ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடித்து விட்டால்
என்னைக் கண்டுபிடித்து விடலாம்
5 வருடங்களுக்குள் என்னிடம்
13 பாஸ்வேர்டுகள் சேர்ந்து விட்டன.
நான்தான் உருவாக்குகிறேன் .
ஆனால்
அவைதான் என்னை மேய்க்கின்றன.
13 பாஸ்வேர்டுகளையும் மூளைக்குள் ஒளித்து வைத்தேன்
வழுக்கி வழுக்கி விழுந்தன.
பதிமூன்றையும் ஓரிடத்தில் ஒளித்து வைத்து
அதை ஒரு பாஸ்வேர்டால் ஒளித்தேன்
ஒன்றைத் திருடி விட்டால் 13 யும் திறந்து விடலாம்.
13 பாஸ்வேர்டையும் பறிகொடுத்து விடுவதென்பது
ஒரு ஜட்டி கூட இல்லாமல் நிற்பது.
எனவே
பதிமூன்றையும் பதிமூன்று இடங்களில் ஒளித்தேன்.
அந்தப் பதிமூன்று இடங்களையும்
ஓரிடத்தில் ஒளித்து வைத்தேன்.
எவனோ ஒரு கில்லாடி
அதையும் துப்பறிந்து தூக்கி விட்டால்?
நான் எவ்வளவு பெரிய கில்லாடி ?
13 இடங்களின் முதல் எழுத்தை மூளைக்குள்தான் ஒளித்து வைத்திருக்கிறேன்
அவை குழம்பி விடக்கூடாதென்று
ஒரு காகிதத்தில் ஒளித்திருக்கிறேன்.
அந்தக் காகிதத்தை
ஒரு தனியிடத்தில் ஒளித்திருக்கிறேன்.
இப்போது
நான் முழுவதுமாக மூடப்பட்டவன்.
என்னை ஆட்டவோ அசைக்கவோ இயலாது.
காலச்சுவடு : ஜனவரி -2020