முதன்முதலாக காதல் நம்மை ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்கையில் செருப்பைக் கொஞ்சம் அலங்கோலமாக உதறிவிட்டேன். கடிந்து நீ சொன்னாய்.. "செருப்பு விடும் அழகிலிருந்தே வாழ்வின் ஒழுங்கு துவங்குகிறது..." அன்றிலிருந்து இரண்டு ரோஜாக்களை அருகருகே அணைந்து வைக்கப் பழகிக் கொண்டேன். சொன்னது நீ என்பதால் அதை அப்படியே நம்பி விட்டேன். விடாது வளர்த்துவருகிறேன் நம் ரோஜாக்களை இன்று வரை. நெடுங்காலம் கழித்து நேற்றுன்னை கடைவீதியில் கண்டேன். செருப்பைக் கொண்டு வாழ்வை ஒழுங்கு செய்ய முயன்ற சின்னஞ் சிறுமியே..! உன் பேதை நெஞ்சத்தழகு வாழ்வாங்கு வாழட்டுமென்று கூட்டத்துள் பதுங்கி ஒளிந்து கொண்டேன். |