இரண்டு நிமிடங்களுக்குப்
பொறுத்துக் கொள்ள முடியும் உன் பிரிவை.
ஒற்றைக் காலைப் பற்றி
சரளைக் கற்களின் மேல்
தரதரவென இழுத்துச் செல்கிறது உன் நினைவு.
தூதுக்கு ஆள் வேண்டும்.
அன்னமும் மேகமும் என் அன்பறியாது.
வாட்ஸ அப்பும், மேசஞ்சரும் முட்டாள் கழுதைகள்.
அவை வெறுமனே செய்திகளைச் சுமந்து செல்கின்றன.
எனக்கு என்னையே கொண்டு செல்லும் ஒன்று வேண்டும்.
முழந்தாளிடுகிறேன்
இன்னும் கொஞ்சம் காதல் செய்
இன்னும் கொஞ்சம் கருணை கொள்
இன்னும் கொஞ்சம் இரங்கு.
உன்னிடம் நீயே
தூதாகிச் செல்.