண் மூடிக்கொள்கிறாள்
இவள் சவம் போலாகிவிட்டாள்
இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தாள்
பிறகு
நான்கு இட்லிகளை வாங்கி
அதில் இரண்டரையைச் சாப்பிட்டாள்
ஒரு நாள்
நான்கு இட்லிகளுடன் வந்த சர்வரிடம்
‘ரவா ரோஸட்’ இருக்கா என்று கேட்டாள்
வாங்கி உண்டாள்...
முழுசாக உண்டாள்...
கடைசியில் சுண்டுவிரலைக் கூட சப்பினாள்
கைகழுவும் வேளையில்தான் உணர்ந்தாள்
திடீரென இப்படி ‘ரவா ரொஸ்ட்’ தின்றுவிட்டதை,
உணவகம் ஒலிவீசக் கத்தினாள்.

இழத்தொறுஊம் காதற்று உயிர்...உழத்தொறுஊம் உழத்தொறுஊம் உண்டு ஒரு ரவா ரோஸ்ட்

இந்த கவிதை உணர்ந்த கணம் பழையவரால் என்ன பயன் ? என்ற கவிச்சொல் வேறு கோணத்தில் வந்து மனதில் தைத்தது.

அன்புடன்,

சக்திவேல்


Viewing all articles
Browse latest Browse all 792

Trending Articles