இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு | (1321) |
அவர்மீது தவறே இல்லையாயினும் நாம் ஊட வேண்டும். அதை அவர் ஆற்ற வேண்டும். அந்த இன்பம் தனி.
ஊடல் தீர்வதில் ஒரு கிறக்கம் உண்டு. யாரேனும் நம்மை புகழ்ந்து புகழ்ந்து போற்றினால், கொஞ்சி கொஞ்சிப் பேசினால் , யாரேனும் நம் முன் மண்டியிட்டால், யாரேனும் நமக்காக கண்ணீர்விட்டால் நமக்கு ஜாலிதானே?
அளித்தல்- அருளுதல், அன்பு செய்தல்
அளித்தல்- அருளுதல், அன்பு செய்தல்
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் | (1322) |
ஊடலின் போது எழும் சின்னக் கோபத்தால் அன்பு குறைவது போல தெரிந்தாலும் அது நல்லதே.
அப்படி அன்பு குறையாது. இன்பம் இரட்டிப்பே ஆகும் என்பது குறிப்பு.
துனி- சீற்றம், வெறுப்பு
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து | (1323) |
நிலத்தொடு நீர் போல் இயைந்திருக்கும் காதலரிடம் ஊடி விளையாடுவதைக் காட்டிலும் புத்தேள் உலகம் வேறில்லை.
புத்தேள் உலகம் எனில் தேவலோகம். அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதால் "புதிய உலகம்"என்கிறது கலைஞர் உரை. "புத்தேள்"என்பதற்கு "புதுமை"என்கிற பொருளும் உண்டு. வள்ளுவர் "இறைவன்"என்று எழுதினால், கலைஞர் அதை "தலையானவன்"என்று பெயர்த்திருக்கிறார்.
இறுக அணைத்துக் கொள்ளும் படியான ஊடலில் உண்டு என் உள்ளத்தை உடைக்கும் படைக்கலன்கள்.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை | (1324) |
இறுக அணைத்துக் கொள்ளும் படியான ஊடலில் உண்டு என் உள்ளத்தை உடைக்கும் படைக்கலன்கள்.
ஊடலுக்குப் பின்னான அணைப்பில் ஆசை அதிகம் என்பதால் அது இறுகத்தான் அணைக்கும்.
புல்லி விடா- விடாத தழுவுதல்.
படைக்கலன்கள் என்பது ஊடலைத் தீர்ப்பதற்காக தலைவனால் சொல்லப்படும் கொஞ்சு மொழிகளை. அவை தலைவியின் உள்ளஉறுதியை குலைத்த பிறகுதானே ஊடல் கூடலாகிறது.
"பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை."என்று முன்பும் சொல்லியிருக்கிறார் அய்யன்.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து | (1325) |
தன் மீது தவறில்லையாயினும் தம் காதலியால் ஊடப்பட்டு அவளின் மெல்லிய தோள்களைச் சேராதிருப்பதிலும் ஒரு இன்பம் இருக்கவே செய்கிறது.
சேராதிருப்பதிலும் இன்பம் தரவல்லது ஊடல்.
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது | (1326) |
மேலும் மேலும் உண்பதைக் காட்டிலும், பசி பெருகிய பின் உண்பதே இனிதானது என்பது போல கூடலினும் ஊடல் இனிது.
"உண்டது அறல்"என்பதை அப்படியே பொருள் கொண்டு "செரிமானம் இனிது"என்கின்றன பல உரைகளும். நமக்கு ஒரு மாதிரி குமட்டிக் கொண்டு வருகிறது.
பசியில் ஒரு வேட்கையுண்டு. அது ஏக்கத்தின் தேனை ஊறி எழச்செய்வது. போலவே ஊடல் பொழுதிலும் கூடலுக்கான ஏக்கம் பெருகிய படியே இருக்குமல்லவா?
