இந்த அதிகாலையில்
இல்லாத செல்போனில்
பேசிக் கொண்டிருக்கிறான் ஒருவன்
மறுமுனையில் யாரென்று அவனே அறிவான்.
அல்லது
அவனும் அறியான்.
"வாங்கிட்டே...வாங்கிட்டே..பீடி வாங்கிட்டேன்.."
"ஆமாமா...நாம மருதமல போன போது..."
"யேய்...அம்ப வச்சு செரைக்க கூட முடியாது.."
"யாருமேல சத்தியம் பண்ணணும் சொல்லு..யாரு மேல"
"அத்தனையும் தங்கம், வைரம், வைடீரியம்.."
சிலர் கூடி நின்று
அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் பார்த்துப் பார்த்துக் கடக்கிறார்கள்.
அப்படி
உற்று உற்றுப் பார்க்காதீர் உலகத்தீரே!
தீடீரென
அவனில் நம் சாயை தோன்றி
இந்த நாளில் சித்தம் கலங்கிவிடக் கூடும்.