வஞ்சிபாளையத்தை
ஊடறுத்து நீண்டு செல்கிறது ஒரு ப்ராட்கேஜ்
அதன் ஒரு இறக்கத்தில் வீற்றிருக்கிறாள்
வெக்காளியம்மன்.
துருத்திய நாக்கு
கனலெறி விழி
மூவிலைச் சூலமேந்தி
உக்கிரக் கோலத்தி.
சக்திகளில் மகாசக்தி.
அன்னையருள் பேரன்னை.
அகிலாண்ட நாயகியால்
ஆகாததொன்றுமில்லை.
செவ்வாய், வெள்ளி விசேஷம்
நெரிசல் மிகுதி.
இப்படி
தண்டவாளமும், வெக்காளியம்மனும்
அருகருகே இருப்பதில் ஒரு சிக்கல்
இன்று
எது கடவுள் என்பதில்
சிறுகுழப்பம் நேர்ந்துவிட்டது ஒருவனுக்கு
நீட்டிப்படுத்துவிட்டான் குறுக்கே.