படர் என்றாலும் துயரந்தான். தனிமையின் துயர் நிரம்பிய பாடல்களைக் கொண்ட அதிகாரம். தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் கடமை நிமித்தமாகச் சென்றிருப்பதால் அவனைப் பிரிவுத்துயர் அதிகம் வருத்தாது. காதலோடு பொருது அழிபவள் தனிமையிலிருக்கும் தலைவிதான். அவளுக்கே மிகுந்த துயரம். அந்தத் துயர் மிகுதியில் அவள் சொல்லும் பாடல்கள் இவை.
1191.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
தான் விரும்பும் காதலர் தன்னையும் விரும்பும் பேறு பெற்றவர்களுக்குத்தான் காமம் விதையில்லா பழத்தைத் போன்று சுவையானது.
தலைவன் அருகினில் இல்லை. தன்னை நினைப்பதாகவும் தெரியவில்லை. தான் மட்டுமே அவனை நினைந்து நினைந்து உருகிவருவதால் தனக்கு அந்தப்பேறு இல்லை என்பது குறிப்பு .
வீழ்தல்- விரும்புதல் காழ் – விதை, கொட்டை
1192.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
காதலர் ஒருவரையொருவர் அன்பு செய்வதாவது வாழ்விற்கு மழை போன்று இன்றியமையாததாகும்.
தனக்கு அந்த அன்பு கிடைக்கவில்லையாதலால் தான் மழை பொய்த்த மண் போன்று வாடி வருந்துகிறேன் என்பது குறிப்பு.
அளி- அன்பு, காதல், இரக்கம்
1193.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
தான் விரும்பும் தலைவனால் திரும்ப விரும்பப்படும் தலைவியர்க்கே இன்புற்று வாழ்வோம் எனும் செருக்கு தோன்றும்.
பெருமிதம் என்பது இப்போது பிரிந்திருந்தாலும் தலைவன் விரைவில் திரும்புவான். வந்தபின் மகிழ்ந்து வாழ்வோம் என்கிற பெருமிதமாம். அந்தப் பெருமிதம் தனக்கு வாய்க்க வழியில்லை என்கிறாள் தலைவி.
1194.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
தாம் விரும்பும் காதலர் அல்லாது பிறரால் விரும்பப்பட்டாலும் அது நல்வினைப்பயனில் சேராது.
காதல் அன்பு அல்லாது வேறு பிற அன்பால் என்னதான் பயன்? காதல் எங்கிருந்தோ வந்து நெஞ்சத்துள் ஆழ விழுந்துவிடுகிறது. அவ்வளவு இறுக்கமாக பற்றிக் கொள்கிறது . சமயங்களில் தாயன்பையும் காற்றில் பறக்கவிட்டு விடுகிறது.
காதல் இன்றளவும் ஒரு வினோதமான புதிர்தான். அதன் நிமித்தம் நிகழ்த்தப்படும் தற்கொலைகள், கொலைகள் ஆராய்ந்து நோக்க சிக்கலானவை . இதை எழுதிக்கொண்டிருக்கும் இப்போது தன் காதலுக்கு இடையூராய் இருந்ததற்காக சொந்த அக்காவைக் காதலனோடு சேர்ந்து தலையணையால் அழுத்திக் கொன்ற தங்கையின் கதையொன்று டி.வியில் ஓடுகிறது. தங்கை சிறுமி என்றே விளிக்கபடுகிறாள். அதாவது "மைனர்"
நமது உளவியல் வல்லுநர்கள் படாதபாடுபட்டு காதல் காமம் அன்றி வேறல்ல என்று ஒரு கூண்டிற்குள் அடைத்துவைக்க முயன்றாலும், சமயங்களில் அது அந்தக்கூண்டையும் உடைத்துக் கொண்டு பறந்துவிடுகிறது.
“கெழீஇயிலர்” என்கிற சொல்லிற்கு "நல்வினை இலர் "என்று பொருள் உரைக்கிறது அகராதி.
1195.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
நாம் விரும்பும் காதலர் நம்மை விரும்பவில்லையெனில் அதனால் என்ன இன்பம் விளைந்துவிடப் போகிறது?
தம்மை விரும்பாது தான்மட்டும் உருகி உருகி விரும்பும் அன்பிலும் ஒருவிதமான இன்பம் இருக்கத்தான் செய்கிறது போலும் அய்யனே? அந்த அன்பும் ஏதோ ஒன்றைச் செய்யத்தான் செய்கிறது போலும்?
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.
ஒருதலைக்காமம் இனிதன்று அது இனிதாக வேண்டுமெனில் காவடித் தண்டைப்போல இருபுறமும் பாரத்தில் ஒத்திருத்தல் வேண்டும்.
சமயங்களில் இருதலையைக் காட்டிலும் ஒருதலை இனிப்பானது. ஒருதலை புனைவின் மிதப்பில் பறப்பது. இருதலை பரவசங்களுக்கு மரத்துப்போய் எருமையைப் போல் பெருத்துவிடுகிறது . காதல் பெருமழையாகிப் கொட்டினாலும் அது தீவனம் மென்றபடியெ சிவனே என்றிருக்கப் பழகிவிடுகிறது சீக்கிரத்தில்.
