சிறியமலருக்கு
எட்டு ராட்சத டயர்கள்
மந்தரித்த கயிரில் தொங்கும் ஒரு எலுமிச்சை வேறு
எருமைக் கூட்டமொன்று அதன் மேல் நிற்கிறது
அந்த வழியே போன கவிஞன்
பற்றி எரியும் குடிசையைக் காண்பதைப் போல்
இதைக் காண்கிறான்
இப்படித்தான் அவன்
நாய்கடிக்கு ஊசி போடப் போன இடத்தில்
கணவனால் கடித்து வைக்கபட்ட
லில்லிபுஷ்பத்தைத் கண்டான்
லில்லிபுஷ்பத்தை
கடித்து வைக்கும் உலகத்தில் வாழ்ந்து வருவதை
எண்ணி எண்ணிக் குமைந்தானவன்.
லில்லிபுஷ்பம் தன்னை லில்லிபுஷ்பம் என்றறியாததால்
கணவனுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்க
மருந்தக வரிசையில் நிற்கிறாள் .
சிறியமலர்
தானொரு சிறிய மலரென்று அறிந்து கொண்டால்
மீனைச் சுமக்க முடியாதென்று
பாதியில் நின்று விடாதா?