"நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த காளான்"என்று யாரோ யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்கள்.
முளைத்தது முளைத்ததுதானே?
சின்ன மாவுத்தண்டுதான் என்றாலும்
அதற்கும்
கொஞ்சம் மண் வேண்டுமல்லவா?
அதற்கும்
கொஞ்சம் ஒளி வேண்டுமல்லவா?
அதற்கும்
கொஞ்சம் காற்று வேண்டுமல்லவா?
மாட்டுக் குளம்பில் படும்வரை
அதுவும்
கொஞ்சம் வாழ வேண்டுமல்லவா?