நேற்று மாலை
சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று
நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.
இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை
உடன் அழைத்துவருவது வழக்கம்.
இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம்.
சிறிது நேரத்திலெல்லாம்
சாமும், ஜானும் வந்துவிட்டார்கள்.
“ ஏகாந்த..வேளை..” என்று பாடியபடி
ஜானொடு ஜெயராமன்.
எல்லோரும் தென்காசிக்குப் போய்
கலாப்ரியாவை கூட்டி வந்தோம்.
கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது.
கலாப்ரியா அடிக்கடி யெயராமனை
கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார்.
அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை
அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.
பணிரெண்டு பேர் கூடி
மதுரம்.. அதிமதுரம்..
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீர்
பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது.
சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை
புகைத்துக்கொண்டிருக்கையில்
கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன.
விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஆணைகளைப் பிறப்பித்த படியே
’ PATROL “ வண்டி எங்களைக் கடந்து போனது.
இடை நின்ற பேச்சு தொடர்ந்து வளர்ந்தது.
தொ.ப “ குடிசாமிகளுக்கு தரப்படுகிற இரத்தப் பலி “
குறித்து சொல்லிக்கொண்டிருக்க
போன வண்டி திரும்பி வந்ததை யார் கண்டார் ?
“ டேய்.. “ என்கிற சத்ததிற்கு
கூட்டம் திசைக்கொன்றாய் சிதறி விட்டது.
எம்.கே.டி தன் பட்டுஜரிகை வேட்டியை
தூக்கிக்கட்டிக்கொண்டு ஒரு மூத்திரச் சந்திற்குள் ஓட
நமது யக்ஞவல்கியர் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டார்.
” ஏண்டா .. உங்களுக்கெல்லாம் வீடே கிடையாதா ..”
என்று கேட்கிறது போலீஸ்
ஐயா , நிஜமாகவே எங்களுக்கென்று ஒரு வீடில்லை.
வீடு எங்களை போலீஸில் பிடித்து தர
போலீஸ் எங்களை வீட்டிற்கு பிடித்துக் கொடுக்கிறது.
( ஜானுக்கு ...)
நன்றி : தி இந்து தீபாவளி மலர்