நம் பேச்சிற்கிடையே
சட்டென
குறுக்கே வந்துவிழும்
ஒரு துண்டுக் குயிலோசை.
சமயங்களில்
நீட்டி முழக்கி கச்சேரி செய்து கொண்டிருக்கும்.
அது ஒரு மங்கலம்
அது ஓர் ஆசிர்வாதம்
அது நம் ஆண்ட்ராய்டுகளை
வனஉயிரி ஆக்கிவிடும்.
நாம் பச்சைகொழித்துப் போவோம்.
மண் மணந்து
மழை சடசடக்கும்.
குயில் காட்டிலிருந்து
எழுந்து வரும் மாருதம்
என் கேசத்தை
அலையலையாய்ச் சிலுப்பிவிடும்.
உன் தலைக்கு மேலே
வானவில்லின் உதயக்காட்சி .
பருவம் திரிந்து விட்டது.
குயில் மறைந்துவிட்டது.
இன்று
மொட்டை வெய்யிலின் கீழ்
இரண்டு மூளி மரங்கள்.
அதன் சுள்ளிக் கிளைகளில்
நெஞ்சடித்த ஒப்பாரி.