அன்று வீசிய காற்றிற்கு என்னடி பெயர்?
நம்மை
முன்பின் இருக்கைகளில் இருத்தியது எது?
வெறும் பேருந்துதானா அது?
பறந்தெழுந்தாடி
என் கைகளில் படிகிறது
உன் ஒரு கற்றைக் குழல்.
விருட்டென என்னைப் பின்னிழுத்தேன்.
அன்னையின் பிடிவிடுத்துத் திமுறும் பிள்ளையை
பிடித்து நிறுத்துவதென
திரும்பவும் வந்து படிகிறது
உன் ஒரு கொத்து அருள்.
இப்போது தொட்டேன்.
இதுவரை
இவ்வளவு மிருதுவாக இன்னொன்றைத் தொட்டதில்லை.
அந்தக் கூந்தல் என்னிடத்திருக்கிறது.
கூடவே திரிவோனால்
தொட்டுவிட முடியாத தூரத்திலிருக்கிறது.