“இதயம்முரளி” மட்டும் அப்படித் தயங்கித் தயங்கி நிற்கவில்லையெனில் இவ்வளவு இனியகீதங்கள் நமக்குக் கிடைத்திருக்குமா என்ன?
1197.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
என் பசலையும், நோவும் காண மாட்டானோ காமன்? அவன் என்னை மட்டும் வருத்தும் கயவன்
காமன் யோக்கியன் எனில் காதலர் இருவரிடமுமல்லவா விளையாட வேண்டும்? கடமையில் ஈடுபட்டிருக்கும் தலைவனிடம் அவன் சேட்டை பலிப்பதில்லை. எனவே தனிமையில் இருக்கும் தலைவியின் நெஞ்சத்துள் புகுந்து கொண்டு ஆட்டம் போடுகிறான்.
வேலை, பளு என்பதும், ஓய்வு, இனிமை என்பதும் எப்போதும் இல்லை. சமயங்களில் ஓய்வு தனிமை என்றாகி விடுகிறது. தனிமை நரகத்திற்கு இழுத்துச் சென்று விடுகிறது.
பருவரல்- பசலைபாய்தல் பைதல்- வருத்தம்
1198.
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
தன் காதலரிடமிருந்து இன்சொல் எதையும் பெறாத போதும் தொடர்ந்து உயிர் வாழும் கொடியவரைக் காட்டிலும் கொடியவர் வேறு யாருமில்லை.
"வன்கணார் "என்னும் சொல்லிற்கு கொடியவர் என்று பொருள். "கல் நெஞ்சம் உடையார்"என்கிறது கலைஞர் உரை. இங்கு அதுவும் ஏற்புடைத்தே..
அழகர் இந்த இன்சொல்லை தூதுச்சொல்லாகக் காண்கிறார். தலைவனிடமிருந்து நம்பிக்கை ஊட்டும் விதமாக நல்ல செய்தி ஏதும் வராத போதும் தொடர்ந்து உயிர்வாழும் கொடியவள் என்று தன்னைத் தானே முனிந்து கொள்கிறாள் தலைவி.
1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
என் காதலர் விரைவில் திரும்பி வந்து என்னை காதல் செய்ய மாட்டாரெனினும் அவரிடமிருந்து வருகிற எந்த ஒரு சொல்லும் எனக்கு இனிதே
"அவர் வாரார்"என்ற சொல்லாவது வரட்டும். கொடிய பிரிவில் தவிக்கும் தனக்கு இப்போது அது கூட இன்பமே என்பது போல் சொல்கிறது அழகர் உரை.
"இசையும் இனிய செவிக்கு"என்பதை காதலரைப் பற்றிய புகழுரைகள் தனக்கு இன்பமானவை என்பதாகவும் பொருள் சொல்கின்றன சில உரைகள்.
நசை – விருப்பம்
1200.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
உன் நினைப்பற்ற கொடியவருக்கு நீ உற்ற நோயை உரைப்பதைக் காட்டிலும் ஒரு கடலைத் தூர்ப்பது எளிது என் நெஞ்சே!
"வாழிய நெஞ்சே! "என்பது இங்கு வாழ்த்தல்ல. அதன் மடமையை இடித்துரைப்பதாகும். "பொழப்பு கெட்ட வேல"என்பது இதன் கொச்சை வழக்கு.
கடலைக் கூட தூர்த்து விடலாம் ஆனால் அவள் துயரை உரைத்துவிட இயலாது. ஏனெனில் இப்போது தலைவன் காதலுக்குச் செவிடாகி, கடமையில் காதலாகி நிற்கிறான்.
"தனி"என்கிற சொல்லின் மீது மொத்த அதிகாரமும் அமர்ந்திருக்கிறது. இருவரும் காதலிருக்கிறோம் ஆனால் துயரமென்னவோ எனக்கு மட்டும்தான் என்கிற தலைவின் கழிவிரக்கக் குரல் எல்லாப் பாடல்களிலும் எதிரொலிக்கக் காண்கிறோம். இந்த வகையில் இந்த அதிகாரத்திற்கு அவசியமுண்டுதான் என்றாலும் பாடல்கள் எதுவும் என்னளவில் சுவையானவை அல்ல. கடைசிப் பாடலைத்தான் கவிதை என்று சொல்லலாம். மற்ற பாடல்களில் அதன் இசையை வேண்டுமானால் இரசிக்கலாம்.
வள்ளுவரும் ஓப்பியடித்திருக்கிறார் என்பதைச் சொல்ல முனைந்தால் ஒருவேளை நான் ஆசிட் வீச்சுக்கு ஆளாக நேரலாம்.
படங்கள் உதவி: செந்தில்குமார் நடராஜன்