எனவே கூடலின் ஊடல் இனிது என்கிறார் அய்யன்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் | (1327) |
ஊடல் விளையாட்டில் யார் முதலில் தோற்கிறாரோ அவரே வென்றவர். அந்த வெற்றியை அடுத்து நிகழும் கூடலில் உணரலாம்
யாரால் ஊடலில் தாக்குப் பிடிக்க முடியவில்லையோ அவர் கீழிறங்கி வந்துவிடுவார். அப்போது அவர் தோற்றது போல தெரிந்தாலும் ஒரு பரிசு அவருக்குக் காத்திருக்கிறது. அது கலவிப் பொழுதில் வழங்கப்படும்.
காமத்துப்பால் "காமசூத்திரம்"இல்லையாயினும், அய்யனும் சில சூத்திரங்களைச் சொல்லவே செய்கிறார். அதிலொரு சூத்திரம் இது. யாருக்கு வேட்கை அதிகமோ அவருக்கே இன்பமும் அதிகம்.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு | (1328) |
நெற்றி வியர்த்து உப்பு உறையும்படியான ஒரு கூடலை மீண்டும் ஒரு முறை ஊடிப் பெறுவோமா?
சாதாரணக் கூடலில் அவ்வளவு இன்பம் தோன்றாதாம். அவ்வளவு காலமும் நீளாதாம். ஊடி அதன் பின் நிகழ்கிற கூடலில்தான் உப்பு விளையுமாம். அதுவே "hottest"என்கிறார் அய்யன்.
எப்போது வாசித்தாலும் அவ்வளவு இனிக்கிற உப்பு இது. "இரண்டு கால்"கட்டிலின் மீது ஒரு படமே ஓடுகிறது அய்யனே!
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா | (1329) |
ஒளியிழாய்! நீ ஊடிக் கொண்டே இரு. விடிய விடிய நான் அதைத் தீர்க்கும்படியாக இந்த இரவு நீண்டு கொண்டே இருக்கட்டும்.
இந்தப் பாடலுக்கான கலைஞர் உரை எனக்குப் பிடித்தமான ஒன்று..
"ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக."
"இரந்து நிற்கும் இன்பம்"என்கிற சொற்றொடர் கவிதையைச் சரியாகத் தொட்டுவிடுகிறது.
"ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக."
"இரந்து நிற்கும் இன்பம்"என்கிற சொற்றொடர் கவிதையைச் சரியாகத் தொட்டுவிடுகிறது.
ஒளியிழை- ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்தவள்
ஊடல் காமத்தில் ஒரு இன்பம். அந்த ஊடலின் பயன் அடுத்து நிகழும் கூடலே.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் | (1330) |
ஊடல் காமத்தில் ஒரு இன்பம். அந்த ஊடலின் பயன் அடுத்து நிகழும் கூடலே.
ஊடலே கூடல் சிறக்கத்தானே?
'ஊடலுக்கான இன்பமானது அந்த ஊடலை அளவறிந்து நீக்கி தம்முள் கூடி முயங்குவது 'என்கிறார் அழகர்.
முயக்கம்- தழுவல், புணர்தல்
அய்யன் கடைசி மூன்று அதிகாரங்களை ஊடலுக்கென்றே ஒதுக்கியிருக்கிறார்.
கவிதையில் "எண்ணி எண்ணி இன்புறத்தக்கது "என்று ஒரு வகையுண்டு. காமத்துப்பாலின் பல கவிதைகள் அத்தகையது.
'ஊடலுக்கான இன்பமானது அந்த ஊடலை அளவறிந்து நீக்கி தம்முள் கூடி முயங்குவது 'என்கிறார் அழகர்.
முயக்கம்- தழுவல், புணர்தல்
அய்யன் கடைசி மூன்று அதிகாரங்களை ஊடலுக்கென்றே ஒதுக்கியிருக்கிறார்.
கவிதையில் "எண்ணி எண்ணி இன்புறத்தக்கது "என்று ஒரு வகையுண்டு. காமத்துப்பாலின் பல கவிதைகள் அத்தகையது.
( திருவள்ளுவரின் காமத்துப்பாலும், இசையனார் உரையும் முற்றிற்று)
படங்கள் உதவி: செந்தில்குமார் நடராஜன்